'முதலீடு குறித்து விரிவாக எழுதிவிட்டு முதலீட்டுக்கு முன்பு காப்பீடு எடுக்க வேண்டும் என முடித்தால் என்ன நியாயம்?' என பலருக்கும் கேள்வி எழலாம். இதற்கு முக்கியக் காரணம், பலரும் காப்பீட்டை முதலீடாக பார்ப்பதுதான். காப்பீடு என்பது முதலீடு கிடையாது. அது ஒரு பாதுகாப்பு நடவடிக்கை. இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது ஹெல்மெட் அணிந்து செல்கிறோம், விமானத்தில் செல்லும்போது பாராஷூட் இருக்கும், படகில் செல்லும்போது லைஃப் ஜாக்கெட் கொடுப்பது போல காப்பீடு என்பது ஒரு பாதுகாப்பு நடவடிக்கைதான். காப்பீடு என்பது முதலீடு அல்ல.
நாம் இரு சக்கர அல்லது நான்கு சக்கர வாகனத்துக்கு காப்பீடு செய்கிறோம். ஆனால், அங்கு முதலீடு குறித்து எதையும் யோசிப்பதில்லை. அந்தக் காப்பீடு மீது எந்த வருமானமும் கிடையாது. ஆனால், அதுகுறித்து யாரும் யோசிப்பதில்லை. எனினும், ஆயுள் காப்பீடு என வரும்போது மட்டும் வருமானம் குறித்து யோசிக்கத் தொடங்குகிறோம். இன்ஷூரன்ஸை பொறுத்தவரை டேர்ம் இன்ஷூரன்ஸ் மற்றும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் ஆகிய இரண்டும் முக்கியம்.
டேர்ம் இன்ஷூரன்ஸ்: ஒருவர் பாலிசி எடுக்கிறார். எதிர்பாராத சூழலால் அவர் உயிரிழக்க நேரிட்டால், அவர் குடும்பத்துக்கு பாலிசி தொகை கிடைக்கும். அவருடைய பாலிசி காலம் முழுவதும் இறக்கவில்லை எனில், எதுவும் கிடைக்காது. இந்த காப்பீட்டு வகையை வருமானமாக கருதுவதால்தான் பலரும் 'டேர்ம் இன்ஷூரன்ஸ்' எடுப்பதில்லை.
அனைத்து உயிர்களின் மதிப்பும் சமம்தான் என்றாலும், ஒவ்வொருவரின் வருமானத்தைத் தாண்டி இன்ஷூரன்ஸ் எடுக்க முடியாது. ஒருவருடைய ஆண்டு வருமானத்தில் 15 முதல் அதிகபட்சம் 20 மடங்கு வரை இன்ஷூரன்ஸ் எடுத்துக்கொள்ள முடியும். அதுதான் சரியான அளவும் கூட.
ஒருவரின் மாத சம்பளம் 50,000 ரூபாய் என்றால், ஆண்டுக்கு ரூ.6 லட்சம். அப்படியானால் சுமார் 1 கோடி ரூபாய் அளவுக்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்துக்கொள்ளலாம். ஒரு கோடி ரூபாய்க்கு இதர எண்டோவ்மென்ட் பாலிசிகளை எடுக்க முயன்றால் லட்சக்கணக்கில் பிரீமியம் செலுத்த வேண்டியிருக்கும். ஆனால், அதே ஒரு கோடி ரூபாய்க்கு 15,000 ரூபாய் அளவுக்கு (வயது முக்கியம், வயது அதிகரிக்கும்போது டெர்ம் இன்ஷூரன்ஸின் பிரீமியமும் அதிகரிக்கும்) பிரீமியம் செலுத்தினால் போதும். சில காப்பீட்டு நிறுவனங்களில் தொகை கொஞ்சம் கூடுதலாக இருக்கலாம்.
எதை வைத்து பாலிசி தொகை முடிவு செய்யப்படுகிறது என்ற கேள்வி எழலாம். ஆண்டுக்கு 6 லட்ச ரூபாய் சம்பளம் வாங்குபவர் ஒரு கோடி ரூபாய் காப்பீடு எடுக்கிறார். சில ஆண்டுகளுக்குப் பிறகு அவர் இறந்துவிட நேரிட்டால், அவர் குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் கிடைக்கும். அந்த தொகையை வைப்பு நிதியில் முதலீடு செய்யும்பட்சத்தில் தற்போதைய வட்டி விகிதத்தில் ஆண்டுக்கு 7 லட்ச ரூபாய் கிடைக்கும். அதாவது குடும்பத்துக்காக உழைக்கும் நபர் இல்லை என்றாலும் அவர் மூலமாக கிடைக்கும் நிதி குடும்பத்துக்கு கிடைத்துக்கொண்டே இருக்கும் என்பதுதான் முக்கியமான காரணம்.
அடுத்த முக்கியமான காரணம், கடன். முன்பெல்லாம் கடன் வாங்காமல் இருப்பதை வைத்து வாழும் முறை இருந்தது. தற்போது கடன் வாங்கவேண்டிய சூழல் இருக்கிறது. அது வீட்டுக் கடனாக இருக்காலாம், வாகனக் கடன், தனிநபர் கடன் என எந்த வடிவில் வேண்டுமானாலும் இருக்கலாம்.
மாதம் குறிப்பிட்ட தொகையை கடனாக செலுத்த வேண்டிய சூழலில், சம்பாதிக்கும் நபர் உயிரிழந்தால் வருமான இழப்பு மட்டுமல்லாமல் கடன் தொகையையும் செலுத்த வேண்டி இருக்கும்.
'ஒருவேளை நான் உயருடன் இருக்கும் பட்சத்தில், நான் செலுத்திய பிரீமியம் வீணா?' என்னும் கேள்வி பலருக்கும் இருக்கிறது. இந்த குறையை போக்குவதற்காக புதிய வகை பாலிசிகளை காப்பீட்டு நிறுவனங்கள் உருவாக்கின. அதாவது பாலிசி காலம் முடிந்த பிறகும் பாலிசிதாரர் உயிருடன் இருந்தார் என்றால், அவர் செலுத்திய பிரீமியம் தொகை திரும்பி கொடுக்கப்படும். கேட்பதற்கு நல்ல திட்டமாக இருந்தாலும், சாதாரண பாலிசியை விட பிரீமியத்தை திருப்பி கொடுக்கும் பாலிசிகளில் பிரீமியம் தொகை மிக அதிகமாக இருக்கும். அதனால் இதுபோன்ற பாலிசிகள் எடுப்பதை தவிர்ப்பதே நல்லது.
பாலிசி காலம் முழுவது ஒரே பிரீமியத்தைதான் செலுத்தப்போகிறோம். அதனால் 25 வயதில் பாலிசி எடுப்பதை விட்டுவிட்டு, 35 வயதில் பாலிசி எடுத்தால் கூடுதல் பிரீமியம் செலுத்த வேண்டியிருக்கும். அதேபோல உங்களின் ஓய்வு காலத்துக்கு பிறகு இந்த பாலிசி தேவையில்லை. நீங்கள் வேலையில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு டேர்ம் இன்ஷூரன்ஸ் அவசியமில்லை.
ஹெல்த் இன்ஷூரன்ஸ்: ஒரு நோய் ஒரு குடும்பத்தை நிலை குலைய வைக்கமுடியும். இருக்கும் மொத்த சேமிப்பையும் கரைக்க முடியும். அதேபோல ஒரு குடும்பத்தை கடனாளி ஆக்கும் வலிமையும் நோய்களுக்கு உண்டு. அதனால், மருத்துவ காப்பீடு என்பது அனைவருக்கும் அவசியமானது. இது, இந்த கொரோனா பேரிடர் காலத்தில் பலரும் இதை உணர்ந்திருப்பர்.
ஹெல்த் இன்ஷூரன்ஸை பொறுத்தவரையில் தனிநபருக்கும் எடுத்துக்கொள்ளலாம்; மொத்தக் குடும்பத்துக்கும் சேர்த்தும் எடுத்துக்கொள்ளலாம். ஒட்டுமொத்தக் குடும்பத்துக்கும் பாலிசி எடுக்கும்போது அந்தக் குடும்பத்தில் யாருக்கு அதிக வயதோ அவரின் வயதை அடிப்படையாக கொண்டுதான் பிரீமியம் இருக்கும். அதனால், தாத்தா - பாட்டிகளை குடும்ப இன்ஷூரன்ஸில் சேர்க்காமல் இருப்பது நல்லது. இவர்களுக்கு தனியாக பாலிசிகளை எடுக்கலாம்.
என்ன கிடைக்கும்? - குறைந்தபட்சம் 24 மணி நேரம் மருத்துவமனையில் இருக்கும் பட்சத்தில் சிகிச்சைகாக செலவுகளை காப்பீடு மூலம் சரிசெய்து கொள்ளலாம். அதற்காக அனைத்து செலவுகளையும் காப்பீடு ஏற்காது. உங்களுக்கான அறை வாடகை அளவு 2000 ரூபாய் என நிர்ணயம் செய்யப்படுகிறது. ஆனால், நீங்கள் 3000 ரூபாய் அறையில் தங்குகிறீர்கள். இருந்தாலும் மருத்துவமனையின் மொத்த பில் தொகை உங்கள் பாலிசி தொகையை விட குறைவாக இருந்தாலும் ஒவ்வொன்றுக்கும் உச்ச பட்ச அளவு நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. அதுவரை மட்டுமே க்ளைம் கிடைக்கும். அதற்கு மேலான தொகையை நாம்தான் செலுத்த வேண்டியிருக்கும்.
ஒவ்வொரு காப்பீட்டு நிறுவனங்களுக்கும் நெட்வொர்க் ஹாஸ்பிட்டல் பட்டியல் இருக்கும். அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெறும்போது நேரடியாக காப்பீட்டு நிறுவனங்களே பில் தொகையை செலுத்துவிடும்.
அவசர காலச் சூழலில் வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெரும் நிலை இருந்தால், பில் தொகை, டிஸ்சார்ஜ் சம்மரி, பார்மசி பில் உள்ளிட்ட அனைத்தும் தாக்கல் செய்யும் பட்சத்தில் க்ளைம் தொகை உங்கள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். ஏற்கெனவே சொன்னதுபோல நாம் கொடுக்கும் அத்தனை பில்களுக்கும் பணம் கிடைக்கும் என சொல்ல முடியாது. நம்முடைய பாலிசிக்கு ஏற்ப பணம் சுமார் 15 நாட்களில் கிடைக்கும்.
சிலருக்கு அலுவலகமே ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுத்திருக்கும். அதில் எந்தவிதமான பிரச்னையும் இல்லாமல் க்ளைம் செய்திருப்பார்கள். ஆனால், தனியார் வேலை என்றுமே நிரந்தரம் என்பது அர்த்தமில்லை. நிறுவனம் கூட நிலையாக இருக்கும்; ஒருவேளை நீங்கள் வேறு வேலைக்கு மாறினால், அந்த நிறுவனத்தில் காப்பீடு வசதியில்லை என்றால், நிலைமை சிக்கலாகிவிடும்.
அதனால், நிறுவனத்தில் குரூப் இன்ஷூரன்ஸ் இருக்கிறது என்பதை கருத்தில்கொள்ளாமல் தனியாக பாலிசி எடுத்துக்கொள்வது நல்லது. ஆயுள் காப்பீட்டை போல இளம் வயதிலேயே ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுத்துக்கொள்வதும் நல்லது.
'நான் ஆரோக்கியமாக இருக்கிறேன், நல்ல நிறுவனத்தில் வேலை செய்கிறேன்' என்பதையெல்லாம் மறந்துவிட்டு உங்களுக்கென ஒரு ஹெல்த இன்ஷூரன்ஸ் எடுங்கள். இரு வகையான பாலிசிகளில் செலுத்தப்படும் பிரீமியத்துக்கு வரிச்சலுகை பெற்றுக்கொள்ள முடியும் என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.
முந்தைய அத்தியாயம்: பணம் பண்ண ப்ளான் B - 2: சேமிப்பு Vs முதலீடு... வித்தியாசமும் சில தெளிவுகளும்!