சிறப்புக் களம்

”பணக்கார நண்பர்களுக்குதான் மோடி உதவுகிறார்.. ஏழைகளுக்கு அல்ல” ஆனந்த சீனிவாசன் பேட்டி

”பணக்கார நண்பர்களுக்குதான் மோடி உதவுகிறார்.. ஏழைகளுக்கு அல்ல” ஆனந்த சீனிவாசன் பேட்டி

JustinDurai
பிரதமர் மோடி நேற்று மாலை நாட்டு மக்களிடம் உரையாற்றியபோது, நாட்டின் பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சிப் பாதையில் செல்வதாக குறிப்பிட்டிருந்தார். இதுகுறித்து பொருளாதார நிபுணர் ஆனந்த சீனிவாசனிடம் கேட்டோம். அவர் கூறுகையில்,
 
 
''ஐ.எம்.எப் எனப்படும் சர்வதேச நாணய நிதியம் உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி குறித்து வெளியிட்ட அறிக்கையில் நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் தனிநபர் வருவாயில் அண்டை நாடான வங்கதேசம் இந்தியாவை முந்த வாய்ப்புள்ளதாக தெரிவித்தது.
 
2021- மார்ச் நிதியாண்டில், இந்தியாவின் தனிநபர் வருமானம் 1,877 (டாலர் மதிப்பில்) ஆக இருக்கும் எனவும் வங்காள தேசத்தில் இதே கால கட்டத்தில் தனிநபர் வருமானம் 1,888 டாலராக உயரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் ஐ.எம்.எப் அறிக்கை கூறுகிறது.
 
நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் - ஜூன் வரையிலான முதல் காலாண்டில், பொருளாதாரம், மைனஸ், 30 சதவீதமாக பின்னடைவை சந்தித்துள்ளது. ஜூலை-செப்டம்பர் வரையிலான இரண்டாவது காலாண்டில் பொருளாதாரம் மைனஸ் 8 சதவீதமாக வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்த மூன்று காலாண்டிலும் ஜிஎஸ்டி வசூல் ஆகவில்லை என்று மத்திய அரசே ஒப்புக் கொண்டுள்ளது. ஜிஎஸ்டி வசூல் ஆகவில்லை என்றால் பொருளாதார வளர்ச்சி மீளாததைதான் குறிக்கிறது.
இப்போது பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள்தான் பொருளாதார சரிவிலிருந்து மீண்டெழுந்துள்ளன. இந்தியாவில் 75% பணியாளர்கள் முறைசாரா தொழிலாளர்கள். அவர்கள் இன்னமும் மீளவில்லை. உதாரணமாக சென்னை மெரீனா பீச் சாலையில் கடந்த ஆறு மாதங்களாக சாலையோர வியாபாரிகளை கடை திறக்க அனுமதிக்கவில்லை. அவர்களின் நிலை என்னவாயிற்று? முறைசாரா தொழிலாளர்களின் நிலைமை இதுதான்.
மற்ற நாடுகளில் கொரோனா நோய்த்தொற்று பரவலால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் மற்றும் நிறுவனங்களுக்கு முதல்முறை நிவாரணம் வழங்கி, இரண்டாவது முறையாக நிவாரண நிதி வழங்க முன்வந்துள்ளன. ஆனால் இந்தியாவில் பிரதமர் மோடி தனது பணக்கார நண்பர்களுக்கு உதவி செய்திருக்கிறாரே தவிர ஏழைகளுக்கு என்ன செய்திருக்கிறார்?
 
எரிபொருள் மீது அதிக வரி விதித்து ஏழை, நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தில் சுமை ஏற்றியுள்ளது மத்திய அரசு. வரியில்லை என்றால் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 30 ரூபாய்தான். பஞ்சாப் மற்றும் மராட்டிய கூட்டுறவு வங்கி வங்கியில் பணம் போட்டவர்கள் தினமும் போராடி வருகின்றனர்.
 
கோயம்பேடு சந்தையில் மொத்த விலையில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.70 முதல் ரூ.80 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் சில்லறை விலையில் கிலோ ரூ.100 வரையில் விற்பனையாகிறது. இப்படி விலைவாசி எகிறிக்கொண்டே போகிறது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி இந்த நிலையில் உள்ளது'' என்கிறார் அவர்.