சிறப்புக் களம்

வயசானாலும் சிங்கம் சிங்கம்தான்... வெளுத்து வாங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ்

வயசானாலும் சிங்கம் சிங்கம்தான்... வெளுத்து வாங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ்

webteam

11வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இல்ல இல்ல திருவிழான்னுதான் சொல்லணும். ஆமாங்க ஐபிஎல் திருவிழா கோலாகலமா தொடங்கி லீக் சுற்று போட்டியெல்லாம் விறுவிறுப்பாக நடந்துக்கிட்டு வருது. 2வருட தடைக்கு அப்புறம் சென்னை அணி களமிறங்குனதால ரசிகர்கள் உற்சாகத்துல இருக்காங்க.

ஐபிஎல் போட்டி தொடங்குறதுக்கு முன்னாடி சென்னை டீம் மேல பயங்கர விமர்சனம். இது என்னடா சென்னை சூப்பர் கிங்ஸ்ஸா இல்ல சென்னை சீனியர் கிங்ஸ்சானு ஒரே கலாய். ஏன்னா டீம்ல இருக்க முக்கியமான ப்ளேயர்ஸ் எல்லாமே 30ப்ளஸ். தோனி, பிராவோ, வாட்சன், ஹர்பஜன், ரெய்னா, இம்ரான் தாஹீர், அம்பத்தி ராயுடு என சீனியர் பட்டாளங்கள். ’டீமை பார்த்தா சூப்பர் சிங்கம் மாதிரி தெரியலையே, சீனியர் சிங்கம் மாதிரில இருக்காங்க’ என நெட்டிசன்கள் வறுத்தெடுத்தனர். சென்னை ரசிகர்கள் பதிலுக்கு ஓல்ட் இஸ் கோல்ட்.. சீனியர்ஸுக்குதான் அனுபவம் அதிகம் என பதிலுக்கு கமென்ட் போட்டனர். என்னதான் கமென்ட் போட்டாலும் அவங்களுக்கும் உள்ளுக்குள் லைட்டா உதறலா இருந்திருக்கும். 

முதல் போட்டி முன்னாள் சாம்பியனான மும்பை அணிகூட முதல்ல பேட்டிங் செய்த மும்பை 20 ஓவர்ல 4 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது. சென்னைக்கு ஆரம்பத்துலயே அதிர்ச்சி காத்திருந்தது. ஷேன் வாட்சன்16 ரன், அம்பத்தி ராயுடு 22 ரன், சுரேஷ் ரெய்னா (4), கேப்டன் டோனி (5 ரன்), ஜடேஜா (12 ரன்) என யாரும் தாக்குப்பிடிக்கலை. மெதுவாக ஆடிக்கொண்டிருந்த கேதர் ஜாதவ், காயம் காரணமா வெளியேற, சென்னை அணி முதல் போட்டியிலேயே முக்காடு போட்டுடும்னுதான் எல்லாரும் நினைச்சாங்க.

ஆனா பிராவோ ஒத்தையா களத்துல போராடினார். நம்ம காலா ட்ரெய்லர்ல ரஜினி, ‘வேங்க மவன் ஒத்தையில நிக்கேன், மொத்தமா வாங்கல’ன்னு சொல்ற மாதிரி வெளுத்து எடுத்தார் பிராவோ. மேக்லஹென் வீசிய  18 ஓவர்ல சிக்சரும் பவுண்டரியுமா விளாசிய பிராவோ, அடுத்து 19-வது ஒவரை வீசிய யார்கர் ஸ்பெஷலிஸ்ட் பும்ரா பந்தில் 3 சிக்சர்களை பறக்கவிட்டு மிரட்டினார். இந்தப் போட்டியில் சீனியர் ப்ளேயர் பிராவோவால சென்னை அணி முத்தான முதல் வெற்றியை பதிவு செஞ்சது.

அடுத்து சென்னையில நடந்த இரண்டாவது போட்டியில டாஸ் வென்ற சென்னை அணி, முதல்ல பவுலிங்கை தேர்வு செஞ்சாங்க. அதன்படி முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி, 20 ஓவர்கள்ல 6 விக்கெட் இழப்புக்கு 202 ரன்களை குவித்தது. இதைத்தொடர்ந்து களமிறங்குன சென்னை அணி ஆரம்பத்தில் இருந்தே சிறப்பா விளையாடியது. சீனியர் வீரர் வாட்சன் - அம்பத்தி ராயுடு ஜோடி நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தியது. வாட்சன் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 19 பந்துகளில் 42 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இந்தப்போட்டியில்  ஷாம் பில்லிங்ஸ் அதிரடி காட்டி வெற்றியை எளிதாக்கினார். கடைசியில நம்ம ஜட்டு ஒரு மெகா சிக்ஸர் அடிச்சு, மேட்சை ஸ்மூத்தா முடிச்சு வைச்சார்.

அடுத்து  மூன்றாவது போட்டியில முதல்ல பேட்டிங் செய்த கிங்ஸ் லெவன் பஞ்சாப், 197 ரன்கள் குவித்தது. இந்தப்போட்டியில் சென்னை அணி  தோற்றாலும் தல தோனி களத்துல கெத்து காட்டினார். 79 ரன் நாட் அவுட். கடைசி பால்ல சிக்ஸர் தூக்கி தோனிடான்னு ரசிகர்கள சொல்ல வெச்சாரு. தோற்றாலும் தோனியின் மிரட்டலான இன்னிங்ஸ்ல எல்லாம் மறந்து போச்சு. இந்த மேட்ச்ல தல தோனி 5 சிக்ஸர், 6 பவுண்டரின்னு வெளுத்து வாங்கியிருந்தார். இந்தப் போட்டியில காயம் காரணமா, ’சின்ன தல’ ரெய்னா விளையாடல.

நான்காவது போட்டி ராஜஸ்தான் அணிக்கு எதிரானது. சென்னை அணி 204 ரன்கள் அடிச்சு வெளுத்துட்டாங்க. இந்தப் போட்டியில் வாட்சன் ருத்ரதாண்டவம் ஆடினார். அதிரடி சரவெடியா வெளுத்த வாட்சன் சதமடிச்சாரு. அவர், 57 பந்துகளில், 9 பவுண்டரி, 6 சிக்சர்களுடன் 106 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.  காயத்துல இருந்து மீண்டு வந்த ரெய்னாவும் இந்தப் போட்டியில் பட்டய கிளப்புனாரு. ராஜஸ்தான் 140க்கு ஆல் அவுட் ஆனது. இதுல பவுலர்சை பாராட்டியே தீரணும். தீபக் சாஹர், தாகூர், கரண் ஷர்மா, பிராவோ தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி சென்னை அணிக்கு வெற்றியை தேடி கொடுத்தாங்க.

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான விறுவிறுப்பான போட்டி கிரிக்கெட் ரசிகர்களுக்கு சண்டே ஸ்பெஷலாக அமைஞ்சது. முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி அம்பத்தி ராயுடு, ரெய்னா ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தில் 3 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் குவித்தது. இந்தப்போட்டியில் தொடக்க வீரர்களான ஷேன் வாட்சன் 9 ரன்களிலும், பாப் டூ பிளஸ்ஸி 11 ரன்லயும் அவுட் ஆயிட்டாங்க. சென்னை அணி 9 ஓவர்ல 50 ரன்னுக்குள்ளதான் இருந்தது. அப்போ இருந்த ரன்ரேட் வெச்சு பார்த்த 120 தான் அடிக்கும் என எல்லாம் எதிர்பார்த்து இருந்தாங்க. ஆனா டைம் அவுட்டுக்கு அப்புறம் அம்பத்தி ராயுடு மிரட்டிட்டார். ரெய்னா, ராயுடுவுக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார். இவங்க அடிச்ச அடியில தான் ரன் ரேட் எகிறியது. 3‌7 பந்துகளில் 79 ரன்கள் விளாசி ராயுடு விக்கெட்டை இழந்தார். ரெய்னா 43 பந்துகளில் 53 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 

183 ரன்கள் என்ற வெற்றி இ‌லக்குடன் வந்த ஹைதராபாத் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி. ரிக்கி பூய், மணீஷ் பாண்டே இரண்டு பேரும் ரன் எதுவும் எடுக்காம திரும்பினாங்க. தீபக் ஹூடா 1 ரன்ல அவுட். தீபக் சாஹர் அடுத்தடுத்து செக் வெச்சாரு. சரி அவ்ளோதான் ஐதராபாத்னு நெனச்சா, கேப்டன் கேன் வில்லியம்சன் பொறுப்பா ஆடிட்டு ரன் சேர்த்தார். யூசுப் பதானும் முதல்ல தடுமாறினார். திடீர்னு ஒரு கட்டத்துல ரெண்டு பேரும் சென்னை பவுலிங்கை அடிச்சு வெளுக்க ஆரம்பிச்சுட்டாங்க.

கடைசி ஓவரில் 19 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை சீனியர் வீரர் பிராவோ வீசினார். முதல் பந்தில் ரன் இல்ல. 2 வது பந்தில் 2 ரன், 3வது பந்தில் ஒரு ரன், 4வது பால் சிக்ஸர்... மொத்த ஸ்டேடியமும் சீட்டு நுனிக்கு வந்தாச்சு. 5 வது பந்து பவுண்டரிக்கு பறக்க விட்டார் ரஷித் கான். இதனால மேலும் பரபரப்பு. கடைசி பந்தில் 6 ரன்கள் எடுத்தா வெற்றி. பல பேருக்கு ஹார்ட் அட்டாக்கே வர்ற மாதிரி இருந்திருக்கும். ஆனா கடைசி பந்தை சிறப்பா வீசிய பிராவோ ஒரு ரன் மட்டுமே விட்டுக்கொடுக்க, சென்னை அணி 4 ரன் வித்தியாசத்துல த்ரில் வெற்றி பெற்றது. 

இந்தப் போட்டிகள்ல பெற்ற வெற்றியில் சீனியர் வீரர்களின் பங்கு அளப்பரியது. அனுபவமும் பல்வேறு இக்கட்டான சூழ்நிலைகளை கையாண்டதுமே அவர்களுக்கு தற்போது உதவுகிறது. சீனியர்கள் வழிக்காட்டுதலின் படி இளங்சிங்கங்களும் பட்டயக் கிளப்பி வருகின்றன. விமர்சனங்களுக்கு இடம் அளிக்காமல் மிரட்டி வருகிறது சென்னை அணி. வயசானலும் சிங்கம் சிங்கம்தான்.