சிறப்புக் களம்

மழை விடுமுறையின் போதும் தடையின்றி நடக்கும் ஆன்லைன் வகுப்புகள்... அரசு செய்யவேண்டியது என்ன?

மழை விடுமுறையின் போதும் தடையின்றி நடக்கும் ஆன்லைன் வகுப்புகள்... அரசு செய்யவேண்டியது என்ன?

நிவேதா ஜெகராஜா

தென்கிழக்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்திருந்தது. இந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்ததை அடுத்து தமிழகத்தில் 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அதிலும் சில மாவட்டங்களில் நேற்று, அதற்கு முன் தினமும் விடுமுறைதான். சில இடங்களில், நாளையும் விடுமுறை. இப்படி இந்த விடுமுறை நீண்டுக்கொண்டேதான் இருக்கிறது.

விடுமுறை நீண்டாலும்கூட, குழந்தைகளால் அதற்கு முழுமையாக மகிழ்ச்சி கொள்ள முடிவதில்லை என்பதுதான் இங்கு பிரச்னை. ஏனெனில் பல பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் நடந்துக்கொண்டே தான் இருக்கிறது. குறிப்பாக சிபிஎஸ்இ பள்ளிகள், தனியார் பள்ளிகள் சிலவற்றில் மழை வெயிலெல்லாம் ஒரு பொருட்டே இல்லையென ‘பள்ளிக்கு வரவ வேண்டாம்; ஆனா ஆன்லைன் க்ளாஸ் வந்துடுங்க’ என அறிவிப்பு வந்துவிடுகிறது.

‘சரி, ஒருநாள்தானே’ என நினைத்து, பள்ளிகளின் இந்த அரசு விதிமீறலை பெற்றோர்களும் மாணவர்களும் கடந்துவிடக்கூடாது என்கிறார் குழந்தைகள் எழுத்தாளர் உமாநாத் செல்வன். இதுகுறித்து நம்மிடம் விரிவாக பேசிய அவர், “அரசு, பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது என்பது, வெறுமனே சாலைகள் சரியில்லை – அதனால் பிள்ளைகள் பள்ளிக்கு வர சிரமப்படுவார்கள் என்பதற்காக மட்டுமல்ல. அதைத்தாண்டியும் நிறைய காரணங்கள் உள்ளன. குறிப்பாக மழை நேரத்தில் ஒவ்வொரு மாணவன்/ஆசிரியரின் வீடும் எப்படி இருக்குமென தெரியாது – அவர்கள் வீட்டில் நீர் புகுந்திருக்கலாம்; அவர்கள் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருக்கலாம்; அவர்களால் அத்தியாவசிய தேவைக்காக கூட வீட்டை விட்டு வெளியே வரமுடியாத நிலைமை இருக்கலாம் போன்ற பல காரணம் இருக்கலாம். அப்படி இருக்கையில், அவர்களை ஆன்லைன் வகுப்புக்கு வர சொல்லுவது மட்டும் எப்படி சரியாக இருக்கும்? ஆன்லைன் க்ளாஸ் என்றால், இப்படியான சிக்கலெல்லாம் அந்தந்த ஆசிரியருக்கோ, மாணவர்களுக்கோ வராது என இவர்கள் நினைக்கின்றார்களா?

இந்தக் கொரோனா பேரிடரின் போது பரவலான ஆன்லைன் கல்வி கலாசாராம், பல ஏற்றத்தாழ்வுகளுடன் நிறைந்தேதான் இருந்தது. நிறைய ஏழை மாணவர்கள், லேப்டாப் – இணையம் – மொபைல் போன்றவற்றின் வசதியில்லாததால் கல்வி கிடைக்காமல் கடுமையாக அவதிப்பட்டனர். கல்வி என்பது, வகுப்பறையில் கிடைப்பது போல எல்லோருக்கும் சமமாக கிடைக்கப்பட வேண்டிய ஒரு விஷயம். ஆனால் இணைய வசதியிருப்போருக்கு மட்டும் கிடைக்கும் இந்தக் கல்வி, ஏற்றத்தாழ்வுகள் நிறைந்தது. இதை நிச்சயம் நாம் ஊக்குவிக்ககூடாது.

நான் தொடக்கத்தில் சொன்னதுபோல, ‘ஒருநாள்தானே’ என்று இந்த ஆன்லைன் க்ளாஸ் கலாச்சாரத்தை கடந்துவிட முடியாது. ஏனெனில் இன்று இப்படி சின்ன சின்ன விஷயங்களில் ஆரம்பித்து, பின்னாள்களில் ‘சனிக்கிழமை பள்ளி விடுமுறை – ஆனால் ஆன்லைன் க்ளாஸ் உண்டு’ என்று வந்து நிற்பார்கள். இது நம் குழந்தைகளுக்கு விடுமுறை தினம் கிடைக்காத நிலையையே உருவாக்கும்.

மாணவர்களுக்காக மட்டும் நான் இதை பேசவில்லை. பல ஆசிரியர்களுக்கும் அவர்களின் வீடுகளில் பேரிடர் காலங்களில் பல சிக்கல்கள் உருவாகும். அவற்றை அவர்கள் சமாளிக்க, அவர்களுக்கு குறிப்பிட்ட நாள்கள் நாம் அவகாசம் கொடுக்க வேண்டாம். அதை மனதில் வைத்துதான், அரசே அவர்களுக்கு விடுமுறை கொடுக்கிறது. அப்படியிருக்கையில், பள்ளி நிர்வாகங்கள் இப்படி மனிதமின்றி செயல்படுவது, கொஞ்சம்கூட ஏற்புடையதல்ல. 

இனி வரும் நாள்களில், அரசு இவ்விஷயத்தில் பள்ளி நிர்வாகங்களிடையே ‘பள்ளிக்கு விடுமுறை அறிவித்தால், அன்று எந்தவகையிலும் வகுப்பு நடத்தக்கூடாது’ என்பதை திட்டவட்டமாக சொல்ல வேண்டும். சொல்லப்போனால், இனி வரும் காலங்களில் பள்ளிக்கு விடுமுறை என்று மட்டும் அறிவிக்கக்கூடாது. ஆன்லைன் மற்றும் ஆப்லைன் வகுப்புகளுக்கு விடுமுறை என அறிவிக்க வேண்டும். அப்போதுதான் இப்படியான சிக்கலுக்கு தீர்வு கிடைக்கும்” என்றார்.

 ஆன்லைன் கல்வியை எப்போது, எங்கு நடத்தலாம் என்பதற்கான அரசு தரப்பு கையேடு மற்றும் விதி தொடர்பான விளக்கங்களும் அறிவிக்கப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.