சிறப்புக் களம்

கடன் தவனையை கட்ட முடியவில்லையா? நிதி நிறுவன நெருக்கடியில் இருந்து தப்புவது எப்படி?

கடன் தவனையை கட்ட முடியவில்லையா? நிதி நிறுவன நெருக்கடியில் இருந்து தப்புவது எப்படி?

webteam

கொரோனா வைரஸ் தொற்று நாடு முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இது ஒருபுறமிருக்க கொரோனா பரவலை தடுக்க அரசு மேற்கொண்ட பொதுமுடக்கம் அடிதட்டு மக்களை மேலும் பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளது. நாடு முழுவதும் பொருளாதாரம் வீழ்ச்சிக்கு சென்றுள்ளது. கொரோனாவால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதோடு ஊரடங்கு காரணமாக மக்கள் வேலைகளுக்குச் செல்ல முடியாமல் வீட்டிற்குள் முடங்கியும் இருக்கின்றனர். இதனால் நிதி நெருக்கடிக்கு ஆளாகியிருக்கிறார்கள். மேலும் இந்த ஊரடங்கால் நாட்டில் பல கோடி பேர், தங்கள் வேலைகளைத் தற்காலிகமாக இழந்து வருமானமின்றித் தவித்து வருகின்றனர். இதனை சீர்செய்யவும் அரசு முயற்சி மேற்கோண்டு வருகிறது.

கொரோனா அச்சுறுத்தல் குறையாதபோதிலும் பொருளாதாரத்தை மேம்படுத்த அரசு சில தளர்வுகளை அறிவித்துள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் மக்களின் சுமையை குறைப்பதற்காக வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் வாங்கிய கடன்களுக்கும் சில தளர்வுகளை ரிசர்வ் வங்கி வழங்கியுள்ளது. மக்கள் வங்கிகள் மற்றும் வங்கிசாரா நிதி நிறுவனங்களிடம் வாங்கியிருக்கும் கடனுக்கான தவணையைச் செலுத்தாமல், மூன்று மாத காலம் கழித்துச்செலுத்தலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது.

அதேபோல் நிதி நிறுவனங்களையும் கடன் தவணையைக் கேட்டு மக்களுக்கு அழுத்தம் கொடுக்கக்கூடாதென்றும் அறிவுறுத்தியிருந்தது. ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பு வருமானமின்றித் தவித்து வரும் சாமானிய மக்கள் பலரின் மன அழுத்தத்தைக் குறைக்கும் வகையில் அமைந்திருந்தது. ஆனால் நடைமுறை வாழ்க்கையில் நிதி நிறுவனங்கள் கடன் தவனையை கட்ட நெருக்கடி கொடுத்து வருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. நிதி நிறுவன ஊழியர்கள் மகளிர் வீடுகளில் சென்று அமர்ந்து கொண்டு தவனை கொடுத்தால் தான் செல்வேன் எனக்கூறுவதும், கார் கடன் தவணையை கட்ட வேண்டும் இல்லையென்றால் காரை ஜப்தி செய்து எடுத்துக்கொண்டு சென்று விடுவோம் என மிரட்டுவதும் தொடர் கதையாகி வருகிறது.

இந்த நிதி நிறுவனங்கள் கொடுக்கும் நெருக்கடியில் இருந்து எப்படி பாதுகாத்துக்கொள்வது என்பது குறித்து பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசனிடம் கேட்டோம். அவர் கூறும்போது, “கடனைக் காலம் தாழ்த்திக் கொடுப்பதற்கான சட்ட உரிமை(moratorium) பெற்றிருந்தால் அவர்கள் தற்போது கடன் தவணையை கட்ட தேவையில்லை. மேலும் 3 மாத காலம் அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. உச்சநீதிமன்றத்தில் வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வழக்கு நடந்து வருகிறது.

வாடிக்கையாளர்கள் முதலில் தங்களது சேவை மையத்தை தொடர்பு கொண்டு மாரிடோரியம் பதிவு செய்திருப்பதாகவும், தனக்கு தொந்தரவு கொடுக்க வேண்டாம் எனவும் தெரிவிக்க வேண்டும். மேலும் வீட்டிற்கு வந்து தொந்தரவு கொடுக்கக்கூடாது என்று சட்டமே உள்ளது. வீட்டிற்கு வந்து தொந்தரவு செய்தால் 100க்கு கால் செய்து புகார் அளிக்க வேண்டும். இது ஒரு அவமானம் என்று மக்கள் நினைக்கக்கூடாது. இது உலக அளவில் இருக்கக்கூடிய கஷ்டம்தான். எல்லாருக்கும் இந்த சமயத்தில் கஷ்டம் இருக்கும். பக்கத்து வீட்டாருக்கு தெரிந்தால் மானம் போகும் என்று எண்ணக்கூடாது. இதுபோன்ற பிரச்னைகள் இருப்பது பக்கத்து வீட்டாருக்கு தெரிந்தால் உங்களுக்கு கண்டிப்பாக உதவுவார்கள். உங்களுக்காக நிதி நிறுவன ஊழியர்களிடம் பேசுவார்கள்.

போலீசார் வழக்கு எடுக்கவில்லை என்றால் கமிஷனரிடம் புகார் அளிக்கலாம். நிதிநிறுவனத்திடம் பணம் வாங்கிவிட்டார்களா என கேள்வி எழுப்பலாம். புகாரை எடுக்க முடியாது என்று போலீசார் சொல்லவே முடியாது. கடன்கட்ட முடியவில்லை என்பது ஒரு சிவில் வழக்கு. சென்னை உயர்நீதிமன்றத்தில் இதுகுறித்து ஒரு வழக்கு தொடர்ந்தால் போதும். பின்னர் அவர்கள் நீதிமன்றம் மூலமாக மட்டுமே அவர்கள் பணத்தை திரும்பி வாங்க முடியும். அவர்களால் பணத்தை கட்டுமாறு நெருக்கடி கொடுக்கவே முடியாது” எனத் தெரிவித்தார்.