சிறப்புக் களம்

"நீங்காத ரீங்காரம் நீதானே" - தமிழில் வளையோசையென கலகலத்த லதா மங்கேஷ்கர்; ஒரு தொகுப்பு

"நீங்காத ரீங்காரம் நீதானே" - தமிழில் வளையோசையென கலகலத்த லதா மங்கேஷ்கர்; ஒரு தொகுப்பு

Veeramani

'வளையோசை கலகலவென' என்ற ஒற்றை பாடலே போதும் லதா மங்கேஷ்கரின் தமிழ் இசைப்பயணத்தை புரிய வைப்பதற்கு. தமிழில் நேரடியாக மொத்தம் 5 பாடல்கள் பாடியிருந்தாலும் அதில் 3 பாடல்களே வெளியானது. அந்த மூன்றுமே முத்தாய்ப்பாய் இன்றும் ரசிகர்கள் மனதில் ஒலிப்பவை. அவரின் தமிழ் இசைப்பயணம் குறித்த ஒரு தொகுப்பு...

இந்தியாவின் உயரிய விருதான 'பாரத ரத்னா' விருது பெற்ற பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் மறைவு நாடு முழுவதும் உள்ள மக்களை கலங்க செய்துள்ளது. அவரின் தேன் சொட்டும் குரல் அதிகம் ஒலித்தது இந்தியில் என்றாலும், தமிழ் உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் பெயரை சொல்லக்கூடிய சில பாடல்களை அவர் பாடியுள்ளார்.

இசைஞானியுடன் ஒலித்த இசைக்குயில்:

இளையராஜா இசையில் 1987இல் தமிழில் இவர் நேரடியாக பாடிய முதல் பாடல் 'கண்ணுக்கொரு வண்ணக்கிளி' படத்தில் 'இங்கே பொன் வீணை' என்ற பாடல்தான், அனால் அந்த படம் வெளியாகவே இல்லை, தற்போது இந்த பாடலை யூடியூப்பில் கேட்கலாம். அதன்பின்னர் அதே ஆண்டில் மீண்டும் இளையராஜா இசையில் பிரபு நடித்த 'ஆனந்த்' திரைப்படத்தில் ' ஆராரோ ஆராரோ' பாடலை பாடினார். அந்த பாடல் வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது.

1988 ஆம் ஆண்டில் இளையராஜாவின் இசையில், கமல்ஹாசன் நடித்த 'சத்யா' திரைப்படத்தில் 'வளையோசை கலகலவென' மற்றும் 'இங்கேயும் அங்கேயும்' என இரு பாடல்களை பாடினார். இதில் இங்கேயும் அங்கேயும் பாடல் திரைப்படத்தில் இடம்பெறவில்லை, அனால் தற்போது அந்த பாடலையும் யூடியூப்பில் கேட்கலாம்.

இந்த படத்தில் இடம்பெற்ற வளையோசை பாடல் பட்டி தொட்டியெங்கும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இப்போதும் கூட தமிழர்கள் அனைவரின் 'பேவரிட் லிஸ்ட்'டில் இந்த பாடல் இருக்கும். அதே ஆண்டில் கார்த்தி நடித்த ' என் ஜீவன் பாடுது' படத்தில் 'எங்கிருந்தோ அழைக்கும்' என்ற பாடலை பாடியிருந்தார் அவர். இதுதான் அவர் கடைசியாக பாடிய தமிழ் பாடல்.

லதா மங்கேஷ்கர் தமிழில் இணைந்து பணியாற்றிய ஒரே இசையமைப்பாளர் இளையராஜா மட்டும்தான். தெலுங்கிலும் லதா மங்கேஷ்கர் ஒரே ஒரு நேரடிப்பாடலையே பாடியுள்ளார். 1988ல் நாகார்ஜுனா நடித்த 'அகாரி போராட்டம்' படத்தில் 'தெல்ல சீரக்கு' என்ற பாடல் மூலமாக லதா மங்கேஷ்கரை தெலுங்கில் பாட வைத்த பெருமையும் இசைஞானி இளையராஜாவையே சேரும். லதா மங்கேஷ்கர் மலையாளத்தில் ஒரு பாடலையும், கன்னடத்தில் 2 பாடல்களையும் பாடியுள்ளார்.

1987க்கு முன்பாக 1953 ஆம் ஆண்டே ' ஆண் முரட்டு அடியாள்' என்ற இந்தி டப்பிங் திரைப்படம் மூலமாக தமிழில் 4 பாடல்களை லதா மங்கேஷ்கர் பாடியுள்ளார், இதுவே தமிழில் ஒலித்த இவரின் முதல் பாடல்கள் ஆகும். இந்த படத்திற்கு நவுசாத் இசையமைத்திருந்தார், கம்பதாசன் பாடல்களை எழுதியிருந்தார். 5 நேரடி தமிழ்ப்பாடல்கள் , 4 டப்பிங் தமிழ் பாடல்கள் என லதா மங்கேஸ்கர் தமிழில் மொத்தம் 9 பாடல்களை மட்டுமே பாடியுள்ளார். அவர் தமிழில் பணியாற்றியுள்ள ஒரே இசையமைப்பாளர் இளையராஜா மட்டுமே , தமிழகத்தை சேர்ந்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுடன் இணைந்து இந்தி பாடல்களை பாடியுள்ளார்.

1929ஆம் ஆண்டு மத்திய பிரதேசத்தில் பிறந்த லதா, 1942ஆம் ஆண்டில் தனது இசைப்பயணத்தை தொடங்கினார். தேனினும் இனிய குரலால் சுமார் 80 ஆண்டு காலம் இந்திய மக்களை மகிழ்வித்தவர் லதா மங்கேஷ்கர். இந்தி, தமிழ் உள்ளிட்ட 36 மொழிகளில் பல்லாயிரக்கணக்கான திரைப்படப்பாடல்களை அவர் பாடியுள்ளார்.

அவருக்கு நாட்டின் உயரிய விருதான 'பாரத ரத்னா' கடந்த 2001ஆம் வருடம் வழங்கப்பட்டது. திரைத்துறையின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதையும் 1989ஆம் ஆண்டு லதா மங்கேஷ்கர் பெற்றார். 1999ஆம் ஆண்டு நவம்பர் முதல் 2005 நவம்பர் வரை மாநிலங்களவை உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார் இவர்.

லதா மங்கேஷ்கரின் மறைவை ஒட்டி 2 நாள் தேசிய துக்க தினம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. லதா மங்கேஷ்கரின் உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்குகள் நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளது.