சிறப்புக் களம்

நோபல் பரிசு வென்ற பெண்கள் எத்தனை பேர் தெரியுமா?: புதிய சர்ச்சை

நோபல் பரிசு வென்ற பெண்கள் எத்தனை பேர் தெரியுமா?: புதிய சர்ச்சை

webteam

நோபல் பரிசு - உலகின் மிக உயரிய விருதுகளில் ஒன்று. ஆண்டுதோறும் யாரெல்லாம் இந்தப் பரிசை வெல்லப்போகிறார்கள் என உலகமே உற்று நோக்கும். பரிசை பெறுபவர்களுக்கும் அவர்கள் சார்ந்திருக்கும் நாட்டிற்கும் மிகப்பெரிய கவுரவத்தை அளிக்கும் நோபல் பரிசை இதுவரை எத்தனை பெண்கள்  பெற்றுள்ளனர் எனக் கணக்கிட்டால் நமக்கு அதிர்ச்சியான தகவலே கிடைக்கிறது. 1901ஆம் ஆண்டில் இருந்து 2017ஆம் ஆண்டு வரை 892 பேர் நோபல் பரிசு பெற்றுள்ளனர். இவர்களில் பெண்களின் எண்ணிக்கை வெறும் 48தான். குறிப்பாக அறிவியல் துறையில் மிக சொற்பமான பெண்கள்தான் பரிசு பெற்றுள்ளனர்.  

நோபல் பரிசுப் பெற்ற முதல் பெண்

1903ஆம் ஆண்டு இயற்பியல் துறையில் நோபல் பரிசுப் பெற்று முதல் நோபல் பரிசுப் பெற்ற பெண் என்ற பெருமையை மேரி கியூரி பெற்றார். அதனைதொடர்ந்து 1911ஆம் ஆண்டு வேதியியல் துறையில் இரண்டாவது முறையாக இவருக்கு நோபல் வழங்கப்பட்டது. 1963ஆம் ஆண்டு மேரி கியூரியின் மகள், மரியா ஜியோபெர்ட் மேயர் (MARIA GEOPPERT MAYER) இயற்பியல் பிரிவில் நோபல் பரிசு பெற்றார். 

* 1901இல் இருந்து இயற்பியல் துறையில் 111 நோபல் பரிசுகள்,  207 பேருக்கு அளிக்கப்பட்டுள்ளன. இதில் 2 பேர் மட்டுமே பெண்கள்.

* வேதியியல் பிரிவில் 109 நோபல் பரிசுகள் 178 பேருக்குவழங்கப்பட்டுள்ளது. அதில் 4 பேர் மட்டுமே பெண்கள். 

* மருத்துவத் துறையில் 108 பரிசுகள் 214 பேருக்கு அளிக்கப்பட்டுள்ளன. இதில் 12 பேர் மட்டுமே பெண்கள். 

* இலக்கியத்துறையில் 110 பரிசுகள், 114 பேருக்கு வழங்கப்பட்டுள்ளன. இதில்  14 பெண்கள் பரிசு பெற்றுள்ளனர். 

* அமைதிக்கான பிரிவில் 98 நோபல் பரிசுகள், 131 பேருக்கு வழங்கப்பட்டுள்ளன. இதில் 16 பேர் பெண்கள். இவர்களில் இந்தியாவில் சேவை செய்ததற்காக அமைதிக்கான நோபலை பெற்றவர் அன்னை தெரசா.

* 1969 ஆம் ஆண்டு முதல்தான் பொருளாதார அறிவியலுக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது. இதுவரை 49 நோபல் பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன. பரிசு பெற்ற 49 பேரில் ஒருவர் மட்டுமே பெண்.
 
அறிவியல் துறைகளில் மிகக் குறைவு

நோபல் பரிசுப் பெற்ற 48 பெண்களில் 30 பேர் இலக்கியத்திற்காகவோ அல்லது அமைதிக்காகவோதான் பரிசு பெற்றுள்ளனர். இயற்பியல், வேதியியல் மற்றும் மருத்துவத் துறைகளில் நோபல் பரிசு வென்ற பெண்களின் எண்ணிக்கை மிக சொற்பம். பொருளாதாரத்திற்கான பரிசையும் ஒரு பெண் மட்டும் தான் பெற்றுள்ளார்.

அறிவியல் துறைகளில் பெண்கள் பெரும்பாலும் நோபல் பரிசுக்குப் பரிந்துரைக்கப்படுவதில்லை எனச் சொல்லப்படுகிறது. பெண்களின் ஆய்வுகள் பெரிய அளவில் வெளியுலகை அடைவதில்லை எனக் கூறும் ஆர்வலர்கள் பரிந்துரைகளில் இருந்தே மாற்றத்தை கொண்டு வர வேண்டும் எனக் கூறுகின்றனர். பல நேரங்களில் ஆய்வுகளில் பெரும்பங்காற்றி இருந்தாலும், அதில் இடம் பெற்றுள்ள ஆண்களுக்கே பரிசு வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதற்கு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த Jocelyn Bellஐ உதாரணமாகக் கூறுகின்றனர். பல்சர்கள் தொடர்பான ஆய்வில் அவரது பங்கு முக்கியமானதாக இருப்பினும், ஆய்வைக் கண்காணித்த Antony Hewishக்கு தான் பரிசு வழங்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

விதிமுறைகளை மாற்ற யோசனை

நோபல் பரிசுகளை இறப்புக்குப் பிறகு கூட அறிவிக்கலாம் எனக் கூறும் ஆர்வலர்கள், ஒரு பரிசை தற்போது மூன்று பேர் மட்டுமே பகிர முடியும் என்ற விதிமுறையையும் தளர்த்தலாம் என யோசனை கூறுகின்றனர். அந்த வழிகளில் பரிசுப் பெறுவதில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க முடியும் எனச் சொல்லப்படுகிறது. இதனிடையே பரிந்துரைகளில் பெண்களின் பெயர்களையும் சேர்க்க அறிவுறுத்தியுள்ளதாக கூறும் நோபல் பரிசுக்கான அமைப்பு, வரும் ஆண்டுகளில் அதிகளவிலான பெண்கள் பரிசுப் பெறுவார்கள் என நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.