சிறப்புக் களம்

'கிரிக்'கெத்து 19: காபாவில் ஆஸ்திரேலியாவை வேட்டையாடிய குட்டிப் புலிக் கூட்டம்!

'கிரிக்'கெத்து 19: காபாவில் ஆஸ்திரேலியாவை வேட்டையாடிய குட்டிப் புலிக் கூட்டம்!

EllusamyKarthik

இந்திய கிரிக்கெட் அணியின் தீவிர ரசிகர்களால் என்றென்றும் மறக்க முடியாத போட்டியாக அமைந்தது கடந்த ஆண்டு இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளிடையே நடைபெற்ற காபா (பிரிஸ்பேன்) டெஸ்ட் போட்டி. ஆஸ்திரேலிய மண்ணில் ஆஸி வீரர்களுக்கு தண்ணிக் காட்டுவது லேசான செயல் அல்ல. அது அசாத்திய சாதனை. அண்மையில் இந்த வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை இந்தியா ருசித்து ஓராண்டு நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது. அது குறித்து பலரும் சமூக வலைதளங்களில் சொல்லியிருந்தனர். இந்தியாவின் அந்த வெற்றியை Recap செய்வோம்.  

1988-க்கு பிறகு காபாவில் ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் போட்டியில் தோல்வியை தழுவியது கிடையாது. அதனால் 32 ஆண்டு காலமாக அந்த மைதானம் ஆஸி-யின் வெற்றிக் கோட்டை என்றெல்லாம் புள்ளிவிவரங்கள் சொல்லியிருந்தன. அதே போல அந்த அணியின் ஆடும் லெவனும் அனுபவம் நிறைந்த வீரர்களை அடங்கியிருந்தது. 

மறுபக்கம் இந்தியாவோ டெஸ்ட் போட்டிகளில் (ஏன் சர்வதேச போட்டிகளில் என்று கூட சொல்லலாம்) அதிகம் விளையாடிய அனுபவமில்லாத பவுலிங் யூனிட்டுடன் களம் இறங்கியது. முகமது சிராஜ், நடராஜன், ஷர்துல் தாக்கூர், நவ்தீப் சைனி மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகிய பவுலர்கள்தான் அணியின் பிரதான பந்து வீச்சாளர்கள். இந்த கூட்டணி இந்த போட்டிக்கு முன்னதாக மொத்தமாக 13 டெஸ்ட் விக்கெட்டுகளைதான் வீழத்தியிருந்தது. இதில் நட்டியும், வாஷியும் அறிமுக வீரர்களாக விளையாடி இருந்தனர். 

நான்கு போட்டிகளை கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் மூன்று போட்டி நிறைவடைந்தது. அதில் இரு அணிகளும் தலா 1 - 1 என வெற்றி பெற்று தொடர் சமநிலையில் இருந்தது. மூன்றாவது போட்டியை இந்தியா டிரா செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்தான் தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கப் போகும் காபா டெஸ்ட் போட்டி ஆரம்பமானது. 

கேப்டன் கோலி இல்லாமல் போனாலும் அணியை துடிப்போடு முன்னின்று வழிநடத்திச் சென்றார் ரஹானே. அவரது கள வியூகங்கள் மெல்பேர்ன், சிட்னி, காபா என வரிசையாக எதிரணிக்கு கிலியூட்டியது. இந்த தொடரின் முதல் போட்டி அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்றது. அதில் இந்தியா இரண்டாவது இன்னிங்ஸில் 36 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி இருந்தது. மூன்றே நாளில் முடிந்த அந்த போட்டியில் கேப்டன் கோலி விளையாடி இருந்தார். அப்படிப்பட்ட அதிர்ச்சிகரமான தோல்விக்கு பிறகு அணியை உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்ட அணியை மீட்டெடுத்து வந்தார் ரஹானே. 

முதல் நாள்!

காபா போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட் செய்தது. டேவிட் வார்னர் - மார்கஸ் ஹாரிஸ் இணையர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரில் வார்னரை வெளியேற்றினார் சிராஜ். எட்டாவது ஓவரில் ஹாரிஸை அவுட் செய்தார் தாக்கூர். ஆட்டத்தில் முதல் ஒரு மணி நேரம் அப்படியே இந்தியாவின் கன்ட்ரோலில் இருந்தது. 

பின்னர் ஸ்மித்தும், லபுஷேனும் இணைந்து சிறிய அளவில் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஸ்மித் வாஷியின் சுழலில் சிக்கினார். இருந்தாலும் அடுத்த வந்த பேட்ஸ்மேன்களோடு லபுஷேன் கூட்டணி அமைத்துக் கொண்டே இருந்தார். அதனால் ஆஸ்திரேலியா முதல் நாள் ஆட்டத்தை 274 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில் முடித்தது. லபுஷேன் சதம் விளாசியிருந்தார்.  

இரண்டாம் நாள்!

இரண்டாவது நாளில் 25.2 ஓவர்கள் ஆடிய ஆஸ்திரேலியா 95 ரன்களை சேர்த்து ஆல் அவுட்டானது. இந்திய அணியின் முதல் இன்னிங்ஸில் கில் மற்றும் ரோகித் அவுட்டாக 26 ஓவர்கள் விளையாடி 62 ரன்களை எடுத்திருந்தது. மழை குறுக்கிட்ட காரணத்தால் அன்றைய நாளின் கடைசி செஷன் கைவிடப்பட்டது. 

மூன்றாம் நாள்!

கேப்டன் ரஹானேவும், புஜாராவும் மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். இருந்தாலும் இந்திய பேட்ஸ்மேன்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர். புஜாரா, ரஹானே, மயங்க், பண்ட் என பிரதான பேட்ஸ்மேன்கள் பெவிலியன் திரும்பினர். இந்தியா 186 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்தது. ஆனால் தாக்கூர் மற்றும் வாஷியின் பார்ட்னர்ஷிப் அணியை சரிவிலிருந்து மீட்டது. இருவரும் இணைந்து 123 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இருவரும் அரை சதம் கடந்தனர். இந்திய 336 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலியா இரண்டாவது இன்னிங்ஸில் 21 ரன்களை சேர்த்தது. ஆட்டத்தில் 54 ரன்கள் முன்னிலை பெற்று மூன்றாம் நாள் ஆட்டத்தை முடித்தது ஆஸி. 

நான்காம் நாள்!

நான்காவது நாள் ஆட்டத்தை விக்கெட் இழப்பின்றி தொடங்கிய ஆஸ்திரேலியா, இரண்டாவது இன்னிங்ஸில் 294 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. 114 ஓவர்களில் 328 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இந்தியா விரட்டியது. சிராஜ், இரண்டாவது இன்னிங்ஸில் ஐந்து விக்கெட்டுகளை அள்ளி இருந்தார். மழை குறுக்கிட்டதால் இந்தியா 4 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் நிறுத்தப்பட்டது. 

ஐந்தாம் நாள்!

ரோகித் 7 ரன்களில் அவுட்டானார். இருந்தாலும் கில் மற்றும் புஜாரா 114 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். கில் 91 ரன்களில் அவுட்டானார். கேப்டன் ரஹானே 24 ரன்கள் எடுத்து அவுட்டானார். ஆட்டத்தின் கடைசி நாளின் முதல் இரண்டு செஷனில் இந்தியா 183 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்திருந்தது. 

கடைசி செஷனில் 145 ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட்டது. புஜாரா 314 நிமிடங்கள் களத்தில் நின்று பேட் செய்து 56 ரன்கள் எடுத்து அவுட்டானார். அதன் பிறகு விக்கெட் கீப்பர் பண்ட் ஆட்டத்தை முடித்துக் கொடுத்தார். அவர் 89* ரன்கள் எடுத்து அசத்தினார். வின்னிங் ஷாட்டாக பந்தை பவுண்டரிக்கு விரட்டினார் பண்ட். இந்திய 329 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை 2 - 1 என்ற கணக்கில் இந்தியா வென்றது. 

இந்த வெற்றிக்கு பிறகு பேசிய ஆஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர், “ஒருபோதும் இந்தியர்களை குறைத்து மதிப்பிடவே மாட்டோம். மொத்தமாக 1.5 பில்லியன் இந்தியர்களில் முதல் 11 பேரிடம் விளையாடுவது கடினம்தான்” என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.