ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளை தடை செய்யும் மசோதாவை ஆளுநர் ஆர்.என் ரவி மீண்டும் தமிழக அரசுக்கு அனுப்பினார். மீண்டும் சில திருத்தங்களை செய்து அனுப்பும்படி ஆளுநர் மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு இரண்டாம் முறையாக சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய சட்ட மசோதாவை திருப்பி அனுப்பினார் ஆளுநர்.
2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 19ஆம் தேதி தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்வது தொடர்பான சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது. இது தொடர்பாக ஆளுநர் தரப்பில் விளக்கம் கேட்கப்பட்டது. இதற்கு சட்டத்துறை மூலமாக ஆளுநருக்கு தமிழக அரசு விளக்கம் அனுப்பி வைத்தது.
இந்நிலையில் `அவசரச் சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் பெறப்பட்டு விரைவில் பிரகடனப்படுத்தப்படும்’ என தமிழக செய்தித்தொடர்புத்துறை சார்பில் 2022 செப்டம்பர் 26ஆம் தேதி அறிகை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில், ‘கடந்த 10.06.2022 அன்று சட்டமன்றப் பேரவையில் முதல்வர் அறிவித்தபடி, இணையவழி சூதாட்டத்தினை தடுக்க புதிய சட்டம் இயற்றுவது தொடர்பாக தமிழ்நாடு அரசுக்கு அறிவுரை வழங்குவதற்காக, சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதியரசர் கே.சந்துரு தலைமையில் அரசு ஒரு குழுவை அமைத்தது. அந்தக் குழு கடந்த 27.06.2022, தனது அறிக்கையினை முதலமைச்சரிடம் சமர்ப்பித்தது.
அந்த அறிக்கை அதே நாளில் அமைச்சரவையின் பார்வைக்காக வைக்கப்பட்டது. அதன்பின் பள்ளி மாணவர்கள் மீது இணையவழி விளையாட்டுகள் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை பற்றி பள்ளிக்கல்வித்துறை வாயிலாக எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு, பொது மக்களிடம் மின்னஞ்சல் மூலம் பெறப்பட்ட கருத்துகள் மற்றும் கருத்துப் பகிர்வோர்களிடம் நடத்தப்பட்ட கலந்தாலோசனைக் கூட்டம் ஆகியவற்றின் மூலம் பெறப்பட்ட கருத்துக்கள் ஆகியவற்றின் அடிப்படையில், சட்டத்துறையின் ஆலோசனையுடன் ஒரு வரைவு அவசரச் சட்டம் தயாரிக்கப்பட்டு கடந்த 29.08.2022 அன்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தின் பார்வைக்கு வைக்கப்பட்டது.
அக்கூட்டத்தில், இந்த அவசரச் சட்டம் மேலும் மெருகூட்டப்பட்டு செம்மைப்படுத்தப்பட்டு, மீண்டும் முழு வடிவில் அமைச்சரவைக்கு வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டதற்கிணங்க அவசரச் சட்டம் தயாரிக்கப்பட்டு,(26.09.2022 நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் வைக்கப்பட்டு அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்பட்டது. இந்த அவசரச் சட்டத்திற்கு ஆளுநரின் ஒப்புதல் பெறப்பட்டு விரைவில் பிரகடனப்படுத்தப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், ஆன்லைன் சூதாட்ட தடை அவசர சட்டம் கடந்த ஆண்டு நவம்பரில் காலாவதியானது. இருப்பினும் ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் வைக்கப்பட்டிருந்த ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளை தடை செய்யும் மசோதாவை ஆளுநர் ஆர்.என் ரவி இன்று மீண்டும் தமிழக அரசுக்கு அனுப்பினார். மீண்டும் சில திருத்தங்களை செய்து அனுப்பும்படி ஆளுநர் மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு இரண்டாம் முறையாக சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய சட்ட மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பினார்.
ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியதன் காரணத்தை வெளியிடுங்கள் என்று அண்ணாமலை கேட்டுக்கொண்டிருந்தார். இதுகுறித்து விளக்கமளித்த அவர், ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் சட்ட மசோதாவை கொண்டுவர மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என தனது பதிலில் தெரிவித்துள்ளார்.