சிறப்புக் களம்

ஓடிடி தளங்களில் சமகால மலையாள சினிமா ஆதிக்கம் செலுத்துவது எப்படி? - ஒரு சிறப்புப் பார்வை

ஓடிடி தளங்களில் சமகால மலையாள சினிமா ஆதிக்கம் செலுத்துவது எப்படி? - ஒரு சிறப்புப் பார்வை

webteam

இந்தியாவில் ஓடிடி தளங்கள் சமீப காலமாக அசுர வளர்ச்சி கண்டுள்ளன. குறிப்பாக, கொரோனா பேரிடர் காலத்தில் தியேட்டர்கள் மூடப்பட்ட நிலையில், சினிமா துறையினரின் வர்த்தகத்துக்கு கை கொடுத்ததுடன், தேவைப்படும் மக்களுக்கு பொழுதுபோக்குக்கும் பெரும் பங்கு வகித்தன ஓடிடி தளங்கள். இந்த வளர்ச்சியில் தனக்கே உரித்தான தனித்துவமான பாணியில் மலையாள சினிமா பெரும் பங்காற்றி இந்திய ஓடிடி தளங்களை ஆண்டு வருவதும் கண்கூடு.

சில வாரங்களுக்கு முன் மலையாள படங்களை வெளியிடுவதற்காக பிரத்யேக ஓடிடி தளம் ஆரம்பிக்கப்போவதாக அறிவித்தது கேரள அரசு. சிறிய பட்ஜெட் படங்களுக்கு உதவும் வகையில் ஆரம்பிக்கப்பட இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரள அரசு எடுத்துள்ள இந்த முன்முயற்சி வெற்றிபெறுமா இல்லையா என்ற விவாதத்தைவிட, தற்போதுள்ள நிலையில் இந்த முயற்சி தேவையான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. ஏனென்றால், கொரோனா தொற்றுநோய் ஆரம்பித்ததில் இருந்து ஸ்ட்ரீமிங் தளங்கள்தான் படங்கள் வெளியீட்டுக்கு ஆதாரமாக இருந்து வருகிறது. இதனால், ஸ்ட்ரீமிங் தளங்களில் அடுத்தடுத்து படங்கள் வெளியாக இருக்கின்றன.

2020 கொரோனா பெருந்தொற்றுப் பேரிடரின் ஆரம்ப காலத்தில் இருந்து இந்திய ஸ்ட்ரீமிங் தளங்கள் அசுர வளர்ச்சி கண்டு வருகின்றன. சொல்லப்போனால், இந்திய ஸ்ட்ரீமிங் தளங்களின் இந்த வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணமாக இருந்தது மலையாள சினிமா. இந்தப் பேரிடர் காலகட்டத்தில் மலையாள திரைப்படங்கள்தான் ஓடிடி தளத்தை ஆட்சி செய்தன எனலாம். அந்த அளவுக்கு படங்கள் புதுவித கதைக்களத்துடனும், புதுமையான ஐடியாக்களுடனும் வெளியாகி ரசிகர்களை மகிழ்வித்தன. இந்த ஆண்டு இதுவரை இதுவரை வெளியான படங்களுடன் சேர்த்து மொத்தம் 45 மலையாள படங்கள் நேரடி ஓடிடி வெளியீட்டுக்கு தயாராக இருக்கின்றன என்கிறார்கள் மலையாள திரைப்பட தயாரிப்பாளர்கள்.

ஆரம்பத்தில் தியேட்டர்கள் திறக்காத காரணம் உள்ளிட்ட நெருக்கடிகள் காரணமாக ஓடிடி தளத்தை நாடினர். அதுவே, பின்னர் கொரோனா பேரிடரால் ஏற்பட்ட சவால்களுக்கு ஏற்ப தங்களின் திரைப்படங்கள் பாணியை மறுவரையறை செய்தனர். இதன்காரணமாக ஓடிடி தளங்களில் வெளியிடுவதற்காகவே திரைப்படங்களை தயாரிக்கத் தொடங்கினர். இதனால் ஓடிடி தளங்களின் சகாப்தத்தில் நல்ல உள்ளடங்களை கொண்டு மலையாள சினிமாத் துறை தனித்து நிற்கிறது. இது சாத்தியமானதின் பின்னணியில் சில படங்களின் வெற்றியை பேசி ஆகவேண்டும்.

கள: டொவினோ தாமஸ் நடிப்பில் வெளியான படம் 'கள'. இந்திய சினிமாவில் பலமுறை கண்ட சாதாரண பழிவாங்கும் கதைதான். ஆனால், ஆஸ்கர் வைல்டின் சுயநலம் பற்றிய மேற்கோளுடன் தொடங்கும் 'கள' பண்ணையாருக்கும், பழங்குடி இளைஞனுக்கும் இடையிலான மோதலை மிக ஆக்ரோஷமாக காட்டியிருக்கும். அதீத வன்முறைக் காட்சிகள் பல இடம்பெற்றிருந்தாலும், வன்முறையை அசாத்தியமாக படம் பிடித்திருப்பார்கள். ரத்தக்களரிக்கு மத்தியில், மனிதன் மனத்தின் குரூரத்தை ஒன்றைரை மணிநேரத்தில் அழகாக வெளிப்படுத்தியிருப்பார் இயக்குநர். இந்தப் படம் மலையாளம் மொழியை தாண்டி பல ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது.

ஜோஜி: ஃபஹத், திலீஷ் போத்தன், ஷ்யாம் புஷ்கரன் கூட்டணியின் மற்றுமொரு ரசிக்க வைக்கும் படைப்புதான் 'ஜோஜி'. ஷேக்ஸ்பியரின் 'மெக்பத்' நாடகத்தின் உந்துதலில் 'ஜோஜி' படம் எடுக்கப்பட்டது. வழக்கம்போல் ஷ்யாம் புஷ்கரன் 'ஜோஜி'யை நுண்ணிய திரைக்கதையாக, அவரின் எழுத்தை அப்படியே கண்முன் காட்சிப்படுத்தியிருப்பார் திலீஷ் போத்தன். கொரோனா முதல் அலை உச்சத்தில் இருந்தபோது, ஓடிடி தளத்திற்காகவே தயாரிக்கப்பட்ட இந்தப் படம், மலையாள சினிமாத் துறையினருக்கு ஓடிடியின் வெற்றியை புரியவைத்தது.

சி யூ சூன்: கொரோனா பேரிடர் காலத்தில், மலையாள சினிமாவில் முதல்முறையாக ஓடிடியில் பிரத்யேகமாக வெளியானப் படம்தான் 'சி யூ சூன்'. ஸ்மார்ட் ஃபோன்ஸ், இன்டர்நெட், சோஷியல் மீடியா போன்ற தொழில்நுட்ப வளர்ச்சியின் சாதனங்களால் நமக்கு ஆபத்துகளை மறைமுகமாக திரில்லர் பாணியில் சொல்லியிருக்கும் படமே இது. இதுவும் கொரோனா காலகட்டத்தில் எடுத்து ஓடிடியில் ரிலீஸ் செய்யப்பட்டது.

நாயட்டு: பட்டியலின மக்களின் வாக்குகளை எப்படி லாபத்திற்காக அரசியல் கட்சிகள் பயன்படுத்திக் கொள்கின்றன. போலீஸ்காரர்களாகவே இருந்தாலும் அவர்களுக்கு இருக்கும் உச்சபட்ச நெருக்கடிகள் என்ன? மக்கள் அறிந்து கொள்ளும் செய்திக்கும் உண்மைக்கும் இடையிலிருக்கும் தொலைவு எவ்வளவு? இதுபோன்றவற்றை பல்வேறு கோணங்களில் பதிவு செய்திருக்கும் மிகத் துணிச்சலான சினிமாதான் 'நாயட்டு'. சமகால லாப அரசியலை அடர்த்தியான சினிமா மொழியில் பேசுகிறது இப்படம். ஓடிடியில் வெளியான இந்தப் படம் அரசியல் சர்ச்சைகளைத் தாண்டி பல்வேறு மொழி ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்திருந்தது.

தி கிரேட் இந்தியன் கிச்சன்: சமீபத்தில் கருத்தியல் ரீதியில் தமிழ்ப் பரப்பிலும் அதிகம் விவாதிக்கப்பட்ட மலையாள படம், 'தி கிரேட் இந்தியன் கிச்சன்'. இந்தியக் குடும்ப அமைப்புமீதான விமர்சனத்தை முன்வைக்கும் இந்தப் படைப்பு, இந்தியாவில் குடும்பம் என்கிற அமைப்பு எப்படி ஒரு பெண்ணின் உழைப்பை சுரண்டுகிறது என்பது குறித்தும், இந்தியப் பெண்களின் வாழ்வியல் சிக்கலையும் மிக அழுத்தமாக பதிவு செய்திருந்தது. மேலும், மொழிகளை தாண்டி அதிக கவனம் ஈர்த்தது. பாலிவுட் முதல் டோலிவுட் வரை சினிமா பிரபலங்கள் முதல் நீதிபதிகள் வரை பலர் இந்தப் படைப்பை பாராட்டி தீர்த்தனர்.

இந்தப் படத்தையும் லாக்டவுனில் எடுத்திருந்தாலும் தியேட்டரில் வெளியிட முடியாத சூழலில் நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம் உள்ளிட்ட பிரபல ஓடிடி தளங்களை படக்குழு அணுகியிருக்கிறது. அமேசான் ப்ரைம் சார்பில் படம் பார்க்கப்பட்டது. ஆனால், தங்கள் வரையறைகளுக்குள் இல்லை என்பதால் படத்தை வாங்க முடியாது என்று கைவிரித்துவிட்ட, நெட்ஃப்ளிக்ஸ் தரப்பிலோ படத்தைப் பார்க்காமலயே கதவடைத்துவிட்டார்கள். மேலும் சில ஓடிடி தளங்களிலும் இதேபோன்ற நிலை ஏற்பட 'நீ ஸ்ட்ரீம்' (NeeStream) என்ற தளத்தில் வெளியிட்டார்கள். இன்று 'நீ ஸ்ட்ரீம்' (NeeStream) என்னும் உள்ளூர் ஓ.டி.டி தளத்துக்கே அடையாளமாக இருந்து, அந்தத் தளத்தை பிரபலப்படுத்தியிருக்கிறது இந்தப் படம்.

த்ரிஷ்யம் 2: 2013-ல் மலையாளத்தில் ஜீத்து ஜோசப் இயக்கி, மோகன்லால் நடித்து வெளிவந்த 'த்ரிஷ்யம்'. கதையின்படி தன் குடும்பத்தார் அறியாமல் செய்த ஒரு கொலையை மறைக்க, நாயகன் எந்த எல்லை வரை செல்கிறான் என்பதை மிகச் சிறப்பான திரைக்கதையின் மூலம் சொல்லியிருந்தார். மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. ஒரு படத்தின் முதல் பாகத்தின் வெற்றியால் இரண்டாம் பாகம் எடுத்து வெற்றியாக்குவது எளிதான காரியம் கிடையாது. 'த்ரிஷ்யம்' இரண்டாம் பாகத்தில் முதல் கதையின் தொடர்ச்சியைத்தான் படமாக்கி இருக்கிறார்கள். என்றாலும், அசலின் ஆன்மாவை தக்கவைத்துக்கொண்டு அதே சுவாரஸ்யம் - த்ரில் மாறாமல் இரண்டாம் பாகத்தையும் வெற்றியாக்கி காட்டினார். இந்தப் படத்தின் வெற்றி மலையாள வணிக சினிமாவின் பரிணாமத்தை ஓடிடி மூலமாக இந்திய மக்களுக்கு எடுத்து காட்டியது.

மாலிக்: ஒரு நடிகரின் 4 படங்கள் தொடர்ந்து ஓடிடியிலேயே வெளியானது ஓடிடி வரலாற்றிலேயே புதிதான ஒன்று. ஃபஹத்தின் கடந்த நான்கு படமும் ஓடிடி தளத்திலேயே வெளியாகின. 'சி யூ சூன்', 'இருள்', 'ஜோஜி' என மூன்று படங்கள் வரிசையாக வெளியாக இதற்கெல்லாம் உச்சமாக 4-வது படமாக வெளியானது 'மாலிக்'. கேரள வரலாற்றில் அரசு சார்பில் நிகழ்த்தப்பப்ட்ட மிகப்பெரிய அடக்குமுறை நிகழ்வான பீமாபள்ளி படுகொலை நிகழ்வுதான் கதைக்களம். இதனை மணிரத்னம் - கமல்ஹாசனின் 'நாயகன்' தாக்கதோடு, வழக்கமான கேங்க்ஸ்டர் திரைப்படங்களுக்கே உரிய பாணியில் சொல்லியிருப்பார் இயக்குநர் மகேஷ் நாராயணன். பழைய தாதா டெம்ப்ளேட் கொண்ட கதை என்றாலும், புதிய பாணியிலான திரைக்கதை, காட்சியமைப்பு, ஒளிப்பதிவு, கேரக்டர்கள் அமைக்கப்பட்ட விதம், என ஒவ்வொன்றையும் அசத்தியிருந்தது படக்குழு. மலையாள சினிமாவின் தற்போதைய முன்னணி நட்சத்திரங்கள் பலரும் நடித்திருந்த 'மாலிக்', மொழிகளை கடந்த ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்தப் படங்கள் மட்டுமல்ல... 'இருள்', 'சாராஸ்', 'பிரியாணி', 'லவ்', 'கிலோமீட்டர்ஸ் அண்ட் கிலோமீட்டர்ஸ்', 'கோல்டு கேஸ்', 'மணியறையில் அசோகன்' என பல படங்கள் இந்த கொரோனா பேரிடர் காலகட்டத்தில் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிக்க வைத்தன. அத்தனை படங்களும் வித்தியாசமான கதையம்சம், திரைக்கதை உடன் புதுவிதமான கதை சொல்லல் பாணியால் இந்திய சினிமா உலகில் மலையாள சினிமா துறை தனித்து நிற்கத் தொடங்கியுள்ளது.

கடந்த தசாப்தத்துக்கு முன்னதாகவே மலையாள சினிமாவின் கதை சொல்லும் பாங்கு மாறிவிட்டது என்றாலும், இந்தக் கொரோனா பேரிடர் காலகட்டத்தில் ஓடிடி தளங்கள் மூலம் அது உலகுக்கு உரக்க சொல்லப்பட்டுள்ளது. ஓடிடி தளங்கள் தற்போதைய மலையாள சினிமாவுக்கு மணிமகுடமாக மாறியிருக்கும் அதேவேளையில், ஓடிடி தளங்களின் வளர்ச்சிக்கு மலையாள சினிமா கொடுத்த அற்புத படைப்புகள் பெரும் பங்காற்றியுள்ளது என்பது மறுப்பதற்கில்லை.

- மலையரசு