சிறப்புக் களம்

ஓயாத போராட்டங்கள்.. உள்நாட்டு கலவரத்தால் தொடரும் பதற்றம் - என்னதான் நடக்கிறது கஜகஸ்தானில்?

ஓயாத போராட்டங்கள்.. உள்நாட்டு கலவரத்தால் தொடரும் பதற்றம் - என்னதான் நடக்கிறது கஜகஸ்தானில்?

Veeramani

கஜகஸ்தானில் தொடர்ந்து கலவரம் அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டின் முன்னாள் உளவுத்துறைத் தலைவர் கரீம் மாசிமோவ் தேசத்துரோக குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார் என்று மாநில பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

முன்னாள் சோவியத் குடியரசின் நாடக இருந்த கஜகஸ்தான் 30 ஆண்டுகளில் இல்லாத மோசமான அமைதியின்மையால் தத்தளிக்கிறது. ரஷ்யா,சீனா இடையே அமைந்துள்ள மத்திய ஆசிய நாடான கஜகஸ்தானில் வாகனங்களில் பயன்படுத்தப்படும் திரவ பெட்ரோலின்(எல்பிஜி) விலை திடீரென உயர்த்தப்பட்டதால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் நாட்டின் தலைநகரான அல்மாட்டி உட்பட பல நகரங்களுக்கும் போராட்டம் பரவியதால், அவர்களை சமாதானப்படுத்த பிரதமர் ஆஸ்கர் மமின் தலைமையிலான அமைச்சரவை பதவி விலகியது. இதிலும் சமாதானமடையாத போராட்டக்காரர்கள், அல்மாட்டி நகர மேயர் அலுவலகம் மற்றும் கஜகஸ்தான் அதிபர் இல்லத்தை அடித்து நொறுக்கி தீவைத்தனர். இதன்பின்னர் நாடு முழுவதும் அவசரநிலை அறிவிக்கப்பட்டது, வன்முறை போராட்டத்தில் ஈடுபடுபவர்களை சுட்டுக்கொள்ளவும் அரசு தரப்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த வன்முறைகளில் 26 போராட்டக்காரர்கள் மற்றும் 18 பாதுகாப்பு படையினர் உயிரிழந்தனர், ஆயிரக்கணக்கானவர்கள் காயமடைந்தனர் , 4,400க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து கஜகஸ்தான் நாட்டின் ஜனாதிபதி காசிம்-ஜோமார்ட் டோகாயேவ், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினிடம் நாட்டில் நிலவும் சூழல் குறித்து விரிவாக தொலைபேசியில் உரையாடினார். கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்த அமைப்பின் (CSTO) தலைவர்களின் வீடியோ கான்பரன்ஸ் மாநாட்டைக் கூட்டுவதற்கான டோகாயேவின் முன்மொழிவை புதின் ஏற்றுக்கொண்டார் , அதனைத்தொடர்ந்து ரஷ்யா மற்றும் நான்கு முன்னாள் சோவியத் குடியரசுகளும் நாட்டில் அமைதியை மீட்டெடுக்க உதவுவதற்காக கஜகஸ்தானுக்கு துருப்புக்களை அனுப்பியுள்ளன.

தற்போது கைது செய்யப்பட்டுள்ள உளவுத்துறை அமைப்பின் முன்னாள் தலைவர் மாசிமோவ் இரண்டு முறை பிரதமரராக இருந்துள்ளார். இவர் சுமார் 30 ஆண்டுகளாக நாட்டில் ஆடசிப்பொறுப்பில் இருந்த முன்னாள் ஜனாதிபதி நர்சுல்தான் நசர்பாயேவுடன் நெருக்கமாக பணியாற்றிவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பல நாட்கள் வன்முறைக்குப் பிறகு, வெள்ளிக்கிழமையன்று கஜகஸ்தானின் தலைநகரமான அல்மாட்டியின் கட்டுப்பாட்டை பாதுகாப்புப் படையினர் மீட்டெடுத்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புப் படையினர் தெருக்களில் ரோந்து செல்வதால், சுமார் 2 மில்லியன் மக்கள் வசிக்கும் நகரில் சில வணிக நிறுவனங்கள் மற்றும் பெட்ரோல் நிலையங்கள் சனிக்கிழமை மீண்டும் திறக்கத் தொடங்கின. "பயங்கரவாதிகள் மற்றும் கொள்ளைக் குழுக்களை நகரத்தை விட்டு அகற்றுவதற்கான நடவடிக்கைகள் இன்னும் நடந்து வருவதாகவும், எனவே பொதுமக்கள் வீட்டிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும்" அரசு தெரிவித்துள்ளது.

நாட்டில் தற்போது நடந்த வன்முறையால் கொல்லப்பட்டவர்களை நினைவுகூரும் வகையில் திங்கட்கிழமை தேசிய துக்க தினம் அனுசரிக்கப்படும் என்று அதிபர் டோகாயேவ் அறிவித்துள்ளார்.