சிறப்புக் களம்

ஒரேயடியா உயரப் போகுது பெட்ரோல் விலை

ஒரேயடியா உயரப் போகுது பெட்ரோல் விலை

webteam

கர்நாடக தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கடந்த 17 நாட்களுக்கும் மேலாக எப்போதும் இல்லாத அதிசயமாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஏன் இந்தத் திடீர் முடிவு என எண்ணெய் நிறுவனங்களை கேட்ட போது, மக்கள் நலனை கருத்தில் கொண்டு இது போன்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றனர். அதில் உண்மை இருக்கிறதா என ஆராயும் முன்பு, பல்வேறு இக்கட்டான சூழல்களில் மக்கள் நலன் கருதி எண்ணெய் நிறுவனங்கள் செயல்பட்டுள்ளனவா என்பதை கேட்டால் இல்லை என்பதே விடை. 

கச்சா எண்ணெய் விலையை அடிப்படையாகக் கொண்டு இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் விலையை நிர்ணயிக்கின்றன. கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால் பெட்ரோல், டீசல் விலையும் உயரும். கடந்த ஆண்டு ஜூலைக்கு முன்பு வரை 15 நாட்களுக்கு ஒரு முறை பெட்ரோல் , டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வந்தது. விலை நிர்ணயிக்கப்படும் நாளுக்கு முந்தைய நாள் இரவு லிட்டர் லிட்டராக வண்டிகளில் நிரப்பியவர்கள் உண்டு. ஏனெனில் பெரும்பாலும் விலை உயர்ந்து கொண்டே இருக்கும். 

ஒரு கால கட்டத்தில் இப்படி இருந்த விலை நிர்ணயம் தினசரியாக மாற்றப்பட்ட பின், 2 மாதம் வரைக்கும் ஏறுவதும், இறங்குவதுமாக இருந்தது. ஆனால் இப்போதெல்லாம் ஒரே ஏறுமுகம்தான். 80 ரூபாயை தாண்டி, 100 ரூபாயை தொட்டு விடும் போல. இந்நிலையில் தான் தேர்தல் ஆணையம் கர்நாடக தேர்தலை அறிவித்தது. பரப்புரை சூடு பிடிக்க ஆரம்பிக்க, பெட்ரோல், டீசல் விலை ஏறவும் இல்லை, இறங்கவும் இல்லை. பலருக்கும் சந்தேகம். இதற்கு கர்நாடகா தேர்தலே காரணம் என்றன எதிர்கட்சிகள். 

தேர்தலோ, மக்கள் நலனோ எதுவாக இருந்தாலும் பெட்ரோல் விலை உயராதது பலருக்கும் கொஞ்சம் மகிழ்ச்சியான செய்தியாக இருந்தது. இந்நிலையில்தான் கர்நாடகா தேர்தல் நாளை நடைபெற இருக்கிறது. கர்நாடகா தேர்தல் முடிந்த அடுத்த நாள், அதாவது 13-ம் தேதி காலை 6 மணி முதல் உயரப் போகிறது பெட்ரோல்,டீசல் விலை என தகவல் வெளியாகி இருக்கிறது. பைசாவில் உயர்த்தபட்டு வந்த விலை ரூ.1.50 வரை உயரும் என்பது பல வல்லுநர்களின் கணிப்பு.  ஏனெனில் கச்சா எண்ணெய்யின் தற்போதைய விலை அப்படி.