சிறப்புக் களம்

யார் கூட்டணியில் யார்?.. திருமாவளவனும், பாமகவும் போடும் அரசியல் கணக்குகள்! மாறுகிறதா களம்?

யார் கூட்டணியில் யார்?.. திருமாவளவனும், பாமகவும் போடும் அரசியல் கணக்குகள்! மாறுகிறதா களம்?

webteam

நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே தமிழக அரசியல் களத்தில் கூட்டணி குறித்த விவாதம் தொடங்கிவிட்டது. அதிலும் பாஜக, பாமக, விசிக ஆகிய கட்சிகளிடம்தான் இந்த பிரச்சினை சூடுபிடித்திருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இதனால் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிக அணி மாறலாம் என தெரிவிக்கின்றனர். கூட்டணி உடையுமா, பாமக திமுகவில் இணையுமா, எதனால் இந்த முடிவுகள் ஏற்பட்டுள்ளன என்பது குறித்து இக்கட்டுரை தொகுப்பில் அலசுவோம்.

தமிழக அரசியலில் பாமகவும்... விசிகவும்!

தமிழக அரசியல் வரலாற்றில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்து வைத்திருக்கிறது தொல்.திருமாவளவனின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. ஒவ்வொரு முறையும் தேர்தலின்போது அதிமுக, திமுக ஆகிய இருபெரும் திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி வைத்து வெற்றி மற்றும் தோல்வியை விசிக பெற்றிருந்தாலும், அதற்கென ஒரு வாக்குச் சதவிகிதத்தையும், வாக்கு வங்கியை தாண்டி அரசியல் அரங்கில் ஓர் இடத்தையும் தனக்கென வைத்திருக்கிறது. அதுபோல், மருத்துவர் ராமதாஸின் பாட்டாளி மக்கள் கட்சியும் தமிழக அரசியல் களத்தில் தவிர்க்க முடியாத ஒரு சக்தியாக விளங்கி வருகிறது. விசிகவைப்போல், பாமகவும் தனக்கென ஒரு வாக்குச் சதவிகிதத்தை வைத்திருப்பதுடன், தேர்தல் காலத்தில் அக்கட்சியும் திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளது. விசிக மற்றும் பாமக ஆகிய இரண்டு கட்சிகளும் அரசியல் களத்தில் எதிரெதிர் துருவங்களாகவே இயங்கி வருகின்றன. 

பாமக - விசிகவின் நட்பு எப்படிப்பட்டது?

தமிழக அரசியல் களத்தில் 90களின் காலகட்டத்தில் மிகப்பெரிய அரசியல் சக்தியாக உருவெடுத்தது பாட்டாளி மக்கள் கட்சி. அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ்தான் வலுமிக்க தலைவராகவும் பலரையும் அரசியல் களத்தில் ஒருங்கிணைத்துச் செல்லும் தலைவராகவும் அப்போது திகழ்ந்தார். அதாவது, அம்பேத்கர், பெரியார், கார்ல் மார்க்ஸ் ஆகியோரின் சிந்தனையின் அடிப்படையில் கட்சியின் கொள்கைகளை வகுத்து அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கிய கட்சியாகவே பாமகவை வளர்த்தெடுத்தார். அந்த காலகட்டத்தில் ராமதாஸ் மற்றும் திருமாவளவன் இடையே மிகப்பெரிய தோழமை இருந்தது. ராமதாஸ் மீது திருமாவளவனுக்கு ஒருவிதமாக தாக்கம் இருந்ததாகவே கூறப்படுகிறது. ராமதாஸ் மீதான தன்னுடைய மரியாதையை தேசிய தலைவராக வரக்கூடிய தகுதி வாய்ப்பும் ராமதாஸுக்கு இருந்தது என்று தன்னுடைய பேட்டி ஒன்றில் திருமாவளவன் கூறியிருப்பார். தொடக்க காலத்தில் இருவரும் சேர்ந்தே பயணித்தனர். 

ஆனால், காலங்கள் செல்லச்செல்ல இருவரும் இருதுருவங்களாக மாறிவிட்டனர். குறிப்பாக, பாமக இடம்பெற்றிருக்கும் அணியில் விசிகவும், விசிக இடம்பெற்றிருக்கும் கூட்டணியில் பாமகவும் அங்கம் வகிப்பதில்லை என்ற நிலையே உருவாகிவிட்டது. இதற்கு இரண்டு சதாப்தங்களாக நடைபெற்ற தேர்தல் வரலாறுகள் உதாரணமாய் இருக்கின்றன. அதேநேரத்தில் 2011 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் பாமகவும், விசிகவும் இணைந்து போட்டியிட்டபோதும், அவர்களின் நட்பு என்பது எலி - தவளையாக இருந்ததை தேர்தல் முடிவுகள் உணர்த்தின.

இதன்பிறகுதான் அந்த இரு கட்சிகளும் தனித்தனியாகப் பயணிக்க ஆரம்பித்தன. இந்த நிலையில்தான் கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் விசிகவும், அதிமுக கூட்டணியில் பாமகவும் இணைந்து தேர்தலைச் சந்தித்தன.

பாமக தொகுதிகளைக் கைப்பற்றிய விசிக

இதில் போட்டியிட்ட 7 இடங்களிலும் பாமக தோல்வியைத் தழுவியது. அதேநேரத்தில் விசிக 2 இடத்தில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றிகண்டது. குறிப்பாக இந்தத் தேர்தலில் பாமகவின் வாக்கு சதவிகிதம் நிறைந்த தொகுதிகள் விசிகவின் வெற்றிக் கோட்டையாயின. சிதம்பரம் தொகுதியில் விசிக தலைவர் திருமாவளவன் பானை சின்னத்தில் போட்டியிட்டு 2500க்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். விழுப்புரம் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட எழுத்தாளர் ரவிக்குமார் பாமக வேட்பாளரை வீழ்த்தி வெற்றிபெற்றார். தொடர்ந்து திமுக கூட்டணியில் அங்கம் வகித்த விசிக, 2021 சட்டமன்றத் தேர்தலிலும் 4 இடங்களில் வெற்றிபெற்றது. அதேபோல், அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த பாமகவும் 5 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. ஆனால், கடந்த 2016ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ’மாற்றம்... முன்னேற்றம்...’ என்ற வாசகத்துடன் அன்புமணி ராமதாஸ் முதல்வர் வேட்பாளராய் நிறுத்தப்பட்டு, பாமக 234 தொகுதிகளிலும் போட்டியிட்டது. அதில் ஒரு தொகுதியைக்கூட பாமக பெறவில்லை. 

திமுக - விசிக கூட்டணியில் விரிசலா?

இந்த நிலையில், அடுத்த ஆண்டு (2024) நாடாளுமன்றத் தேர்தல் வரவிருக்கும் சூழலில், இப்போதே அதற்கான ஆயத்த பணிகளை மாநில மற்றும் தேசிய கட்சிகள் செய்து வருகின்றன. இதன் காரணமாக திமுக - விசிக கூட்டணியில் விரிசல் ஏற்படலாம் எனவும், அதேநேரத்தில் திமுகவுடன் பாமக கைகோர்க்க வாய்ப்பு உருவாகலாம் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். ”பாஜக, பாமக இருக்கும் கூட்டணியில் நிச்சயம் விசிக இருக்க மாட்டோம்” என்று தொல்.திருமாவளவன் எம்.பி சமீபத்தில் தெரிவித்ததே இதற்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது.

விரிசல் உருவாவதற்கு இதுதான் காரணமா?

திமுக - பாமக நெருக்கம் அதிகமாகி வருவதாகக் கூறப்படும் சூழலில் திருமாவளவன் இப்படிச் சொல்லி இருக்கலாம் எனக் கூறப்படும் நிலையில், சேலத்தில் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், ”திமுகவுடன் கூட்டணியா? அதெல்லாம் வதந்தி. திமுக கூட்டணி குறித்து எந்த பேச்சுவார்த்தையும் இல்லை. திமுகவுடன் கூட்டணி என்ற வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். தேர்தலுக்கு 5 மாதம் முன்னர்தான் பாமக நிலைப்பாட்டை தெரிவிப்போம்” எனத் தெரிவித்திருந்தார்.

என்றாலும், திமுக கூட்டணியில் இருக்கும் விசிக, எதிர்க்கட்சியான அதிமுக பற்றியும், அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை குறித்தும் கூறி வரும் கருத்துக்கள் அரசியல் அரங்கில் சில கருத்துக்களை உருவாக்கியுள்ளது. இரட்டை இலை வழக்கில் அதிமுக வெற்றிபெற்றதையடுத்து, அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமிக்கு திருமாவளவன் வாழ்த்து தெரிவித்திருந்தார். இந்த வெற்றியின்போது, அதிமுகவினரும் கூட்டணியினரும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக குரல் எழுப்பாத நிலையில் திருமாவளவன் வாழ்த்து தெரிவித்திருந்தது முக்கியமாகப் பார்க்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமியின் ஆளுமை என்றே அப்போது பாராட்டி இருந்தார். 

அதிமுகவுக்கு ஆதரவு... திமுகவுக்கு எதிர்ப்பு

இதற்குப் பதிலளித்த திருமாவளவன், “எடப்பாடி பழனிசாமியை பாராட்டியதில் எந்த அரசியல் கணக்கும் இல்லை. அதேநேரத்தில், திமுக கூட்டணியைவிட்டு வெளியேறும் எண்ணம் இல்லை” என்று உறுதியளித்திருந்தார். இதற்கிடையில் திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலினை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்தித்ததும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்தச் சூழலில் திருமா, தொடர்ந்து அதிமுகவின் சில விஷயங்கள் குறித்து ஆதரவு தொனியில் பேசிவருவதும் திமுக அரசுக்கு எதிராக அரசாங்கரீதியாக சில விவகாரங்களில் கருத்து தெரிவித்து வருவதும் கவனிக்க வேண்டியது என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

பாஜக - அதிமுக கூட்டணி குறித்து பேசிய திருமா, ”பாஜகவுடனான கூட்டணி அதிமுகவுக்கு நல்லதல்ல; அதிலிருந்து அதிமுக வெளியேற வேண்டும். பாமக - பாஜக அங்கம் வகிக்கும் கூட்டணியில் விசிக இடம்பெறாது” எனத் தெரிவித்திருந்தார். அதுபோல் திமுகவுக்கு எதிராக, ”தமிழ்நாடு காவல்துறை பாஜகவின் கட்டுப்பாட்டில் இருக்கிறதா” என்று தமிழக அரசை விமர்சித்ததும் அவ்வப்போது திமுக ஆட்சியின் செயல்பாடுகள் குறித்து திருமாவளவன் சுட்டிக்காட்டி வருவதும் கூட்டணிக்கு எதிராக அவர் திரும்பியிருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

அதிமுகவுடன் விசிக கூட்டணி அமைக்குமா?

அதாவது, பாமக ஏற்கெனவே அக்கூட்டணியில் இருந்து கிட்டதட்ட விலகிய நிலையில், தற்போது வரையில் அதிகாரப்பூர்வமாக பாஜக கூட்டணியில் உள்ளது. இந்தச் சூழலில் அதிமுகவிலிருந்து பாஜக விலகினால், அந்தக் கட்சியுடன் விசிக கூட்டணி அமைக்கும் வாய்ப்பு உள்ளது எனச் சொல்லப்படுகிறது. இதற்கு முக்கியக் காரணம், மத்திய அரசைப் பகைத்துக் கொள்ளாத வகையில், திமுக ஒரு சில இடங்களில் பாஜகவிடம் இறங்கிச் செல்வதாக வைக்கப்படும் கருத்துக்களால் திருமாவளவனுக்கு நெருடல் ஏற்பட்டு, அதற்காக முன்கூட்டியே கூட்டணி பற்றி யோசிக்க தொடங்கியிருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது.

மறைமுகமாக திமுகவைப் புகழும் பாமக

அதேநேரத்தில் பாமக, அதிமுகவை கடுமையாக விமர்சனம் செய்து அக்கூட்டணியில் இருந்து வெளியேறி உள்ளது. மாறாக, ஆளும் திமுக அரசை பாமக பெரிதாக விமர்சனம் செய்வதில்லை. திமுகவின் சில திட்டங்களுக்கு அவ்வப்போது பாமக பாராட்டு அறிக்கைகூட வெளியிட்டு வருகிறது. மேலும், ”பாமகதான் மக்கள் பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வருகிறது. பாமக ஒரு அறிக்கைவிட்டால் போதும், முதல்வர் ஸ்டாலின் அதை நிறைவேற்றி விடுகிறார்” என திமுக ஆட்சியை மறைமுகமாகப் புகழ்ந்து வருகிறது.

இது, திமுகவுடன் பாமக இணைவதற்கான வாய்ப்பாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதிலும் நிகழ்வு ஒன்றில் பேசிய மருத்துவர் ராமதாஸ், ”விடியலுக்காக நாம் காத்திருக்கிறோம்; விடியலுக்கு வெகு நேரம் இல்லை” எனப் பேசியிருப்பதுதான் விசிகவுக்கு சந்தேகத்தை எழுப்பியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. விடியல் ஆட்சியான திமுகவின் கூட்டணிக்குள் நுழைவதற்காகத்தான் இப்படி பாமக சொல்லியிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இதுபோன்ற காரணங்களாலேயே திருமாவளவன், திமுகவிலிருந்து விலக நேரிடும் என அவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

திமுக கூட்டணியில் திருமாவளவனுக்கு உறுதியான இடமில்லையா?

பாஜக - அதிமுக கூட்டணி குறித்து திருமாவளவன் பேசிய கருத்துக்குப் பதிலளித்திருக்கும் பாஜகவின் மூத்த நிர்வாகி எஸ்.ஆர்.சேகர், “முதலில் திமுக கூட்டணியில் திருமாவளவன் உறுதியாக இருக்கிறாரா?, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அந்தக் கூட்டணியில் இடம்பெறுவாரா என்பதற்கு எத்தகைய உத்தரவாதமும் இல்லை. மேலும், திமுக கூட்டணியிலேயே திரிசங்கு சொர்க்கத்தில் இருக்கும் அவர், அதிமுகவுக்கு அறிவுரை வழங்க அவர் என்ன தேர்தல் நிபுணரா? அதிமுகவுக்கு இவர் அறிவுரை வழங்குவதே அசிங்கமாக இருக்கிறது. திமுக - விசிக உறவுதான் மிக மோசமாக இருக்கிறது. விசிகதான் திமுக முதுகில் ஏறி சவாரி செய்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.

”திமுகவிலிருந்து விலகும் சிந்தனை விசிகவுக்கு இருக்கிறது”!

மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம், “என்னைப் பொறுத்தவரை அரசியலில் அச்சாரம் போடுவதை நாம் பலமுறை பார்த்ததுதான். ஒருவழியாக அணி மாறுவது என் கண்களுக்குத் தெரிகிறது. அதிமுக - பாஜக கூட்டணி பிரச்சினைக்கு திமுக கூட்டணியில் இருக்கும் திருமாவளவன் கருத்து தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை. இது, அரசியலில் தவறாகத்தான் புரிந்துகொள்ளப்படும். அப்படி புரிந்துகொண்டாலும் பரவாயில்லை என்றுதான் அந்தக் கருத்தை பொதுவெளியில் திருமாவளவன் பகிர்ந்திருக்கிறார். எனவே, திமுக கூட்டணியில் இருந்து விலகுகிற ஒரு சிந்தனை விசிகவுக்கு இருப்பதாக நான் நினைக்கிறேன்.

அதிமுகவில் இருந்து பாஜக விலகினால், பல கட்சிகள் நம் கூட்டணியில் சேரும் என அதிமுகவினர் பலமுறை சூட்சமமாக வெளிப்படுத்தி இருக்கின்றனர். எனவே, தமிழக அரசியல் வானில் கூட்டணி மேகங்கள் மாறுகின்றன; காட்சிகள் மாறுகின்றன. பொறுத்திருந்து பார்க்க வேண்டும். திமுக கூட்டணியில் பாமக இணைய முயல்வதாகச் செய்திகள் வந்துகொண்டுதான் இருக்கின்றன. எனவே பாமக இருக்கும் இடத்தில் விசிக இருக்காது. அதுபோல் பாஜக, திமுக கூட்டணிக்குள் செல்வதற்கு எந்த வாய்ப்பும் இல்லை.

”திருமாவளவனின் முடிவு விசிகவையே பிளவுப்படுத்தும்!”

அப்படி பார்க்கும்போது, பாஜக இல்லாத அதிமுக கூட்டணிக்கு திருமாவளவன் பச்சைக்கொடி காட்டுகிறார் என்றே சொல்லலாம். அதேநேரத்தில் பாமக தனக்கு வழங்கப்படும் தொகுதிகளை வைத்தே கூட்டணி அமைக்கும். பாமக, திமுகவுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக விசிகவுக்கு அடிமட்டத்தில் இருந்து செய்தி கிடைத்திருக்கும். அந்த வகையிலேயே திருமாவளவன் கூட்டணி குறித்து இப்படி பேசியிருக்கலாம். இது, திமுக கூட்டணியில் மனமாச்சரியங்களை ஏற்படுத்தும் என்றுதானே அவர் இப்படி கூறுகிறார். இல்லையேல் இவ்வளவு பெரிய விவாதம் வராது. எனவே, தெரிந்துதான் இது கூறப்படுவதாகத் தெரிகிறது. மேலும், திருமாவளவன் சமீபகாலமாக திமுக தலைமைக்கு எதிரான செயல்பாட்டையும், விசிகவைச் சேர்ந்த ரவிக்குமார் எம்பி, திமுகவுக்கு ஆதரவான நிலைப்பாட்டையும் எடுத்து வருகிறார்கள். ஆக, விசிகவிலும் இரு பிரிவுகள் இருப்பதாகத்தான் நான் உணர்கிறேன். திருமாவளவன் கூட்டணி குறித்து இப்படியொரு முடிவை எடுத்தால், அக்கட்சியிலும் பிளவு ஏற்பட வாய்ப்புண்டு” என தெரிவித்துள்ளார்.

”அது, திருமாவளவனின் ஆலோசனை அல்லது அறிவுரை”!

அதிமுகவின் மூத்த நிர்வாகி செம்மலை, “கூட்டணி குறித்து திருமா மனதில்பட்டதை அல்லது பாஜக மீது அவருக்கு இருக்கும் அதிருப்தியை வெளிக்காட்டிக் கொள்வதற்கு அல்லது அதிமுகவுக்கு ஆலோசனை வழங்குவதாகக்கூட இப்படிச் சொல்லியிருக்கலாம். எது எப்படி இருந்தாலும், எதிர்காலத்தில் எது நல்லது என்பது குறித்து முடிவெடுக்கக்கூடியவர் இபிஎஸ். ஆக, திருமா ஆலோசனையாகவோ அல்லது அறிவுரையாகவோ கூறியிருப்பின் அதுகுறித்து தலைமை முடிவெடுக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

”அரசியலில் எதுவும் நிரந்தரமல்ல!”

மேற்கூறியவர்களின் கருத்துகளை உற்று நோக்கும்போது, நிச்சயம் இரண்டு கூட்டணியிலும் (திமுக - அதிமுக) மாற்றம் ஏற்படலாம் என்கின்றனர், அரசியல் நோக்கர்கள். இதுகுறித்து அரசியல் விமர்சகர்கள், “பாஜகவை கடுமையாக எதிர்க்கக்கூடியவர் திருமாவளவன். அதனாலேயே தற்போது திமுக - காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகித்து வருகிறார். மேலும், அவர்களின் கூட்டணியும் வலிமையாக உள்ளது. ஒருவேளை, பாமக இங்கே வந்தால் வேண்டுமானால் கூட்டணியில் மாற்றம் ஏற்படலாம். ஆனால் மொத்தமாக கூட்டணி உடையும் என்பதை இப்போதே சொல்ல முடியாது. ஆனால் அரசியலில் எதுவுமே நிரந்தரம் கிடையாது. அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்.

கூட்டணி குறித்து திருமா சொன்ன பதில்

ஆனால், பாஜகவை ஆதரிக்கும் கூட்டணியிலும், பாமக இருக்கும் கூட்டணியிலும் திருமாவளவன் அங்கம் வகிக்க மாட்டார் என்பது உறுதி. ஆகையால் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணியிலேயே திருமாவளவன் இருப்பார். இதை, திருமாவளவனே பலமுறை உறுதிப்படுத்தியுள்ளார். அதேநேரத்தில் சட்டமன்றத் தேர்தலில் இது மாறுவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. அதற்குக் காரணமாய், சமீபகாலமாக நிலவும் கசப்பான சம்பவங்களைச் சொல்லலாம்” என்கின்றனர்.

கூட்டணி இல்லாமல் அரசியல் இல்லை; அந்த கூட்டணி எந்த அரசியலிலும் நிலையாய் இருப்பதில்லை. அரசியல் களம் மாறுமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

- ஜெ.பிரகாஷ்