சிறப்புக் களம்

'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்

'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்

webteam

கொரோனா இரண்டாம் அலை பாதிப்பு இந்தியாவில் அதிதீவிரமாக பரவி வரும் நிலையில், டெல்லி மருத்துவமனையில் உள்ள சூழல் குறித்து மருத்துவர் ஒருவரின் இன்ஸ்டாகிராம் பதிவு நெஞ்சை உலுக்குவதாக அமைந்துள்ளது. நிலைமை கட்டுக்கு மீறி சென்று கொண்டிருப்பதை விவரிக்கும் அந்தப் பதிவின் முடிவில் அவர், "தயவுசெய்து முகக்கவசம் அணியுங்கள்" என உருக்கமாக வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

கொரோனா முதல் அலை போலவே, இரண்டாம் அலையிலும் தலைநகர் டெல்லி மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொடர்பாக நாளுக்கு நாள் வெளியாகும் புள்ளிவிவரங்கள் பாதிப்பின் தீவிரத்தை உணர்த்தி வரும் நிலையில், டெல்லி மருத்துவர் ஒருவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டுள்ள தகவல்கள், நெஞ்சை உலுக்குவதாக அமைந்து, கள நிலவரம் எத்தனை மோசமாக இருக்கிறது என்பதையும் உணர்த்துகிறது.

சாந்த்ரா செபஸ்டீன் (Dr.Saandhra Sebastian) எனும் அந்த இளம் மருத்துவர், கொரோனா இரண்டாம் அலைக்கு நடுவே கடந்த இரண்டு வாரங்களாக பணிச் சூழல் எத்தனை வலி நிரம்பியதாக மாறியிருக்கிறது என்பதை விவரித்துள்ளார்.

"குணமாகமாட்டார்கள் என்று நன்றாக தெரிந்தும் 'எல்லாம் சரியாகிவிடும்' என நோயாளிகளிடம் பொய் சொல்லிக்கொண்டு இருக்கிறேன்" என்று அவர் அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

வீட்டில் இரண்டு பிள்ளைகள் இருப்பதாக கூறிய நோயாளி ஒருவர், 'தயவுசெய்து என்னை காப்பாற்றிவிடுங்கள்' என்பதே கடைசியாக கூறிய வார்த்தைகள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். (அந்த பெண்மணி இறந்துவிட்டார்).

பிள்ளைகள் உயிரை காப்பாற்றுமாறு கைகூப்பியபடி பெற்றோர்கள் மன்றாடும் காட்சியையும், மூடப்பட்ட சடலங்களைப் பார்த்து, இது பற்றி யோசிக்கக் கூடாது என தனக்குத் தானே சொல்லிக்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மருத்துவமனையில் தான் காணும் வலி, அங்குள்ள நோயாளிகளும், அவர்கள் குடும்பத்தினரும் எதிர்கொள்ளும் வலியில் கால் பங்கு கூட கிடையாது என்று கூறும் அவர், தனது சொந்த அச்சம் பற்றியும் குறிப்பிடுகிறார். பொதுமுடக்கம் ஒன்றும் கடினமானவை அல்ல என்று, இங்குள்ள கலவரமான நிலையை நீங்கள் நேரில் பார்த்தால் இதுபுரியும் என்கிறார்.

"உங்களை வீட்டிலேயே இருக்குமாறு கூறமாட்டேன், அந்த ஆடம்பரம் எல்லோருக்கும் சாத்தியம் இல்லை; ஆனால் ஒரே ஒரு வேண்டுகோள்... வெளியே வரும்போது தயவுசெய்து முகக்கவசம் அணியுங்கள்" என உருக்கமாக தெரிவித்துள்ளார்.

இஸ்டாகிராமில் வைரலாக பரவியிருக்கும் இந்தப் பதிவு, களத்தில் நிலைமை எத்தனை மோசமாக இருக்கிறது என்பதை உணர்த்துகிறது.

- சைபர்சிம்மன்