சிறப்புக் களம்

டிராவிட்டுக்கு இன்று 46: ’இந்திய சுவரி’ன் தனித்துவமான 10 சாதனைகள்!

டிராவிட்டுக்கு இன்று 46: ’இந்திய சுவரி’ன் தனித்துவமான 10 சாதனைகள்!

webteam

இந்திய கிரிக்கெட்டின் ’சுவர்’ என வர்ணிக்கப்படும் ராகுல் டிராவிட்டுக்கு, இன்று 46 வது பர்த் டே! இந்திய கிரிக்கெட் அணியின் மறக்க முடியாத வீரரான ராகுல், இப்போது ஜூனியர் அணியின் பயிற்சியாளர். 164 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 13288 ரன் குவித்துள்ள ராகுலின் ஆவரேஜ், 52.31. இதில் 36 சதங்களும் 63 அரை சதங்களும் அடங்கும். 344 ஒரு நாள் போட்டிகளில் 10889 ரன் குவித்துள்ள டிராவிட், சில தனித்துவமான சாதனைகளை செய்திருக்கிறார்.

1. முக்கியமான ஸ்லிப் ஃபீல்டர் இவர். 164 டெஸ்ட்டில் 210 கேட்ச்களை பிடித்திருக்கிறார். கீப்பர் அல்லாத ஒருவரின் அதிகபட்ச கேட்ச் இது.

2. தனது 16 வருட டெஸ்ட் கேரியரில் அதிக பந்துகளை சந்தித்த வீரரும் இவர்தான். 31 ஆயிரத்து 258 பந்துகளை சந்தித்திருக்கிறார். இவரை அடுத்து சச்சின் டெண்டுல்கர் 29 ஆயிரத்து 437 பந்துகளை சந்தித்துள்ளார்.

3. டெஸ்ட் போட்டிகளில் அதிகம் நேரம் களத்தில் நின்றவர் ராகுல். 735 மணி நேரம், 52 நிமிடம் நின்றிருக்கிறார் பிட்சில்.

4. மூன்றாவது வரிசையில் களமிறங்கி பத்தாயிரம் ரன்களை தொட்ட முதல் வீரர். 219 இன்னிங்ஸில் 10 ஆயிரத்து 524 ரன்கள் குவித்திருக் கிறார்.

5. நான்கு இன்னிங்ஸ்களில் தொடர்ந்து சதம் அடித்த ஒரே இந்திய வீரர். இங்கிலாந்துக்கு எதிராக, மூன்று இன்னிங்ஸில் தொடர்ந்து 115, 148, 217 ரன்கள் எடுத்த அவர், அடுத்த டெஸ்ட்டில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக 100 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

6. எந்த டெஸ்ட் வீரரை விடவும் அதிகமான பார்ட்னர்ஷிப் ரன் எடுத்தது ராகுல்தான். இவர் பார்ட்னர்ஷிப்பில் 32 ஆயிரத்து 39 ரன்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன.

7. மற்ற ஜோடிகளை விட, அதிக பார்ட்னர்ஷிப் ரன்கள் எடுத்தது ராகுல் டிராவிட்- சச்சின் ஜோடிதான். 6,920 ரன்களும் 20 சதங்களும் இவர்கள் பார்ட்னர்ஷிப்பில் எடுக்கப்பட்டுள்ளன.

8. ஒரு நாள் போட்டிகளில், 300 ரன்களுக்கு மேல் எடுத்த பார்ட்னர்ஷிப்பில் இரண்டு முறை பங்கேற்றவர் ராகுல் டிராவிட் மட்டுமே. 300 ரன் பார்டனர்ஷிப்பில் இணைந்த முதல் பேட்ஸ்மேனும் டிராவிட்தான். 1999 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கைக்கு எதிராக நடந்தப் போட்டியில் இந்த மைல்கல்லை எட்டினார் ராகுல். இந்தப் போட்டியில் தொடக்க ஆட்டக்காரர் கங்குலி 183 ரன்களும் ராகுல் டிராவிட் 145 ரன்களும் எடுத்தனர்.

9. பத்தாயிரத்துக்கும் அதிகமான டெஸ்ட் ரன் எடுத்தவர்களில் குறைவான டக் அவுட் ஆன வீரர், ராகுல் டிராவிட்தான். 8 இன்னிங்ஸில் மட்டுமே டக் அவுட் ஆகியுள்ளார்.

10. டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே, பாகிஸ் தான், இலங்கை, பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கு எதிராகவும் சதம் அடித்துள்ள முதல் வீரர் ராகுல் டிராவிட்தான்!