சிறப்புக் களம்

ஆயுள் காப்பீடு எடுக்க தயாராகி விட்டீர்களா? இந்த தவறுகளை செய்யாதீங்க..!

ஆயுள் காப்பீடு எடுக்க தயாராகி விட்டீர்களா? இந்த தவறுகளை செய்யாதீங்க..!

JustinDurai

ஆயுள் காப்பீடு தொடர்பாக பெரும்பாலும் நேரக்கூடிய தவறுகள் என்னென்ன எனப் பார்க்கலாம்..

குடும்பத்தின் வருவாயை ஈட்டும் நபர் எதிர்பாராத மரணம், அல்லது உடல் குறைபாடு அல்லது கொடிய நோய் ஏற்படும்போது குடும்பத்திற்கு ஏற்படும் நிதி சுமைகள் மற்றும் சவால்களை சமாளிக்க உதவும் ஒரு வழிதான் ஆயுள் காப்பீடு என்பதை அனைவரும் அறிந்திருப்போம். அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த ஆயுள் காப்பீட்டு பாலிசியில் பலரும் இந்த தவறுகளை பொதுவாக செய்கிறார்கள்.

ஒன்றுக்கு மேற்பட்ட பாலிசிகள்

சிலர் ஒன்றுக்கும் மேற்பட்ட பாலிசிகளை எடுத்து கட்டி வருகிறார்கள்.  இப்படி ஒன்றுக்கும் மேற்பட்ட பாலிசிகள் எடுப்பது கூடுதல் பாதுகாப்பானதாகவும், ஒரு முதலீட்டாகவும் நினைத்துக் குழப்பிக் கொள்கிறார்கள். ஆயுள் காப்பீடு என்பது முதலீடு அல்ல. அது பாலிசிதாரரின் இறப்புக்குப் பிறகு, அவரை  சார்ந்தவர்களை வந்தடையும் ஒரு காப்பீட்டுத் திட்டம் ஆகும். எனவே ஒருவரே ஒன்றுக்கும் மேற்பட்ட பாலிசிகளை எடுப்பதை தவிர்த்து, ஒரு பாலிசி எடுத்தாலும் போதுமான காப்பீட்டுத் தொகைக்கு பாலிசி எடுப்பதே சிறந்தது என்கின்றனர் காப்பீட்டு ஆலோசகர்கள். அதேசமயம் மிகக் குறைந்த பிரீமியம் உள்ள பாலிசியை தேர்ந்தெடுப்பதும் பின்னாளில் அது உங்களை பாதிக்கும்.

தள்ளிப்போடாதீங்க!

இளம் வயதிலேயே ஆயுள் காப்பீடு பாலிசியை எடுப்பது எப்போதும் நல்லதாகும். ஒருவர் சம்பாதிக்கத் தொடங்கியதும் ஆயுள் காப்பீடு பாலிசியை எவ்வளவு விரைவாக எடுக்கிறாரோ, அந்த அளவுக்கு பிரீமியம் குறைவாக இருக்கும். வயது அதிகரிக்கும் போது பாலிசி பிரீமியம் தொகையும் அதிகரிக்கிறது. சில நேரங்களில் பாலிசி மறுக்கக்கூட படலாம். ஏனெனில் ஆயுள் காப்பீட்டு பிரீமியம் ஒருவரின் வயது மற்றும் அவருக்கு இருக்கும் நோய்ப் பாதிப்புகளின் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படுகிறது. பொதுவாக, ஆயுள் காப்பீடு பாலிசிகளை 18 வயது முதல் 65 வயது வரை உள்ளவர்கள் எடுக்கலாம்.

குழந்தைக்கு ஆயுள் காப்பீடு எடுக்கலாமா?

சிலர் குழந்தையின் பெயரிலும் காப்பீடு எடுக்கிறார்கள். பொதுவாக, குடும்பத்தில் பணிபுரியும் நபருக்குத்தான் ஆயுள் காப்பீடு எடுக்க வேண்டும். ஏனெனில் குடும்பத்தில் வருமானம் ஈட்டும் நபருக்கு அசம்பாவிதம் ஏற்பட்டால், ஆயுள் காப்பீடு மூலம் கிடைக்கும் இழப்பீடு குடும்பத்தைக் காப்பாற்றும் என்பது ஆயுள் காப்பீட்டின் பிரதான நோக்கமாகும். எனவே குழந்தைகளுக்கு தனி பாலிசி எடுப்பது பின்னாளில் சிரமமாகவும், அதிக பிரீமியம் செலவை ஏற்படுத்துவதாகவும் இருக்கும். அதற்குப் பதிலாக நீங்கள் காப்பீடு வாங்கும் போது, உங்கள் மைனர் குழந்தையை நீங்கள் நாமினியாக தேர்வு செய்யலாம்.

எந்தவொரு தகவலையும் மறைக்காதீர்கள்

ஆயுள்  காப்பீட்டு பாலிசி எடுக்கும்போதே சரியான விவரங்களைத் தெரிவிப்பது மிக அவசியம். புகைப் பிடிக்கும் பழக்கம், குடும்பத்தில் யாருக்காவது இதய நோய் பாதிப்பு இருப்பதை பாலிசி எடுக்கும்போது மறைத்திருக்கும் பட்சத்தில், அசம்பாவிதம் ஏற்பட்டு இறப்பு நிகழ்ந்து, இழப்பீடு கோரும்போது, இந்த விவரங்கள் தெரிய வந்தால் க்ளெய்ம் மறுக்கப்படுவதற்கான அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. எனவே, பாலிசி எடுக்கும்போது விண்ணப்பப் படிவத்தில் சரியான விவரங்களை நிரப்பிக் கொடுப்பது அவசியம்.

இதையும் படிக்கலாம்: சரியான நேரத்தில் நன்மை பயக்கும் குடும்பக் காப்பீடு A to Z - நிபுணரின் எளிய விளக்கம்