எல்.ஐ.சி. நிறுவனத்தின் பொதுப்பங்கு வெளியீட்டுக்கு மத்திய அரசு பல வகைகளில் தயாராகி வருகிறது. நடப்பு நிதி ஆண்டுக்குள் இதனை முடிக்க வேண்டும் என மத்திய அரசு இலக்கு நிர்ணயம் செய்திருக்கிறது. பங்கு விலக்கல் மூலம் ரூ.1.75 லட்சம் கோடியை திரட்ட மத்திய அரசு இலக்கு நிர்ணயம் செய்திருக்கிறது. இந்த இலக்கை அடைய வேண்டும் என்றால், எல்.ஐ.சி. ஐபிஓ அரசுக்கு முக்கியமாகும். (இதுவரை பங்கு விலக்கல் மூலமாக ரூ.8,368 கோடி மட்டுமே திரட்டப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது.)
காப்பீட்டு நிறுவனங்கள் அனைத்தும் ஒரு விதியின் கீழ் செயல்படுகின்றன. ஆனால், எல்.ஐ.சி.-க்கு சிறப்புப் பிரிவின் (1956-ம் ஆண்டு எல்.ஐ.சி. சட்டம்) கீழ் செயல்படுகிறது. அதனால், இந்த விதிகளை ஐபிஓ-வுக்கு ஏற்ப மாற்றம் செய்யும் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டிருக்கிறது.
எல்.ஐ.சி ஐபிஒ வெளியாகும்பட்சத்தில் இந்தியாவில் வெளியான மிகப்பெரிய ஐபிஓ எல்.ஐ.சி-யாக இருக்கும். சில பங்குச்சந்தை வல்லுநர்களின் கருத்துபடி, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எல்.ஐ.சிதான் மிகப்பெரிய ஐபிஓவாக இருக்கும் என தெரிவித்திருக்கிறார்.
எல்.ஐ.சி: இந்தியாவின் மொத்த காப்பீட்டு சந்தையில் 70 சதவீதம் வரை எல்.ஐ.சி. வசம் இருக்கிறது. 13.5 லட்சம் ஏஜெண்டுகள் உள்ளனர். (சந்தையில் உள்ள இதர நிறுவனர்களின் மொத்த ஏஜெண்ட் பலமே 11 லட்சம்தான்) ஏஜெண்டுகள் தவிர எல்.ஐ.சி.க்கு 1.14 லட்சம் பணியாளர்கள் உள்ளனர். எல்.ஐ.சி.யில் 28.9 கோடி பாலிசிகள் உள்ளன.
உபரி நிதி: எல்.ஐ.சி.-யின் உபரி நிதியில் ஐந்து சதவீதம் பங்குதாரர் நிதிக்கு செல்லும். இந்த நிதி, அரசுக்கு டிவிடெண்ட் வழங்குவதற்கு பயன்படும். மீதமுள்ள 95 சதவீத நிதி பாலிசிதாரர் நிதிக்கு ஒதுக்கப்படும். இந்தத் தொகையை வைத்து தகுதி வாய்ந்த பாலிசிதாரர்களுக்கு போனஸ் வழங்கப்படும். ஆனால், மற்ற நிறுவனங்களில் இதில் 90:10 சதவீதம் என உள்ளது. துறைக்கு ஏற்றதுபோல விதிமுறைகளில் மாற்றம் செய்யப்பட இருக்கிறது. இருந்தாலும், பாலிசிதாரர்களுக்கு வழங்கப்படும் போனஸில் பெரிய குறைவு இருக்காது என வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.
அந்நிய முதலீடு: தற்போது தனியார் காப்பீட்டு துறையில் அந்நிய முதலீடு 74 சதவீதம் வரை உள்ளது. பொதுத்துறை வங்கிகளில் 20 சதவீதம் வரை அந்நிய முதலீடு அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால், எல்.ஐ.சி.-யில் இதுவரை அந்நிய முதலீடு இல்லை. தற்போது ஐபிஓ வர இருப்பதால் எல்.ஐ.சி.-யில் அந்நிய முதலீட்டுக்காக அனுமதிப்பது குறித்து பரிசீலனை செய்ய இருப்பதாக தெரிகிறது. அதிகபட்சம் 20 சதவீதம் வரை அந்நிய முதலீடு இருக்கக்கூடும்.
பாலிசிதாரர்களுக்கு 10% பங்குகள்: மொத்தம் ஒதுக்கப்படும் பங்குகளில் 10 சதவீத பங்குகள் பாலிசிதாரர்களுக்கு ஒதுக்கப்படும் என தெரிகிறது. பணியாளர்களுக்கு ஒதுக்கப்படுவது போல பாலிசிதாரர்களுக்கு பங்குகள் ஒதுக்கப்படும். 10 சதவீதத்துக்கு மேல் ஒதுக்கக் கூடாது என்பது விதியாகும். அதேபோல சந்தை விலையில் பணியாளர்கள் மற்றும் பாலிசிதாரர்களுக்கு தள்ளுபடி வழங்கமுடியும். ஆனால், இந்த தள்ளுபடி 10 சதவீத விலைக்கு மேல் இருக்காது.
பாலிசிதாரர்களுக்கு பங்குகள் கிடைக்கும் வாய்ப்பு இருப்பதால், பங்குச்சந்தைக்கு வரும் முதலீட்டாளர்களின் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் எனத் தெரிகிறது. கொரோனா பேரிடருக்கு முன்பு இருந்ததை விட தற்போது முதலீட்டாளர்களின் எண்ணிக்கை மூன்று மடங்கு உயர்ந்து 8 கோடியாக இருக்கிறது. தற்போது பாலிசிதாரர்களுக்கு பங்கு கிடைக்கும் என்பதால் பங்குச்சந்தையில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை உயரும் என பங்குச்சந்தை புரோக்கிங் நிறுவனங்கள் கணித்துள்ளன.
ஆனால், இந்த ஐபிஒ குறித்து பணியாளர்கள் எதுவும் பேசக் கூடாது என நிர்வாகம் கூறியிருக்கிறது. ஐபிஒ-வை கையாளுவதற்கு வங்கியாளர்களை நியமனம் செய்யும் வேலையையும் மத்திய அரசு தொடங்கி இருக்கிறது.
அதேவேளையில், "ஐபிஓ-வுக்குப் பிறகு லாப நோக்கு என்பதே முதன்மையாகிவிடும் என்பதால் இனி சாலை வசதி, ரயில் வசதி, மின்வசதி முதலான மக்கள் நலன் சார்ந்த கட்டமைப்புக்கு எல்.ஐ.சி நிறுவன நிதி பயன்படுத்தப்படாமல் போக வாய்ப்பு உள்ளது. இது சாமானிய மக்களை பாதிக்கும் அம்சமாகும்.
தேசத்தின் சொத்து விற்கப்படுவது இதுவரை எல்.ஐ.சி பின்பற்றி வந்த கொள்கைகள் சீர்குலையவும் வழிவகுக்கலாம். பணி வாய்ப்புகள் குறைக்கப்பட்டு, அவுட் சோர்ஸிங் அதிகரிக்கும் சாத்தியம் உள்ளதால், வேலையிழப்பு என்பது பணியாளர்களை நேரடியாக பாதிக்கும் விஷயமாகலாம்" என்று அனைத்திந்திய எல்.ஐ.சி ஊழியர்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் ராஜேஷ் குமார் பேட்டி ஒன்றில் கவலை தெரிவித்திருப்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.
இதேபோன்ற எச்சரிக்கை கருத்துகளை அரசியல் கட்சிகளும் முன்வைத்தாலும், வர்த்தக ரீதியில் கவனிக்கும்போது, எல்.ஐ.சி. ஐபிஓ நிச்சயம் பங்குச்சந்தையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது மட்டும் தெளிவு.