சிறப்புக் களம்

நாள்பட்ட இடுப்புவலியால் அவதிப்படுகிறவரா? இந்த இயற்கை வழிகள் உங்களுக்கு உதவலாம்!

நாள்பட்ட இடுப்புவலியால் அவதிப்படுகிறவரா? இந்த இயற்கை வழிகள் உங்களுக்கு உதவலாம்!

Sinekadhara

இடுப்புவலியானது மிகவும் அசௌகர்யத்தை கொடுக்கக்கூடிய, மருத்துவரை தேடவைக்கக்கூடிய வலிகளில் ஒன்று. உலகளவில் பெரும்பாலானோர் இதனால் அவஸ்தைக்குள்ளாகி வருகின்றனர். விபத்து காயம், உடலுழைப்பு மற்றும் சில மருந்துகளால் இடுப்பு வலி ஏற்படுகிறது. அனைத்து வயதினருக்கும் இடுப்பு வலி வருமென்றாலும், வயதாக ஆக இதன் தாக்கம் அதிகரிக்கத்தான் செய்யும். இடுப்பு வலி என்பது பெரும்பாலும், தசைநார்கள் மற்றும் தசைகள், மூட்டுகள், முதுகெலும்பு இணைப்புகள், நரம்புகளில் வலி ஏற்படுவதை குறிப்பிடுகிறது. சில நேரங்களில் வயிற்றுப்பகுதி உறுப்புகளான சிறுநீரகம் போன்றவற்றில் ஏற்படும் பிரச்னைகளாலும் வலி ஏற்படுகிறது.

அறிகுறிகள்

தசை வலியில் ஆரம்பித்து எரிச்சல், குத்துதல் போன்ற உணர்வு வரை இடுப்பு வலியானது உணரப்படுகிறது. மேலும் வலியானது இடுப்பிலிருந்து கால் வரையும் செல்கிறது. வளைத்தல், முறுக்குதல், தூக்குதல், நிற்றல் அல்லது நடத்தல் போன்ற செயல்பாடுகள் வலியை மேலும் மோசமாக்கும்.

  • கிட்டத்தட்ட ஒருவாரத்திற்கும் அதிகமாக வலி இருக்கும்
  • ஓய்வெடுப்பதால் இடுப்பு வலி குறையாது
  • வலியானது இடுப்பிலிருந்து ஒரு கால் அல்லது இரண்டு கால்களுக்கும் பரவுகிறது
  • பலவீனம், உணர்ச்சியின்மை மற்றும் கூச்ச உணர்வு போன்றவை இருக்கும்
  • திடீரென உடல் எடை குறைவதும் இடுப்பு வலிக்கும் தொடர்புள்ளது
  • குடல் அல்லது சிறுநீர்ப்பை பிரச்னைகளாலும் இடுப்பு வலி ஏற்படுகிறது
  • காய்ச்சல் வந்தால் இடுப்பு வலி வரும் வாய்ப்புகள் அதிகம்

இடுப்பு வலிக்கு இயற்கை வழியில் தீர்வு காண்பது எப்படி?

அதீத இடுப்பு வலியால் அவதிப்படுபவர்கள் அறுவைசிகிச்சை அல்லது மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளவேண்டி இருக்கும். அதேசமயம் சில எளிய வழிகள் இடுப்பு வலிக்கு தீர்வு கொடுக்கலாம்.

சூடான மற்றும் குளிர் சிகிச்சை

இடுப்பு வலியால் அவதிப்படுபவர்கள் ஐஸ் பேக்குகளைக்கொண்டு ஒத்தடம் கொடுக்கலாம். இது அசௌகர்யத்தை குறைக்கிறது. நேரடியாக ஐஸ் கட்டிகளை சருமத்தின்மீது வைத்து தேய்க்காமல், மெல்லிய டவலில் சுற்றி ஒத்தடம் கொடுக்கலாம். இதைப்போலவே, சூடான ஒத்தடமும் வலியிலிருந்து நிவாரணம் அளித்து வீக்கத்தை குறைக்கும்.

உடற்பயிற்சி

சில பயனுள்ள உடற்பயிற்சிகள் இடுப்புவலியை குறைக்க உதவுகிறது. இந்த பயிற்சிகள் உடலமைப்பை மேம்படுத்துவதுடன், முதுகு மற்றும் வயிற்றுத்தசைகளையும் வலிமையாக்குகிறது. பிஸியோதெரபிஸ்ட் பரிந்துரைக்கும் உடற்பயிற்சிகள், உடலமைப்பை மேம்படுத்துகிறது

  • முறையான எடைதூக்கும் நுட்பங்களை கற்றுக்கொள்ள உதவுகிறது
  • தசைகளை வலிமையாக்குகிறது
  • தசைகளின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கிறது
  • அத்தியாவசிய எண்ணெய்களை பயன்படுத்துவதை ஊக்குவிக்கிறது

இயற்கையான அத்தியாவசிய எண்ணெய்கள் மற்றும் ஆயின்மெண்ட்டுகளை பயன்படுத்துவது வலியை குறைக்க உதவும். நிறைய அத்தியாவசிய எண்ணெய்களில் கேப்சைசின் உள்ளது. இது மிளகிலிருந்து பெறப்படுகிறது. இதன் சூடுத்தன்மை இதனை மிகவும் பயனுள்ளதாக்குகிறது. இந்த பொருட்கள் பாதிக்கபப்ட்ட பகுதியிலுள்ள நரம்புகளின் அதீத உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி, வலியை குறைக்கிறது.

தியானம்

கவனத்தை ஒருமுகப்படுத்துதலுக்கு சிறந்த வழி, தியானம் என்கின்றனர் நிபுணர்கள். எண்டோபின் அல்லது நல்ல உணர்வு ஹார்மோன் சுரப்பை ஊக்குவிக்கிறது. இதனால் மன அழுத்தம் மற்றும் பதற்றம் குறைகிறது. இதுபோன்ற மனதை கட்டுப்படுத்தும் தியானத்தால் உடல் உணரும் வலியை கட்டுப்படுத்த முடியும் என அறிவுறுத்துகின்றனர் நிபுணர்கள்.

தூக்க நேரத்தை ஒழுங்குபடுத்துங்கள்

வலி ஏற்படுவதற்கான முக்கிய காரணிகளில் ஒன்று இன்சோன்மியா அல்லது போதிய தூக்கமின்மை என்கின்றனர் மருத்துவர்கள். போதிய தூக்கமின்மையும் இடுப்பு வலியை மோசமாக்கலாம். சரியான நேரத்தில் தூங்காவிட்டாலும் வலி அதிகமாகி தூக்கத்தை கெடுக்கும்.

மசாஜ்

வலி மற்றும் வீக்கமுள்ள பகுதியில் மென்மையான மசாஜ் கொடுப்பது வலியிலிருந்து விடுபட உதவும் சிறந்த வழிகளில் ஒன்று. மசாஜ் செய்வது வலியை குறைப்பது மட்டுமல்லாமல், இடுப்பின் செயல்பாட்டையும் அதிகரிக்கிறது. மேலும் வலி நிவாரணி மாத்திரைகள் அதிகம் எடுத்துக்கொள்வதையும் குறைக்கிறது.

அக்குபஞ்சர்

நாள்பட்ட இடுப்பு மற்றும் முதுகு வலிகு அக்குபஞ்சர் மற்றும் பிற அறுவை சிகிச்சை அல்லாத சிகிச்சைகள் தீர்வு கொடுக்கலாம் என்கிறது ஜான் ஹோப்கின்ஸ் மருத்துவ ஆய்வு. ஆனால் இதுபோன்ற சிகிச்சைகளை எடுப்பதற்கு முன், மருத்துவரை கலந்து ஆலோசிப்பது சிறந்தது.