பாலியல் தொல்லையால் பாதிப்படைந்தோம் என்ற குரல் நடிகைகளிடம் இருந்து கேட்டவுடன், அது ஊடகங்கள், செய்தித்தாள்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலமாக அனைவருக்கு தெரிகிறது. ஆனால் இந்தியாவில் 65 கோடி பெண் பாலினத்தினர் வசிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலோன பெண்களின் கொடுமை யாருக்கும் தெரிவதும் இல்லை. அவர்கள் வெளியில் கூறுவதும் இல்லை. இந்தியாவில் பல கோடி பெண்கள் பணிக்கு செல்பவர்கள். திருமணத்திற்கு முன்னும், திருமணத்திற்கு பின்னும் பணிக்கு செல்லும் பெரும்பாலான பெண்கள் சந்திக்கும் சிரமங்களும், கொடுமைகளும் ஏராளம் என்று கூறலாம்.
காலையிலே வீட்டில் வேலை செய்து கலைத்துப் போகும் இவர்கள், வீட்டு வேலைகளை நிறைவு செய்த கையுடன் ஒரு நிமிடம் கூட அமராமல் கையில் லஞ்ச் பாக்ஸை எடுத்துக்கொண்டு அவசரத்துடன் ஓடுகின்றனர். தெருக்களின் அடிப்படையில் கணக்கெடுத்தால், தெருவிற்கு ஒரு சில பெண்களே இருசக்கர வாகனத்தில் பணிக்கு செல்பவர்கள். மீதமுள்ள பெரும்பாலான பெண்கள் பேருந்துகள், ஷேர் ஆட்டோக்கள் என்று பயணிப்பவர்கள் தான். இவ்வாறு பணிக்கு செல்லும் பெண்களுக்கு பேருந்துகள் முதல் அனைத்து இடங்களிலும் இன்னல்கள் தான். கூட்டமான பேருந்தில் இடம் கிடைத்தால் போதும் என பயணிக்கும் தாய்மார்களிடம், வக்கற புத்தியுடன் பயணிக்கும் சில மிருங்களும் செல்கின்றன என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.
பணிபுரியும் இடம், அலுவலகம் மற்றும் வெளியுலகத்தில் பழகுபவர்கள் ஏராளமானோர் ஆரம்பத்தில் நல்ல விதமாக பழகி, பின்னர் நேரம் பார்த்து தங்கள் சுய ரூபத்தை பிரதிபலிக்கின்றனர். இதனால் மனக்குழப்பங்களுக்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகும் பெண்கள் ஆயிரக்கணக்கானோர். பணிக்கு செல்வதை விட்டுவிடலாம் என்ற எண்ணத்திற்கே அவர்கள் தள்ளப்படுகிறார்கள். இருப்பினும் குடும்ப நிலை, பிள்ளைகளின் படிப்பு, கடன், எதிர்காலம் என சிந்திக்கும் போது, கண்ணீரை மனதிற்குள் வடித்துவிட்டு அடுத்த நாள் பணிக்காக வீட்டிலிருந்த நடைபோட தொடங்குகின்றனர்.
இவ்வாறு பணிக்கும் செல்லும் பெண்களில் 40%க்கும் மேற்பட்டவர்களுக்கு பல்வேறு காரணங்களால் உடல்நல பாதிப்புகளும் வந்துவிடுகின்றன. டிஜிட்டல் இந்தியா, ஸ்மார்ட் சிட்டி, மாநகரம், தூய்மையான கிராமம் என பல திட்டங்கள் நம் காதுகளில் விழுவதை நாம் கேட்டிருப்போம். ஆனால் நகரங்களிலும் சரி, கிராமங்களிலும் சரி பணிக்கு செல்லும் பெண்கள் முதல், வெளியில் செல்லும் பெண்கள் வரை எவரும் பொது இடங்களில் கழிவறைகளை பயன்படுத்துவதில்லை. உண்மையில் அவைகள் பயன்படுத்தும் அளவிற்கு இருக்கிறது என யாராலும் உறுதிபடக்கூற இயலாத நிலையே உள்ளது.
கழுவப்படதா, கதவுகள் இல்லாத பொதுக்கழிப்பிடங்களை பெண்கள் அல்ல, ஆண்களே பயன்படுத்த முடியாது. ஐடி நிறுவனங்கள், சில தனியார் நிறுவனங்கள் தவிர ஜவுளிக்கடைகள், ஷோரூம்கள், சிறு தொழில்கள் செய்யும் லட்சக்கணக்கான பெண்கள் பெரும்பாலும் வெளிப்புறங்களில் சிறுநீர் கழிப்பதே இல்லை என்பது யாருக்கும் தெரிவதில்லை. இதனால் சிறுநீரகத்தில் நோய் தொற்று ஏற்பட்டு அவதிப்படும் பெண்கள் லட்சக்கணக்கானோர். அதுமட்டுமின்றி காலை வீட்டு வேலையை முடிப்பதற்குள் அலுவலக பணிக்கு நேரமாகிவிடுவதால், காலை உணவு எனும் வழக்கம், பல்லாயிரக்கணக்கான பெண்களின் உணவு முறையில் இருந்து நீக்கப்பட்டுள்ளது எனக்கூறலாம்.
சில நாட்களில் பணிச்சுமை காரணமாக இரவு நேரங்களில் பணி முடிந்து வீடு திரும்பும் பெண்களுக்கு வீடு வந்து சேரும் வரை ஒவ்வொரு நிமிடமும் நரகம் தான். அந்த அளவிற்கு நம் நாட்டில் பாதுகாப்பு இல்லாமல் இல்லை, எத்தனை பெண்கள் இரவு நேரங்களில் பயணிக்கிறார்கள் என்று தோன்றலாம். ஆனால் இரவு நேரத்தில் பணி முடிந்து வீடு திரும்பும் பெண்களுக்கு தெரியும் அது உண்மையா, இல்லையா என்று. எடுத்துக்காட்டாக சொல்ல வேண்டுமென்றால் இரவு நேரத்தில் தனியாக அல்ல, உடன் ஒரு ஆண் நண்பருடன் பேருந்தில் பயணித்த டெல்லி மருத்தவக் கல்லூரி மாணவி பாலியல் கொடுமை செய்யப்பட்டு, இறக்கமின்றி கொல்லப்பட்டது அனைவரும் அறிந்ததே.
இளம் பெண்கள் மட்டுமல்ல, பிறந்து 8 மாதம் ஆன பச்சைக் குழந்தைகள் முதல் பள்ளிக்கு செல்லும் உலகமறியாக சிறுமிகள் வரையிலும் நாள்தோறும் பாலியல் கொடுமைக்கு பலியாகுவோர் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே தான் செல்கின்றது. பெண் குழந்தைகளை பள்ளிக்கும், கல்லூரிகளுக்கும் அனுப்பி விட்டு வீட்டில் இருக்கும் பெற்றோர்கள், நேரம் முடிந்து அவர்கள் வீடு திரும்பும் வரை பதறுவதை வார்த்தைகளால் கூற முடியாது. ஏனெனில் நாள்தோறும் பாலியல் கொடுமைக்கு பலியாகும் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை அவர்களை அந்த நிலைக்கு தள்ளியுள்ளது. இந்தக் கொடுமைகள் சாதாரண குடும்பத்தை சேர்ந்த பெண்களுக்கு மட்டுமல்ல, பிரபலமான நடிகைகள் முதல் பாதுகாப்பு அளிக்க வேண்டிய காவல்துறையில் பணிபுரியும் பெண்கள் வரை இதே நிலைதான்.
பெண்களுக்கு எதிரான கொடுமைகளுக்கான சட்டங்களை மட்டும் கடுமையாக மாற்றினால் இந்தப் பிரச்னை தீர்ந்து விடாது எனக்கூறும் பெண் உரிமை ஆர்வலர்கள், தவறுகள் நடக்கமால் இருக்கும் வகையிலும், பணிக்கும் செல்லும் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும்ச ட்டங்களை ஏற்படுத்த வேண்டும் என்று கூறுகின்றனர். தவறான எண்ணங்களுடன் பெண்களை பார்க்கும் ஆண்கள், தன்னை பெற்ற ஒரு தாயும் ஒரு பெண் தான் என்பதை நினைவில் கூற வேண்டும். தாங்கள் எந்தப் பெண்ணிற்கும் தொல்லை அளிக்கவில்லை என்றாலும், தங்களால் முடியும் நேரங்களில் அனைத்து ஆண்களும் பெண்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்க வேண்டும். இந்த 21ஆம் நூற்றாண்டில் பெண்கள் இல்லாத துறைகள்சா த்தியமில்லை என்ற நிலை ஏற்பட்டு வரும் சூழலில், அவர்களுக்கான பாதுகாப்பு என்பது மட்டும் சாத்தியமற்ற நிலையிலே உள்ளது.
இத்தனை கொடுமைகளுக்கு மத்தியிலும் மனதை கல்லாக்கிக்கொண்டு பணிக்கு செல்லும் பெண்களை, நாட்டிற்காக எல்லையில் உயிரைக் கொடுக்கவும் துணிந்த ராணுவ வீரர்களுடன் ஒப்பிட்டால் அது மிகையாகது.