சிறப்புக் களம்

நமஸ்தே சொன்ன ஜஸ்டின் பீபர்

நமஸ்தே சொன்ன ஜஸ்டின் பீபர்

Rasus

இந்தியாவில் முதல் முறையாக இசை நிகழ்ச்சி நடத்த வந்த உலகப்புகழ்பெற்ற பாப் இசை பாடகர் ஜஸ்டின் பீபருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மும்பையில் விமான நிலையத்திற்கு செவ்வாய்கிழமை அதிகாலை 1:30 மணிக்கு ஜஸ்டின் வந்தார். அங்கு அவருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அங்கிருந்து ஜஸ்டின் ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு காரில் ஹோட்டலுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர் மும்பையில் உள்ள ஏழைக் குழந்தைகளுடன் உரையாடிய ஜஸ்டின், 100 குழந்தைகளுக்கு தனது இசை நிகழ்ச்சிக்கான இலவச டிக்கெட்டை வழங்கினார்.

பின்னர் மும்பையில் உள்ள பிரபல மால் ஒன்றில் உள்ள ஸ்டார் பக்ஸில் காபி அருந்திவிட்டு, இசை நிகழ்ச்சிக்காக தனி விமானத்தில் டி.ஒய் பாடீல் மைதானத்தை அடைந்தார். அவர் காரில் பயணித்த போதெல்லாம் காரின் ஜன்னல்கள் ரசிகர்களுக்காக திறந்து வைக்கப்பட்டிருந்து.

இசை நிகழ்ச்சியில் இந்தியாவை சேர்ந்த டிஜே-க்கள் முதலில் பாடல்களை வழங்கினர். இந்த நிகழ்ச்சியை நடிகையும், மாடலுமான எலாரிகா ஜான்சன் தொகுத்து வழங்கினார். அதன் பின், வெள்ளை நிற டி-ஷர்ட் மற்றும் கருப்பு நிற ஷார்ட்ஸ் அணிந்து ஜஸ்டின் பீபர் மேடைக்கு வந்து முதலில் நமஸ்தே என்று சொல்லி விட்டு பின் ஹலோ இந்தியா என்றார். பிலிபெர்ஸ் என்று தங்களைத் தாங்களே அழைத்துக் கொள்ளும் பீபரின் ரசிகர்கள் அனைவரும் உற்சாகக் குரல் எழுப்பி ஜஸ்டினை மேடைக்கு வரவேற்றனர்.

“வேர் ஆர் யு நவ்” எனும் பாடல் மூலம் இசை நிகழ்ச்சியை தொடங்கிய பீபர், தன்னுடைய பிரபல பாடல்களான ‘பேபி, பேபி’, ‘சாரி’, ‘மார்க் மை வேர்ட்ஸ்’ போன்ற பாடல்களை பாடினார். மொத்தம் 120 நிமிடங்கள் பாடி நிகழ்ச்சியை நிறைவு செய்தார். மேடையில் நடனம் ஆடி ரசிகர்களை உற்சாகப்படுத்திய ஜஸ்டின், சில இடங்களில் ‘லிப் சிங்க்’சரியாக செய்யவில்லை எனவும் சிலர் குறை கூறினர்.

மேலும், நிகழ்ச்சியின் போது இந்தியாவிற்கு திரும்ப வருவேன் என்றும் ரசிகர்களிடம் ஜஸ்டின் பீபர் வாக்குறுதி அளித்தார். இந்த இசை நிகழ்ச்சிக்குப் பின் ஆக்ராவில் உள்ள தாஜ் மஹால், டெல்லி, ஜெய்ப்பூர் ஆகிய ஊர்களில் உள்ள முக்கிய இடங்களை ஜஸ்டின் பார்ப்பார் எனவும் பாலிவுட் பிரபலங்களின் பார்டிகளில் கலந்து கொள்வார் எனவும் தெரிகிறது.