சிறப்புக் களம்

மத்திய - மாநில அரசுகளின் உறவை குலைக்கிறார்களா ஆளுநர்கள்? வானளாவிய அதிகாரம் ஏன்?

மத்திய - மாநில அரசுகளின் உறவை குலைக்கிறார்களா ஆளுநர்கள்? வானளாவிய அதிகாரம் ஏன்?

webteam

(இடமிருந்து வலம்) பகத்சிங் கோஷ்யாரி (மகாராஷ்டிரா), பன்வாரிலால் புரோகித் (தமிழ்நாடு), ஜெகதீப் தன்கர் (மேற்குவங்கம்) மற்றும் வி.பி.சிங் பட்னூர் (பஞ்சாப்)

பெரும்பான்மை பலம் பெற்ற கட்சியின் அரசியல் நியமனங்களாக ஆளுநர்கள் மாறும்போது, அவர்களுடைய செயல்பாடுகள் ஜனநாயகரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளில் தலையிடுவதாக உள்ளன என்பதே அரசியல் விமர்சகர்களின் கருத்தாக உள்ளது. அது எந்த அரசாக இருந்தாலும் சரி.

கொரோனா காலத்தில் மத ஆலயங்களை மீண்டும் திறப்பது தொடர்பாக முதல் அமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு  எழுதிய கடிதத்தில் மகாராஷ்டிர ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி, சில நாட்களுக்கு முன்பு எழுதிய கடிதத்தில், அவரது மதச்சார்பின்மை பற்றி கேள்வி எழுப்பியிருந்தார். ஒரு ஆபத்தான அரசியல் பாதையில் நடக்கிறார் கோஷ்யாரி. ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் நியமனங்களான அவரது சமகால சகாக்கள் அனைவரும், அந்த சட்டரீதியான பதவிக்கு ஊறு விளைவிக்கிறவர்களாக இருக்கிறார்கள் என அப்போது சொல்லப்பட்டது.

மகாராஷ்டிராவில் தேவையான மெஜாரிட்டி இல்லாமல், முதன்முறையாக பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸை முதல்வராக நியமித்தபோது, ஆளுநர் கோஷ்யாரின் பங்கு கேள்விக்குள்ளானது. அரசு அமைப்பதற்கான முயற்சியில் பட்னாவிஷ் தோல்வியடைந்தபோது, அவரது 'துணையான' அஜித்பவார் தேசியவாத காங்கிரசுக்கு நகர்ந்தபோது ஆளுநரின் அரசியல் முன்னுரிமை வெளிச்சத்துக்கு வந்தது.

மேற்குவங்க திரிணமுல் காங்கிரஸ் முதல் அமைச்சர் மம்தா பானர்ஜியுடன் ஆளுநர் ஜெகதீப் தன்கர் நடத்திவரும் போர்கள் அனைவரும் அறிந்தவை. அவரது நடவடிக்கைகள் எந்த விளைவையும் ஏற்படுத்தாததால், அவர் வகிக்கும் அரசியலமைப்பு பதவி மதிப்பை இழந்துவிட்டதாகத் தெரிகிறது. உள்ளூர் பாஜக தலைவரின் படுகொலைக்குப் பின், முதல்வரின் அலுவலகம் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தன்கர் தகவல் அனுப்பியபோது அவருக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை.

நாடு முழுவதும் பாஜக அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களைக் கவனியுங்கள். குறிப்பாக பஞ்சாப், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் உள்ள ஆளுநர்களின் பொதுவான டிரெண்ட் இதுதான். தங்களுடைய முடிவுகளின் மூலம் மாநில அரசுகளின் செயல்பாட்டில் அவர்கள் தலையிட்டுவருகிறார்கள்.

பஞ்சாப் மாநிலத்தில் அக்டோபர் 20 ஆம் தேதியன்று, மாநிலக் கட்சிகள் மத்திய அரசின் வேளாண் சட்ட மசோதாவை எதிர்ப்பதற்கு மூன்று மசோதாக்களை நிறைவேற்றினர். இந்த மசோதாக்கள் நிறைவேற்றப்படுவதை ஆளுநர் சந்தேகிப்பதாக சட்டமன்றத்தில் முதல்வர் அமரீந்தர் சிங் குறிப்பிட்டார். இங்கேயும் ஆளுநருக்கும் முதல்வருக்கும் இடையே முரண்கள் நிலவுகின்றன.   

தமிழகத்தில் மிகப்பெரும் சூறாவளியை நீட் தேர்வு ஏற்படுத்திவருகிறது. மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதா தொடர்பான விவாதம்  சூடுபறக்கிறது. அனைத்துக் கட்சியினரின் ஆதரவுடன் சட்டமன்றத்தில் அந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இங்கு நன்றாக படிக்கும் பின்தங்கிய பகுதிகள் மற்றும் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு எதிராக நீட் தேர்வு உள்ளதாக கருத்து முன்வைக்கப்படுகிறது.

இந்த நிலையைச் சமாளிப்பதற்கு அதிமுக அரசு தீவிர முயற்சிகளை எடுத்துவருகிறது. முதல்கட்டமாக சிபிஎஸ்இ பாடத்திட்டத்திற்கு இணையாக பள்ளிப் பாடப்புத்தகங்கள் மாற்றப்பட்டன. அடுத்த முயற்சியாக ஏழை எளிய கிராமப்புற மாணவர்களும் மருத்துவக் கல்வி பெறும் முயற்சியாக அவர்களுக்கான தனி இடஒதுக்கீடு உள்ளது. அந்த மசோதாவுக்கான ஒப்புதலை வழங்காமல் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தாமதித்துவருகிறார்.

இதுபற்றி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் அரசு தெரிவித்தது. மேலும், ஆளுநரின் ஒப்புதல் கிடைக்கும் வரை மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்தப்படாது எனவும் உறுதியளித்தது. சமீபத்தில் வெளியான நீட் தேர்வு முடிவுகளில் அரசு இலவசப் பயிற்சி மையங்களில் படித்த 1,633 அரசுப் பள்ளி மாணவர்கள் தேர்ச்சிபெற்றது நம்பிக்கை அளிப்பதாக உள்ளது. 

கடந்த சில ஆண்டுகளாக கர்நாடகா, மத்தியப் பிரதேசம், கேரளா, மகாராஷ்டிரா மற்றும் மேற்குவங்கம் போன்ற மாநில ஆளுநர்கள், தங்களுடைய பணிகளுக்கு செழுமை சேர்க்காமல் பெரும் சர்ச்சைகளை உருவாக்குபவர்களாக இருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன. மத்திய - மாநில அரசுகளுக்கு இடையிலான கசப்புணர்வு, மாநிலங்களிடையே பாகுபாடுகள், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளின் செயல்பாடுகளில் தலையீடு என்பது அதனால் ஏற்படும் விளைவுகளாக உள்ளன.

இது பெரும் வேறுபாட்டிற்கு வழிவகுக்கிறது. மக்களுடைய உரிமைகளைச் சீர்குலைக்கிறது. மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையிலான தேவையற்ற பிரிவினையை ஏற்படுத்துகிறது. இதில் பாதிக்கப்படுபவர்கள் யார்? வெளிப்படையாகக் கூறினால், இந்திய மக்கள்தான்.

இந்திய அரசியலமைப்பு தெளிவாக உள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் போன்ற மக்கள் பிரதிநிதிகளால் குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். ஆளுநர் மட்டும் குடியரசுத் தலைவரால் நியமனம் செய்யப்படுகிறார், அதாவது மத்திய அமைச்சரவையால். மாநில ஆளுநர்கள் என்றாலே, அவர்கள் மத்திய அரசின் ஏஜென்ட் என்ற விமர்சனம் அப்படியேதான் இருக்கிறது.

முதல் அமைச்சரைத் தேர்ந்தெடுப்பது, சட்டமன்ற பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான காலத்தை  நிர்ணயித்தல், நிர்வாகம்  பற்றிய தகவல்களைக் கோருதல், மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது அல்லது குடியரசுத் தலைவருக்கு மசோதாக்களை அனுப்புவதில் நீண்ட காலம் எடுத்துக்கொள்வது, மாநில அரசுத் திட்டங்கள் பற்றி விமர்சிப்பது, பல்கலைக்கழகங்களின் வேந்தராக அதிகாரத்தைப் பயன்படுத்துதல் போன்றவை ஆளுநர் பதவியைச் சுற்றிவரும் சர்ச்சைகளாக இருக்கின்றன. 

இன்றைய நிலையில், சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பின்கீழ் ஆளுநரின் அலுவலகம் என்பது மெளரிய, மொகலாய அல்லது பிரிட்டிஷ் சாம்ராஜ்யங்களின் மாகாண ஆளுநர்களிடமிருந்து முற்றிலும் வேறுபட்டது என்பதை நினைவில்கொள்வது அவசியமாகிறது. 

நன்றி: www.thefederal.com