பீகாரில் மட்டுமல்லாமல் இந்திய அரசியலிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிதிஷ் குமார், அரசியலில் கடந்து வந்த பாதையை தற்போது பார்க்கலாம்.
மத்திய அமைச்சராகப் பணியாற்றியவர், முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி அமல்படுத்திய நெருக்கடி நிலைக்கு எதிராக நாடு முழுவதும் கிளர்ந்தெழுந்த மக்களை ஒருங்கிணைத்து, மாபெரும் போராட்டத்தை முன்னெடுத்த ஜே.பி. என்று அழைக்கப்படும் ஜெய்பிரகாஷ் நாரயணனால் ஈர்க்கப்பட்டு, அரசியலில் நுழைந்தார் நிதிஷ் குமார்.
பொறியியல் பட்டதாரியான அவர், முதன் முறையாக 1977 ஆம் ஆண்டு பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் ஜனதா கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டார். படிப்படியாக வளர்ந்து 1989 ஆம் ஆண்டு ஜனதா தளத்தின் பீகார் மாநில பொதுச்செயலாளராக நிதிஷ் குமார் பொறுப்பேற்றார். தனித்திறமையால் ஜனதா தளத்தின் தேசிய பொதுச்செயலாளராக அவர் உயர்ந்தார்.
வி.பி சிங் மற்றும் வாஜ்பாய் ஆகியோர் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் பணியாற்றிய அனுபவம் அவருக்கு உண்டு. வாஜ்பாய் அரசில் ரயில்வே துறையை கவனித்த நிதிஷ்குமார், 1999 ஆம் ஆண்டு கய்சல் ரயில் விபத்துக்கு பொறுப்பேற்று பதவி விலகினார். 2000 ஆம் ஆண்டில் பீகார் முதலமைச்சராக பொறுப்பேற்ற நிதிஷ் குமார், சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் ஏழே நாட்களில் பதவியிழந்தார்.
2005 ஆம் ஆண்டு பீகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தலைமையேற்று சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொண்ட அவர், லாலு பிரசாத் தலைமையிலான ராஷ்டிரிய ஜனதா தளத்தின் 15 ஆண்டுகால ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தார். பீகாருக்கு ஏற்றம் தரும் வகையில் பல சீர்திருத்தங்களை மேற்கொண்டதற்கு பரிசாக 2010 ஆம் ஆண்டு தேர்தலிலும் நிதிஷ் குமாரையே தங்களது முதலமைச்சராக பீகார் மக்கள் தேர்வு செய்தனர்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக மோடி முன்னிறுத்தப்பட்டதால், கூட்டணியில் இருந்து விலகி தனியாக களம் கண்ட ஐக்கிய ஜனதா தளம் தோல்வியடைந்தது. தோல்விக்குப் பொறுப்பேற்று முதலமைச்சர் பதவியை நிதிஷ் குமார் ராஜினாமா செய்தார். பின்னர் முதலமைச்சராக பொறுப்பேற்ற ஜிதன் ராம் மாஞ்சி மீது அதிருப்தி அதிகரிக்க, பெரும்பான்மை எம்.எல்.ஏக்களின் வேண்டுகோளை ஏற்று மீண்டும் முதலமைச்சராக அவர் பொறுப்பேற்றார். பீகாரில் பாஜகவின் எழுச்சிக்கு அணை போட, சட்டப்பேரவைத் தேர்தலில் அரசியல் எதிரியாக இருந்த லாலு பிரசாத் மற்றும் காங்கிரசுடன் கைகோர்த்து மகா கூட்டணியை உருவாக்கினார் நிதிஷ்குமார்.
லாலு பிரசாத்துடனான மோதலில் நேற்று மாலை முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த நிதிஷ் குமார், இன்று காலை மீண்டும் முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.