இணையத்தில் 'கட்டற்ற சுதந்திரம்' என்பது கேள்விக்குறியாகி, கட்டுப்பாடுகள் தேவை என வாதிடப்பட்டு வரும் காலம் இது. ஒருபக்கம் சமூக ஊடகங்கள் முறைப்படுத்தப்பட வேண்டும் எனும் கருத்து வலியுறுத்தப்படுகிறது என்றால், இன்னொரு பக்கம் 'பிக் டெக்' என சொல்லப்படும் தொழில்நுட்ப பெறு நிறுவனங்களின் எல்லையில்லா செல்வாக்கிற்கு கடிவாளம் போடப்பட வேண்டும் எனும் கருத்தும் முன்வைக்கப்படுகிறது.
இந்தப் பின்னணியில், சமூக ஊடகங்கள், ஓடிடி மேடைகள் மற்றும் டிஜிட்டல் செய்தி நிறுவனங்களுக்கான புதிய நெறிமுறைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. 2000-ம் ஆண்டின் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் சமூட ஊடகங்கள், டிஜிட்டல் ஊடகங்களுக்கான நெறிமுறைகள் எனும் பெயரில் இந்த நெறிமுறைகள் வெளியாகியுள்ளன.
கூகுள், ஃபேஸ்புக் உள்ளிட்ட இணைய நிறுவனங்கள் செய்தி ஊடகங்களுக்கு கட்டணம் செலுத்த வழி வகுக்கும் புதிய சட்டம் ஆஸ்திரேலியாவில் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் சமூக ஊடகங்களுக்கான புதிய நெறிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்கள், உரிய உத்தரவுகளின் கீழ் ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை 24 மணி நேரத்தில் நீக்க வேண்டும், ஓடிடி தளங்கள் சுய கட்டுப்பாடு உள்ளிட்ட மூன்றடுக்கு கட்டுப்பாடுகளுக்கு உட்பட வேண்டும், டிஜிட்டல் செய்தி ஊடகங்கள் பத்திரிகை கவுன்சிலுக்கு உட்பட்டு செயல்பட வேண்டும் உள்ளிட்டவை புதிய நெறிமுறைகளின் முக்கிய அம்சங்களாக அமைகின்றன.
ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடக நிறுவனங்கள் பயனர்கள் தரப்பிலான புகார்களை கவனிக்க குறை தீர்ப்பு அலுவலரை நியமிக்க வேண்டும் என்பதும், சமூக ஊடகங்களில் பகிரப்படும் சர்ச்சைக்குரிய தகவல்களை முதலில் பகிர்ந்தவர் விவரத்தை அளிக்க வேண்டும் என்பதும் புதிய நெறிமுறைகளின் முக்கிய அம்சங்களாக அமைகின்றன.
முதல் பார்வைக்கு இந்த நெறிமுறைகள் சமூக ஊடகங்களை முறைப்படுத்த தேவையான கட்டுப்பாடாக தோன்றினாலும், இந்த கட்டுப்பாடுகளின் பின்னே உள்ள நோக்கம் மற்றும் இதன் தாக்கம் குறித்து இணைய வல்லுனர்களும், பிரைவசி காவலர்களும் கவலை கொண்டுள்ளனர். உண்மையில், இந்தக் கட்டுப்பாடுகள் தணிக்கைக்கு வழி வகுக்கும் என்றும், பயனர்களின் பிரைவசியை மேலும் பாதிக்கும் என்றும் அஞ்சப்படுகிறது. இந்தக் கவலைகள் பற்றி கொஞ்சம் விரிவாக பார்க்கலாம்.
ஆஸ்திரேலியாவில், சமூக ஊடக நிறுவனங்களுக்கு கடிவாளம் போட முயற்சிக்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் சமூக ஊடகங்களுக்கான நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டாலும், ஆஸ்திரேலிய சட்டத்தின் தொடர்ச்சியாக இதை கருத முடியாது. ஏனெனில், இரண்டின் நோக்கமும் வேறு, தன்மையும் வேறாக அமைகிறது.
முதல் விஷயம், ஆஸ்திரேலிய புதிய சட்டத்துடன் இந்த நெறிமுறைகளை ஒப்பிட முடியாது. ஏனெனில், இந்த நெறிமுறைகள் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு, சட்ட வடிவம் பெற்று வெளியிடப்படவில்லை. ஏற்கெனவே உள்ள தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் 79-வது பிரிவின் கீழ், புதிய நெறிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. ஆக, பொதுமக்கள் மத்தியில் விவாதிக்கப்படாமலே, சம்பந்தப்பட்டவர்களின் கருத்துகள் முழுமையாக கேட்டறியப்படாமலே இந்த நெறிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
விவசாயிகள் போராட்ட விவகாரத்தில், சர்ச்சைக்குரிய கணக்குகளை தடை செய்ய வேண்டும் எனும் மத்திய அரசின் உத்தரவை ட்விட்டர் நிறுவனம் முழுமையாக நிறைவேற்ற தவறியதை அடுத்து, மத்திய அரசு இந்த நெறிமுறைகளை அறிவித்துள்ளதை முக்கியமாக கருத வேண்டியிருக்கிறது. இறையாண்மை மிக்க அரசின் உத்தரவுகளுக்கு சமூக ஊடக நிறுவனங்கள் பதில் சொல்வது அவசியம் என்றாலும், இது தொடர்பான அரசின் நடவடிக்கையை ஆழமாக அலசிப் பார்க்க வேண்டியிருக்கிறது.
உண்மையில், சமூக ஊடக செயல்பாடுகளை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மூன்றாண்டுகளுக்கும் மேலாக மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சியின் விளைவாகவே புதிய நெறிமுறைகள் அமைந்திருப்பதாக, இணைய சுதந்திரத்திற்கான இந்திய அமைப்பான 'இன்டர்நெட் ஃப்ரீடம் பவுண்டேஷன் இந்த விவகாரம் தொடர்பான விரிவான கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது.
தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் 79-வது பிரிவின் கீழ் விதிமுறைகள் திருத்தப்படுவது தொடர்பாக கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ரகசிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றதாக 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழில் வெளியான செய்தி இதற்கு ஆதாரமாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பயனர்கள் உள்ளடக்கத்தை வெளியிட வழி செய்யும் இடைமுகங்களாக செயல்படும் சமூக ஊடக நிறுவனங்களுக்கு விலக்கு அளிக்கும் பாதுகாப்பு அம்சத்தை இந்தப் பிரிவு கொண்டுள்ளது.
இந்த நெறிமுறைகளில்தான் அரசு மாற்றத்தை கொண்டு வந்து, சமூக ஊடக நிறுவனங்களுக்கு கடிவாளம் போட விரும்பியது. முதலில் ரகசிய ஆலோசனை கூட்டம் தொடர்பான செய்தியை மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மறுத்தாலும், பின்னர் இந்த அம்சங்கள் தொடர்பாக பொதுமக்களின் கருத்துகள் கோரப்பட்டன. இதற்கான வரைவு நெறிமுறைகளில், சமூக ஊடகங்களில் பகிரப்படும் சர்ச்சைக்குரிய தகவலை முதலில் பகிர்ந்தவர் விவரத்தை வெளியிட வேண்டும் எனும் அம்சமும் இடம்பெற்றிருந்தது.
இந்தப் பின்னணியில்தான் அண்மையில் சமூக ஊடகங்கள், ஓடிடி தளங்கள் மற்றும் டிஜிட்டல் ஊடகங்களுக்கான புதிய நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
ஆட்சேபனைக்குரிய கருத்துகள் மற்றும் பெண்களுக்கு எதிரான கருத்துகள் தொடர்பான நடவடிக்கை தேவை என்றாலும், இவற்றை தீர்மானிப்பதற்கான அதிகாரம் முறையாக வரையறுக்கப்படாதது, அரசின் தணிக்கைக்கே வழி வகுக்கும் என அஞ்சப்படுகிறது. சர்ச்சைக்குரிய கருத்துகள் விஷயத்தில் அரசு உத்தரவு மட்டுமே இறுதியானதா? இது தொடர்பாக முறையிட்டு தீர்வு காண என்ன வழிமுறை என்பது தெளிவாக இல்லை. மேலும், இத்தகைய அதிகாரம் கொண்ட கட்டுப்பாட்டு அமைப்பு போன்றவற்றை உருவாக்க முறையான நாடாளுமன்ற விவாதம் நடைபெற்று, உரிய அமைப்பு உருவாக்கப்படவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும்.
எனவே, அரசுக்கு எதிரான கருத்துகள் எல்லாம் ஆட்சேபனைக்குரியதாக கருதப்பட்டும் தணிக்கைக்கு உள்ளாகலாம் எனும் வாதத்தை அலட்சியப்படுத்த முடியாது. அதேநேரத்தில், முதலில் செய்தியை பகிர்ந்தவர் தகவலை தெரிவிக்க வேண்டும் என்பது, செய்திகளுக்கான என்கிரிப்ஷனை உடைப்பதாக அமைந்து, பயனர்களின் தனியுரிமையையும் பாதிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
டிஜிட்டல் ஊடகங்களுக்கான நெறிமுறைகளை பொறுத்தவரை, அவற்றுக்கான தெளிவான வரையறை உருவாக்கப்படவில்லை என்கின்றனர். தகவல் தொழில்நுட்ப சட்டத்தில், டிஜிட்டல் ஊடகங்கள் இடம்பெறவில்லை எனும் நிலையில், இந்தச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்படும் புதிய நெறிமுறைகள் கீழ் டிஜிட்டல் ஊடகங்களை கொண்டு வருவது எப்படி சரியாக இருக்கும் எனும் கேள்வி எழுப்பப்படுகிறது.
இப்படி எழும் கேள்விகள் தொடர்பாக மக்கள் மன்றத்தில் முறையான விவாதம் நடைபெற்று, அதன் பிறகு முறையான வழியில் நெறிமுறைகள் கொண்டு வரப்பட வேண்டும் என்பதே இணைய வல்லுனர்களின் கருத்தாக இருக்கிறது.
தொடர்புடைய இணைப்பு: Latest Draft Intermediary Rules: Fixing big tech, by breaking our digital rights?
- சைபர்சிம்மன்