சிறப்புக் களம்

277 பணியிட மாற்றங்கள்... தேர்தல் பணியில் விழிபிதுங்கும் காவல்துறை... பின்புலம் என்ன?

277 பணியிட மாற்றங்கள்... தேர்தல் பணியில் விழிபிதுங்கும் காவல்துறை... பின்புலம் என்ன?

kaleelrahman

தேர்தலையொட்டி சென்னை நகரில் ஒரே இடத்தில் நீண்ட நாட்கள் பணியில் இருந்த 277 காவல் ஆய்வாளர்களை பணியிடமாற்றம் செய்து டிஜிபி உத்தரவிட்டுள்ளார். காலதாமதமாக வந்த பணியிடமாற்றத்தால் குறைந்த காலத்தில் புதிய இடத்தில் எப்படி தேர்தல் பணிபுரிவது என்று விழிபிதுங்கி உள்ளனர்.

சென்னை நகரின் முக்கிய காவல் நிலையங்களான எழும்பூர், யானைக்கவுனி, நுங்கம்பாக்கம், சூளைமேடு, பெரியமேடு, கீழ்பாக்கம், மாம்பலம், கிண்டி, தரமணி, நீலாங்கரை, கோயம்பேடு, அயனாவரம், பாண்டிபஜார், ஆதம்பாக்கம், ஆயிரம் விளக்கு, கொடுங்கையூர், புழல், அண்ணாசதுக்கம், குரோம்பேட்டை, கோட்டூர்புரம், செகரேட்டரியேட் காலனி, அடையாறு, கிண்டி, முத்தியால்பேட்டை, கோடம்பாக்கம், எம்ஜிஆர் நகர் உள்பட 277 காவல் நிலையங்களின் ஆய்வாளர்களை பணியிடமாற்றம் செய்து தமிழக காவல்துறை டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார். இதில் 49 போக்குவரத்து காவல் ஆய்வாளர்களும் அடங்குவர்.

ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் காவல் அதிகாரிகளை தேர்தல் சமயத்தில் பணியிடமாற்றம் செய்ய வேண்டும் என்பது தேர்தல் நடத்தை விதி. ஆகவே தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்பே அதற்கான பணியில் உயர்அதிகாரிகள் இறங்கி விடுவார்கள். குற்ற நிகழ்வுகளில் தொடர்புடையவர்கள், ஊழல் குற்றச்சாட்டு, பணியில் ஒழுங்கீனம் ஆகிய குற்றச்சாட்டுக்கள் உள்ள காவல் அதிகாரிகள் அடையாளம் காணப்பட்டு அவர்கள் மாற்றப்படுவதும் வழக்கம். ஆனால் ஐபிஎஸ் அந்தஸ்த்தில் உள்ள அதிகாரிகள் ஒரு சிலர் மட்டுமே மாற்றப்பட்டனர். கீழ்மட்ட அளவில் பெரிய அளவில் யாரும் மாற்றப்படவில்லை.

ஆனால் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு 21 நாட்கள் கழித்து, காவல் ஆய்வாளர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது நடைமுறைக்கு முரணானது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கின்றனர். தேர்தல் அறிவிக்கப்பட்ட உடனே சர்ச்சைக்குரிய காவல் அதிகாரிகள் மாற்றப்பட்டு அந்த இடத்துக்கு புதிய அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள். இதனால் புதிய இடத்துக்கு வரும் ஆய்வாளர்கள் அந்த இடத்தை ஆய்வு செய்து களப்பணியாற்றி தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு குறைந்தது 20 நாட்களாவது ஆகும்.

சென்னை நகரில் மொத்தம் 1,216 பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளன. அதில் 30 வாக்குச் சாவடிகள் மிகவும் பதற்றம் நிறைந்தவையாகும். இந்த பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளில் என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து இன்ஸ்பெக்டர்கள் களப்பணியாற்றுவது முக்கியமான ஒன்று. ஆனால் தேர்தலுக்கு இன்னும் குறைவான நாட்களே உள்ள நிலையில் இன்ஸ்பெக்டர்கள் மாற்றம் நிகழ்ந்துள்ளதால் புதிய இன்ஸ்பெக்டர்கள் அங்கு சென்று பொறுப்பேற்று அந்த இடத்தை புரிந்துணர்ந்து தேர்தல் களப்பணியாற்றுவது என்பது சவாலானா விஷயம்.

சட்டப் பேரவைத் தேர்தல் பணி என்பது எப்போதுமே அதி நுண்ணறிவாக செயல்படக்கூடிய பணியாகும். அப்படிப்பட்ட பணியில் இன்ஸ்பெக்டர்கள் ஆசுவாசப்படுத்துவதற்கு கூட நேரம் ஒதுக்காமல் குறைந்த கால கட்டத்தில் இடம் மாற்றப்பட்டுள்ளது சிரமமான விஷயம்தான். இந்த குறைந்த சமயத்தில் இன்ஸ்பெக்டர்கள் எப்படி தேர்தல் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபடுவார்கள் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது என்கின்றனர் சில காவல்துறை அதிகாரிகள்