சிறப்புக் களம்

புதிய உயரழுத்த மின்கோபுரங்களால் கதறும் தமிழக விவசாயிகள்..!

புதிய உயரழுத்த மின்கோபுரங்களால் கதறும் தமிழக விவசாயிகள்..!

webteam

உயரழுத்த மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாயிகளின் பிரச்னை தமிழகம் முழுவதும் புதியதாக விஸ்வரூபம் எடுத்துள்ளது.

உயரழுத்த மின் கோபுரத் திட்டம் என்றால் என்ன?

கடந்த 3 ஆண்டுகளாக தமிழக விவசாயிகள் மத்தியில் பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது உயரழுத்த கோபுரங்கள் திட்டம். சத்தீஸ்கர் மாநிலத்தின் ரெய்காரில் இருந்து தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள புகழூர் வரை 800 கி.மீட்டர் தூரத்திற்கு இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்கான ஒப்புதலை மத்திய மின்சார வாரியமும், தமிழக அரசும் கடந்த 2015ஆம் ஆண்டில் அளித்தது. இந்தப் பணிகள் மத்திய அரசின் பவர் கிரிட் நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தினால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

திருப்பூர் மாவட்டத்தின் தாராபுரத்தில் அமையவுள்ள மிகப்பெரும் மின்நிலையத்தில் தயாரிக்கப்படும் மின்சாரத்தை, கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரா வழியாக சத்தீஸ்கர் வரை கொண்டு செல்வதற்கு இந்த உயர் அழுத்த மின்கோபுரங்கள் அமைக்கப்படுகின்றன. அதுமட்டுமின்றி தாராபுரத்திலிருந்து சில கிலோமீட்டர்கள் தூரத்தில் உள்ள இடையர்பாளையத்திலும் மற்றொரு மின்நிலையம் அமைக்கப்படுகிறது. 

தமிழகத்தை பொறுத்தவரை திருப்பூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், கரூர், ஈரோடு, கோவை, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மற்றும் வேலூர் ஆகிய 16 மாவட்டங்கள் வழியாக இந்த உயரழுத்த மின்கோபுரங்கள் அமைக்கப்படுகின்றன. இவற்றுள் பெரும் பகுதி விவசாய நிலங்களாக உள்ளன. 

மின்கோபுரங்கள் அமைக்கப்படும் இடங்களில், நிலத்தின் உரிமையாளருக்கு நிலத்தின் தொகையில் 85% வழங்கப்படும் என அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மின்கம்பிகள் எந்த இடங்களுக்கு மேலே உயரமாக செல்கிறதோ அந்த இடங்களின் உரிமையாளர்களுக்கு, நிலத்தின் மதிப்பில் 15% இழப்பீடு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் மின் கோபுரங்கள் அமைக்கப்படும் இடங்களை விவசாயிகள் முழுமையாக அவர்களின் விருப்பத்திற்கு கையாள முடியாது. அவர்கள் அந்த இடங்களை பயன்படுத்துவதற்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. உயரழுத்த மின் கோபுரங்கள் அமைக்கப்படும் இடங்களில் 40 முதல் 90 மீட்டர் அகலத்திற்கான நிலங்கள் பயன்பாட்டுக்காக எடுத்துக் கொள்ளப்படும் எனத் தெரிகிறது. அந்த நிலங்களில் விவசாயம் செய்யக்கூடாது. கட்டுமானங்களை ஏற்படுத்தக்கூடாது. அத்துடன் ஆழ்துளை கிணறுகள் அல்லது கிணறுகள் அமைக்கக்கூடாது. 

என்ன சொல்கிறார்கள் விவசாயிகள்?

மின்கோபுரங்கள் அமைக்கும் இடங்களைத் தவிர மற்ற இடங்களில் மின்கம்பிகள் உயரமாகத்தானே செல்கின்றன என பேச்சுவார்த்தை நடத்தும் மின்வாரிய அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால் அதில் இருக்கும் பிரச்னைகள் எங்களுக்கத் தான் தெரியும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர். அதேபோன்று நிலங்களை கையகப்படுத்தும் போது தரப்படும் என தெரிவிக்கப்பட்ட இழப்பீடுகள் எதுவும் இதுவரை முழுமையாக கிடைக்கவில்லை என்று விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். 

மின்கம்பிகளை பூமிக்கு அடியில் கொண்டு செல்ல வேண்டும் என்பது விவசாயிகள் பிரதான கோரிக்கையாக உள்ளது. இல்லையென்றால் ஏற்கனவே கெய்ல், மீத்தேன், ஹைட்ரோ கார்பன், 8 வழிச்சாலை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களால் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள தங்கள் விவசாய நிலங்கள், தற்போது உயரழுத்த மின்கோபுரங்களால் மேலும் நசுங்கும் என்கின்றனர். 

ஆனால் அவ்வாறு பூமிக்கு அடியில் புதைத்தால், மின் கோபுரங்கள் அமைப்பதைவிட அதிக செலவாகும் எனக் கூறப்படுகிறது. அந்தத் தொகை பொருட்படுத்தாமல் தங்கள் வாழ்வாதாரத்தை நினைத்து பூமிக்கு அடியில் புதைக்குமாறு விவசாயிகள் கேட்கின்றனர். அத்துடன் கேரளாவில் இந்தத் திட்டம் பூமிக்கு அடியில் கேபிள்கள் மூலம் அமல்படுத்தப்படுவதாகவும், தமிழகத்தில் சென்னை, சேலம், மதுரை, கோவை மற்றும் திருச்சி ஆகிய இடங்களில் மட்டுமே பூமிக்கு அடியில் கொண்டு செல்லப்படுவதாகவும் விவசாயிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

தீவிரமடையும் போராட்டங்கள்?.. தற்போதைய நிலவரம் என்ன?

மின்கோபுரங்களுக்கான போராட்டங்கள் என்பது நீண்ட மாதங்களாகவே நடத்தப்பட்டுதான் வருவதாக போராடும் விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. ஆனால் இந்தப் போராட்டங்கள் நாளுக்குநாள் அதிகரித்து விஸ்வரூபம் எடுத்து வருகிறது. 

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள கவுண்டனூர் பகுதியில், உயர்மின் அழுத்த மின் கோபுரங்களை விளை  நிலங்களில் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் காத்திருப்பு போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டுள்ளனர். 3வது நாளான இன்று கண்களில் கருப்புத் துணி கட்டி ஆர்ப்பாட்டம் செய்தனர். அதே பகுதியின் படைவீடு கிராமத்தில், ஒருவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் உயர்மின் அழுத்த மின்கோபுரம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி விவசாயிகள் 500க்கும் மேற்பட்டோர் பணிகளை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி, பணிகளைத் தொடர அனுமதித்தனர்.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அடுத்த காட்டு முன்னூர் அருகே விவசாய நிலங்களில் உயரழுத்த மின்கோபுரம் அமைப்பதற்கு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். விவசாய நிலங்களில் கோபுரம் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால், காவல்துறையினர் பாதுகாப்புடன் அதிகாரிகள் ஆய்வு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கள்ளிபாளையத்தில் உயரழுத்த மின்கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டியக்கம் சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த பெரியகரடியூர் கிராமத்தில் உயரழுத்த மின்கோபுரம் அமைக்க, விவசாய நிலங்களில் உள்ள மா, தென்னை, கொய்யா ஆகிய மரங்களை வெட்ட விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து தடுத்து வருகின்றனர். மேலும், இழப்பீடுகளை வழங்கிவிட்டு மரத்தை வெட்டும்மாறு கோரிக்கை வைத்து தடுத்து வருகின்றனர்.

மின்துறை அமைச்சர் என்ன சொல்கிறார்?

மின்கோபுரங்களுக்கு எதிரான போராட்டம் தொடர்பாக இன்று வேலூரில் செய்தியாளர்களிடம் பதிலளித்த மின்துறை அமைச்சர் தங்கமணி, “உயரழுத்த மின்கோபுரம் அமைப்பதை எதிர்த்து போராடுபவர்கள் விவசாயிகள் அல்ல. அவர்கள் மாற்று கட்சியினர் தான்” என்று தெரிவித்தார்.