சிறப்புக் களம்

லேடி சூப்பர் ஸ்டார்: நயன்தாரா நம்பர் ஒன் ஆன கதை!

லேடி சூப்பர் ஸ்டார்: நயன்தாரா நம்பர் ஒன் ஆன கதை!

webteam

’நடிகையாக இருக்கும்போதுதான் தெரிகிறது, நடிகையாக இருப்பதன் புகழும் நடிகையாக இருப்பதன் வலியும்’என்றார் நடிகையொருவர். அது மற்றவர்களுக்குப் பொருந்துகிறதோ இல்லையோ, நயன்தாராவுக்கு நிச்சயம் பொருந்தும்.

இன்றைய தேதியில் ஹீரோயினாக நயன்தாராவின் சம்பளம் மூன்றரை கோடி ரூபாய். தமிழ் சினிமாவில் ஒரு ஹீரோயின் வாங்கும் அதிகப்பட்ச சம்பளம் இதுதான். அதை வாங்கும் முதல் நடிகையும் அவர்தான்.

இப்படியொரு டாப் பொசிஷனுக்கு நயன்தாரா வந்ததற்கு காரணம் அதிர்ஷ்டம் அல்ல. அது கொஞ்சமாக இருந்திருக்கலாம். ஆனால் அதற்குப் பின்னால் பெரும் உழைப்பு இருப்பதாகச் சொல்லும் கோலிவுட்காரர்கள், கொஞ்சம் பிளாஷ்பேக் சொல்கிறார்கள்.

தமிழ் சினிமாவில் நயன்தாரா அறிமுகமான படம், ’ஐயா’. அதற்கு முன் அவர் பார்த்திபன் உட்பட சில இயக்குனர்களால் நிராகரிக்கப்பட்டிருந்தார். அதற்கு அவர்கள் சொன்ன காரணம், ‘இந்தப் பொண்ணுக்கு மாறு கண்ணா இருக்கு’. இன்று அந்த மாறுகண், தென்னிந்திய சினிமாவின் நேர் கண்ணாகியிருக்கிறது.

’ஐயா’ படத்தின் பாடல் காட்சிக்காக கொஞ்சம் கிளாமர் ஆடை அணிய சொன்னார் இயக்குனர் ஹரி. பிடிவாதமாக அப்போது மறுத்த நயன்தாரா, ’கஜினி’யில் கிளாமருக்கு மாறியதற்கு காரணம், போட்டி. நயன்தாரா வளர்ந்த அதே காலத்திலேயே அசினும் நம்பர் ஒன் ரேஸில் இருந்தார். ’கஜினி’யில் அசின் கேரக்டரை கேட்டுக்கொண்ட நயன்தாரா, அவர் கேரக்டருக்குப் போட்டியாக கிளாமராக நடிக்க சம்மதித்தார். இங்கிருந்துதான் அவரது கேரியர் கிராப் உச்சிக்குச் சென்றதாகச் சொல்கிறார்கள்.

இந்தப் படத்துக்கு பிறகு சிம்புவுடன் அவர் நடித்த ’வல்லவன்’முத்த போஸ்டர் வம்பு தும்புக்கு அழைத்துச் சென்றது அவரை. சிம்புவை காதலிக்கத் தொடங்கினார். இந்த காதலும் அது முறிந்த விவகாரமும் நயன்தாராவின் மனதைப் பாதித்தாலும் புகழை அதிகரிக்க வைத்தது என்பதுதான் உண்மை என்கிறார்கள். அடுத்து வில்லு, ஆதவன், பாஸ் என்கிற பாஸ்கரன் என நயன்தாராவின் நட்சத்திர ஆட்டம் தொடங்க, மீண்டும் காதலில் விழுந்தார், பிரபுதேவாவுடன்.

‘நடிகைகளின் காதல் எப்போதுமே ஸ்பெஷல்தான். ஆனால், தனிப்பட்ட விஷயங்களை ஒரு போதும் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு கொண்டு வந்ததில்லை அவர். தொழிலுடன் பர்சனல் விஷயங்களை சேர்த்ததே இல்லை. வேலையை மதிக்கும் நடிகைகளில் நயன் தாராவுக்கு எப்போதும் உண்டு முதலிடம். ஏழு மணிக்கு ஷூட்டிங் என்றால் கரெக்டாக அந்த நேரத்தில் அவர் ஸ்பாட்டில் இருப்பார். ஷாட் முடிந்தால் கேரவனுக்குள் செல்வதோ, லேட்டாக திரும்புவதோ என எதுவும் இருக்காது. ஷாட் முடிந்தாலும் மற்றவர்கள் நடிப்பதை விரும்பிப் பார்ப்பார் நயன்தாரா. இந்த தொழில் பக்திதான் அவர் வெற்றிக்கு காரணம்’என்கிறார் அவரை வைத்து படம் இயக்கிய இயக்குனர் ஒருவர்.

கதை தேர்விலும் தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதிலும் அதிக கவனம் செலுத்துபவர் நயன்தாரா. ’பொதுவா தமிழ் சினிமாவில் ஹீரோக்களுக்குத்தான் ஓபனிங் இருக்கும். ஆனால், ஒரு ஹீரோயினுக்கு ஓபனிங்கை கொண்டு வந்தது லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராதான். மாயா, நானும் ரவுடிதான், திருநாள் உட்பட சில படங்களை இதற்கு உதாரணமாக சொல்லலாம். வர இருக்கிற அறம், இமைக்கா நொடிகள், கொலையுதிர் காலம், வேலைக்காரன் ஆகிய படங்கள் நயன்தாராவின் அடுத்த வெற்றிக்கு காத்திருக்கு’என்கிறார் வினியோகஸ்தர் ஒருவர்.