கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் ஐபிஎல் போட்டிகள் வரும் 7-ம் தேதி கோலாகலமாக தொடங்குகிறது. யாருக்கு இலாபம் கிடைக்குதோ இல்லையோ ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் அள்ளப் போகிறது. எப்படியெல்லாம் விளம்பரம் பெற முடியுமோ அப்படியெல்லாம் அனைத்து யுக்திகளையும் பயன்படுத்தி விளம்பரங்களை அள்ளிக் குவித்திருக்கிறது.
இந்தியாவில் அதிக பார்வையாளர்களை கொண்ட ஒரே விளையாட்டு கிரிக்கெட் மட்டுமே. அதனால்தான் விளம்பரங்களுக்கு அதிக மவுசு , அதிக காசு. கடந்த ஐ.பி.எல். போட்டிகளை ஒளிபரப்பிய சோனி நிறுவனம் 1300 கோடி அளவுக்கு விளம்பரங்கள் மூலம் சம்பாதித்தது. ஆனால் இந்த முறை ரசிகர்களின் மனதுக்கு நெருக்கமான சென்னை சூப்பர் கிங்ஸ்சின் வரவு, விளம்பர வருவாயையும், வரவையும் அதிகரித்துள்ளது.
நாமெல்லாம் ஐ.பி.எல் பார்க்கும் போது ஒவ்வொரு ஓவருக்கும் இடைவேளை வரும் போது , வோடஃபோன், சேம்சங், பெப்சி, நிவியா , எம்.ஆர்.எப், ஹோண்டா, ஸ்விக்கி உணவு செயலி ஆகிய நிறுவனங்களின் விளம்பரங்களே ஆக்கிரமிக்க போகிறது. இந்த நிறுவனங்களின் விளம்பரங்கள் அதிக முறை ஒளிபரப்பாகும் வகையில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
இது ஒருபுறம் இருக்க, ஸ்டார் நிறுவனத்தோட செயலிகளில் ஒன்றான ஹாட் ஸ்டார் மூலம் 150-ல் இருந்து 200 கோடி வரை சம்பாதிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதோடு ஆன் ஏர் ஸ்பான்சர் என்று ஒரு பிரிவும் இருக்கிறது. அதன் மூலமும் சில நிறுவனங்களை ஒப்பந்தம் செய்துள்ளது ஸ்டார் நிறுவனம். அதன் மூலமும் 200 கோடி அளவுக்கு வருமானம் ஈட்டும் திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறது ஸ்டார் நிறுவனம்.
இவற்றோடு சேர்த்து நிறுவனங்களின் பொருட்களை பிரபலப்படுத்தி தருவதாக கூறி பி.சி.சி.ஐ சார்பிலும் ஒரு திட்டம் வைத்திருக்கிறார்கள். ஆங்காங்கே ப்ளக்ஸ் பேனர்கள், ஸ்டெம்புகள், எல்.இ.டி திரைகள், மைதான ஓவியம் போன்றவற்றில் நிறுவனம் சார்ந்த விளம்பரங்கள் இடம்பெறும். இதற்காக ஸ்பான்சர்ஸ் என்ற முறையில் பிசிசிஐ மற்றும் நிறுவனங்கள் இடையே ஒப்பந்தம் போடப்படும். கடந்த ஆண்டு இதன் மூலம் மட்டும் 570 கோடி சம்பாதித்தது பி.சி.சிஐ.