சிறப்புக் களம்

ரன் ரேட்டை விட பார்ட்னர்ஷிப்கள் முக்கியம் - பஞ்சாபின் தோல்வி சொல்லும் பாடம்!

ரன் ரேட்டை விட பார்ட்னர்ஷிப்கள் முக்கியம் - பஞ்சாபின் தோல்வி சொல்லும் பாடம்!

webteam

பஞ்சாபின் தோல்வி அவர்களுக்கு மட்டுமில்லை மற்ற அணிகளுக்கும் உணர்த்தும் பாடம் ஒன்றுதான்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கிடையேயான ஆட்டம் நேற்று நடந்திருந்தது. இதில், கொல்கத்தா அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வென்றிருக்கிறது. மரண அடி அடித்த ரஸல் ஒரு நான்கைந்து ஓவர்களிலேயே போட்டியை தலைகீழாக மாற்றி கொல்காத்தாவின் வெற்றியை சுலபமாக்கினார். ரஸலின் அதிரடியை விட அதிர்ச்சியாக அமைந்தது பஞ்சாபின் சறுக்கலே.

கடந்த போட்டியில் பெங்களூருவிற்கு எதிராக 200+ ஸ்கோரை வெற்றிகரமாக ஒரு ஓவரை மீதம் வைத்து வென்ற பஞ்சாப் அணி இந்த போட்டியில் திக்குமுக்காடி 137 ரன்களை மட்டுமே எடுத்தது. அந்த அணியின் பேட்டிங் சொதப்பலே அவர்களின் தோல்விக்கு மிக முக்கிய காரணமாக அமைந்திருந்தது. பஞ்சாபின் இந்த சொதப்பலுக்கான காரணம் என்ன?

பஞ்சாபின் பேட்டிங் சொதப்பலுக்கான காரணத்தை டாஸிலிருந்தே தொடங்க வேண்டும். டாஸை வெல்லும் அணி எந்தவித யோசனையுமேயின்றி சேஸிங்கை தேர்வு செய்துவிடுவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். அப்படி சேஸிங்கே தேர்வு செய்யும் அணிகளே இதுவரை வென்றிருக்கவும் செய்கின்றன. முதலில் பேட் செய்யும் அணி எவ்வளவு பெரிய ஸ்கோரை எடுத்தாலும் தோற்பதையும் தொடர்ச்சியாக பார்த்து வருகிறோம். இந்த ட்ரெண்ட் இந்த கொல்கத்தா vs பஞ்சாப் போட்டியிலும் தொடர்ந்திருக்கிறது. பஞ்சாபின் பேட்டிங் சொதப்பலுக்குமே கூட இதுதான் ஒருவகையில் காரணமாக அமைந்திருக்கிறது.

கொல்கத்தா அணியின் கேப்டனான ஸ்ரேயாஸ் ஐயரே டாஸை வென்று சேஸிங்கை தேர்வு செய்திருந்தார். எனில், பஞ்சாப் முதலில் பேட் செய்தாக வேண்டும். கொல்கத்தாவால் சேஸே செய்ய முடியாத ஒரு அசாத்திய ஸ்கோரை அடித்தே ஆக வேண்டும் என்கிற அழுத்தம் அங்கேயே பஞ்சாபிற்கு வந்துவிட்டது. கடைசியாக ஆர்சிபிக்கு எதிராக பஞ்சாபே 205 ரன்களை வெற்றிகரமாக சேஸ் செய்திருக்கிறது என்கிறபட்சத்தில் இதன் தீவிரத்தன்மையையும் பஞ்சாப் உணர்ந்திருந்தது. அதனால், எவ்வளவு முடியுமே அவ்வளவு பெரிய ஸ்கோரை எடுக்க வேண்டுமென முடிவுசெய்தே ஆடினார். இதுவரை எல்லாம் சரிதான். ஆனால், ஒரு அசாத்திய டார்கெட்டை செய்ய பஞ்சாப் பயணித்த வழி அதுதான் இங்கே பிரச்சனையாக அமைந்திருந்தது.

பஞ்சாப் முதலில் பேட் செய்திருந்த போது பவர்ப்ளேயில் எடுத்திருந்த ஸ்கோர் 62. ரன்ரேட் 10 க்கும் மேல். அற்புதம். 10 ஓவர்கள் முடியும்போது பஞ்சாபின் ஸ்கோர் 85. ரன்ரேட் 8 க்கும் மேல். இதுவும் ஒரு நல்ல ஸ்கோரே. ஆனால், விக்கெட்டுகள்? பவர்ப்ளேக்குள் மட்டும் 3 விக்கெட்டுகளை இழந்திருந்தனர். 10 ஓவர்கள் முடிந்திருக்கையில் 5 விக்கெட்டுகளை இழந்திருந்தனர். 15 ஓவர்கள் முடிந்திருக்கையில் 102 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளுக்கு இழந்திருந்தனர். கிட்டத்தட்ட ஒவ்வொரு 2 ஓவர்களுக்கும் ஒரு விக்கெட் என விட்டுக்கொண்டே இருந்தனர். இதுதான் பிரச்சனை.

பஞ்சாபிற்கு முதல் 10 ஓவரில் ரன்ரேட்டில் எந்த பிரச்சனையும் வரவில்லை. ரொம்பவே அட்டகாசமாக ஸ்கோர் செய்திருந்தனர். ஆனால், வருகின்ற பேட்ஸ்மேன்கள் எல்லாருமே வந்த வேகத்திலேயே ஒன்றிரண்டு பவுண்டரிக்களை அடித்துவிட்டு அதே வேகத்தில் விக்கெட்டை விட்டு பெவிலியனுக்கு திரும்பினர். பார்ட்னர்ஷிப் என்பது உருவாகவில்லை. தனித்தனியாக வீரர்கள் பவுண்டரிக்களையும் சிக்சர்களையும் அடித்துவிட்டு விக்கெட்டை வாரிக்கொடுத்தனர். டி20 என்பது குறுகிய வடிவிலான போட்டிதான். அதில் ஒவ்வொரு பந்திலுமே எவ்வளவு அதிரடியாக ஆடுகிறோம் என்பது முக்கியம்தான். மாற்றுக் கருத்தே இல்லை. ஆனால், பார்ட்னர்ஷிப்களும் ரொம்பவே முக்கியமானதுதான். அதுவும் பெரிய ஸ்கோர்களை எடுக்க நினைக்கும் போட்டிகளில் அவை ரொம்ப ரொம்ப முக்கியம்.

பார்ட்னர்ஷிப்களின் பலனை பஞ்சாபே முதல் போட்டியில் அறுவடை செய்திருக்கிறது. 205 ரன்களை வெற்றிகரமாக சேஸ் செய்த அந்த போட்டியில் தவான்-மயங்க் அகர்வால், தவான்-பனுகா ராஜபக்சா, ஒடேன் ஸ்மித்-ஷாரூக்கான் என திடகாத்திரமான பார்ட்னர்ஷிப்கள் அந்த வெற்றிக்கு ஆதாரமாக அமைந்திருந்தது. அந்த போட்டியில் எடுத்ததை போன்ற ஒரு பெரிய ஸ்கோரை இந்த போட்டியிலும் எடுக்க வேண்டும் என்றே பஞ்சாப் விரும்பியது. ஆனால், அந்த போட்டியை போன்று இந்த போட்டியில் பெரிய பார்ட்னர்ஷிப்களே அமையவில்லை. அதிகப்பட்சமாக தவானும் பனுகா ராஜபக்சாவும் 41 ரன்களுக்கு கூட்டணி வைத்திருந்தனர். ஆனால், இந்த பார்ட்னர்ஷிப்புமே 3 ஓவர்களுக்குதான் நீடித்தது. வெறும் 9 பந்துகளில் 31 ரன்களை எடுத்து பனுகா ராஜபக்சா நடையைக் கட்டிவிட்டார்.

கொல்கத்தா வென்றதற்கும் ரஸலின் அதிரடியோடு அவரோடு சாம்பில்லிங்ஸ் ஒத்துழைத்து அமைத்த பார்ட்னர்ஷிப்பும் மிக முக்கிய காரணமாக அமைந்தது. ரஸலும் சாம் பில்லிங்ஸும் இணைந்து 90 ரன்களை அடித்திருந்தனர். இந்த 90 ரன்களில் பில்லிங்ஸ் 24 ரன்களை மட்டுமே அடித்திருந்தார். ரஸல்தான் பெரும்பாலான ரன்களை அடித்து வெலுத்திருந்தார். ஆனால், இந்த கூட்டணி 7.3 ஓவர்களுக்கு நீடித்திருந்தது. 51-4 என்ற நிலையிலிருந்து மேற்கொண்டு விக்கெட்டே விடாமல் கொல்கத்தா வென்றிருந்தது. இந்த இடத்தில்தான் சாம் பில்லிங்ஸின் ஆட்டமும் அவர் அமைத்த பார்ட்னர்ஷிப்பும் கவனம் பெறுகிறது. பஞ்சாப் பேட்ஸ்மேன்களை போல பேட்டை வீசி சாம் பில்லிங்ஸ் அவுட் ஆகியிருந்தால் அடுத்து ரஸலுக்கு சரியான ஒத்துழைப்பு கிடைத்திருக்குமா என்பதே தெரியாது. ரஸல் ஒரு புறம் அடித்து ஆட இன்னொரு புறம் விக்கெட்டாக விழுந்து அவருக்கு அழுத்தத்தையும் கூட்டி விட்டு அவருடைய அதிரடியே விரயமாகும் சூழலும் உருவாகியிருக்கும். ஆனால், பில்லிங்ஸ் அதை தடுத்தார். ஒரு முனையில் நின்று விக்கெட்டே விடாமல் ஸ்ட்ரைக்கை மட்டுமே ரொட்டேட் செய்து ரஸலுக்கு நன்றாக Compliment செய்தார். அதன் மூலம் உருவான பார்ட்னர்ஷிப்தான் பஞ்சாபை வெல்ல வைத்தது.

'ரஸல் சிக்சர்களை அடிக்கிறார். அடுத்து வரவிருக்கும் நரைனும் அதிரடியாக ஆடடுவார். ஆனாலும் இந்தப் போட்டியில் ரொம்பவே முக்கியமானவர் சாம் பில்லிங்ஸ்தான்' என ஹர்ஷா போக்ளே கமெண்ட்ரியில் பேசியிருந்தார். பில்லிங்ஸ் மாதிரி ஒரு பேட்ஸ்மேன் பஞ்சாபின் அதிரடிக்காரர்களை அனுசரித்து ஆடி பார்ட்னர்ஷிப்பை உருவாக்கவே இல்லை. அத்தனை பேரும் தனித்தனியாக ஆடிக்கொண்டிருந்தனர். அதுதான் பஞ்சாபை தோல்வியடைய வைத்தது. 225 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடியிருக்கும் ரஸலும் கொண்டாடப்படுகிறார், பாராட்டப்படுகிறார். 104 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடியிருக்கும் பில்லிங்ஸும் கொண்டாடப்படுகிறார், பாராட்டப்படுகிறார். எனில், தனிப்பட்ட ரன்களை விட பார்ட்னர்ஷிப்கள் ரொம்பவே முக்கியம். பஞ்சாபின் தோல்வி அவர்களுக்கு மட்டுமில்லை மற்ற அணிகளுக்கும் உணர்த்தும் பாடம் இதுதான்!

-உ.ஸ்ரீராம்