சிறப்புக் களம்

கொரோனா கால மாணவர் நலன் 18: அதிகரிக்கும் ஒமைக்ரான்... குழந்தைகளுக்கும் வேகமாக பரவுகிறதா?

கொரோனா கால மாணவர் நலன் 18: அதிகரிக்கும் ஒமைக்ரான்... குழந்தைகளுக்கும் வேகமாக பரவுகிறதா?

நிவேதா ஜெகராஜா

குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்படும்பட்சத்தில், அவர்களுக்கு டைப் 1 அல்லது டைப் 2 வகை சர்க்கரை நோய் ஏற்படும் வாய்ப்புகளும் அதிகரிப்பதாக அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (சிடிசி) தனது ஆய்வொன்றில் குறிப்பிட்டுள்ளது. இதேநேரத்தில், இந்திய தேசிய குழந்தைகள் நல பிரிவுக்கான அகாடெமி சார்பிலிருந்து 'இணை நோய்கள்’ உள்ள குழந்தைகள் கொரோனாவால் பாதிக்கப்படுகையில் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் விகிதம் அதிகரிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இப்படியாக கொரோனாவின் போதும், கொரோனாவுக்குப் பின்னரும் குழந்தைகள் மத்தியிலான பாதிப்புகள் அதிகரிப்பதாக அடுத்தடுத்த தகவல்கள் வெளியாவது, பெற்றோர் மத்தியில் கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையொட்டியே, தொடரின் இந்த அத்தியாயம் அமையவுள்ளது. குறிப்பாக குழந்தைகள் மத்தியில் இந்த அலை கொரோனா எப்படியான தாக்கத்தை ஏற்படுத்துகிறது; என்ன மாதிரியான பிரச்னைகளை குழந்தைகள் எதிர்கொள்கின்றனர், அவர்களை காக்க பெற்றோர் என்ன செய்ய வேண்டும், தொற்று ஏற்பட்டாலும் பின் பெற்றோர் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம். 

இந்த மூன்றாவது அலையில் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளைப் பொறுத்தவரை அனைவருக்கும் எழுந்துள்ள முதல் கேள்வி,கடந்த அலை கொரோனாக்களைவிடவும் இந்த அலை கொரோனாவால் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் விகிதம் உயர்கிறதா’ என்பது. ஏனெனில் இந்தியாவில் டெல்லி, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் கொரோனாவுக்கு சிகிச்சைக்கு பெறும் குழந்தைகள் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அனுமதிக்கப்படும் குழந்தைகளிலும், முக்கிய அறிகுறியாக அதிக காய்ச்சல்தான் இருப்பதாக கூறப்படுகிறது. அதிக காய்ச்சல் இருப்பதால், குழந்தைகளால் மாத்திரைகள் எடுத்துக்கொள்ள முடியவில்லை என்று டெல்லியில் கொரோனா பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சை அளித்துவரும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மூத்த குழந்தைகள் நல மருத்துவர் தீரன் என்பவர் ஆங்கில தளமொன்றுக்கு அளித்த பேட்டியில், “11 - 18 வயதுடைய சிறார்களுக்கு அதிக காய்ச்சல் மற்றும் வறட்டு இருமல் அதிகமாக தெரிகிறது. சில குழந்தைகள் மத்தியில் தீவிர பாதிப்பு இருந்தாலும், மருத்துவமனையில் அனுமதிக்கவேண்டிய நிலை பல குழந்தைகளுக்கும் பெரும்பாலும் ஏற்படுவதில்லை என்றே நான் உணர்கிறேன். இயல்பாகவே குழந்தைகளிடம் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியேவும், அவர்களை நோயிலிருந்து காக்கிறது என்பதே இதன் பின்னணியாக நான் நினைக்கும் விஷயம்” எனக்குறிப்பிட்டு, பெற்றோர் அச்சப்பட வேண்டாமென தெரிவித்துள்ளார். இதேபோல மூத்த மருத்துவர் சந்தரசேகர், “குழந்தைகளுக்கு மூச்சு விடுவதில் சிக்கல் ஏற்படும்போதுதான், அவர்களை மருத்துவமனையில் அனுமதிக்கும் நிலையின் அவசியம் அதிகமாகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

இப்படியாக மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்தாலும்கூட, கொரோனா உச்சத்தை தொடும் போது இந்த நிலை மாறக்கூடுமோ என்ற அச்சம் நிலவுகிறது. ஏனெனில் தற்போது கொரோனா உச்சத்தை தொட்டத்தை அமெரிக்காவில், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் கொரோனாவுக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் விகிதம் உயர்ந்துள்ளது. இதைக் கருத்தில்கொண்டு, குழந்தைகள் மத்தியிலான தடுப்பூசி விநியோகத்தை அரசு துரிதப்படுத்த வேண்டுமென்றும், அப்போதுதான் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவது குறையுமென்றும் பெற்றோர் தரப்பில் தெரிவிக்கின்றனர்.

இந்த இடத்தில் அமெரிக்காவில் தற்போது குழந்தைகளுக்கு என்ன மாதிரியான அறிகுறிகள் அதிகம் தெரிகின்றன என்பது பற்றியும் நாம் பார்க்க வேண்டியுள்ளது. அமெரிக்க தளமொன்றில் நமக்கு அதுபற்றி கிடைத்த தகவல்கள், இங்கே:

* இந்த அலை கொரோனாவில் அதிகம் பரவும் ஒமைக்ரான், முந்தைய அலையில் பரவிய திரிபுகளைவிடவும் வேகமாக பரவுகிறது. அதேநேரம் சற்று வித்தியாசமான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. அந்தவகையில், குழந்தைகளுக்கு ஏற்படும் ஒமைகரான், சுவாசப்பகுதியின் மேல் பகுதியில் அதிக பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இதனால் குழந்தைகளுக்கு அப்பகுதியில் தொற்று தீவிரமாகி மூச்சுத்திணறல், வறட்டு இருமல் போன்றவை ஏற்படுகிறது.

* இத்தகைய காரணங்களால் ஒமைக்ரான் பாதிக்கப்படும் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் எண்ணிக்கை உயர்கின்றது. என்றபோதிலும், அவர்களுக்கு தீவிர பாதிப்பு ஏற்படுவதில்லை.

* இப்போதைக்கு இணைநோய் தாக்கமுள்ள குழந்தைகள், நரம்பு சார்ந்த / தொற்றுநோய்க்கான வாய்ப்புள்ள / சுவாசக்குழாய் சார்ந்த சிக்கலுள்ள குழந்தைகள் ஆகியோருக்குத்தான் கொரோனா தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.

குழந்தைகளை முழுமையாக கொரோனா மற்றும் அதன் தீவிரத்திலிருந்து காக்க, அவர்களுக்கு செய்ய வேண்டியவை என்ன?

* தடுப்பூசி பெற தகுதியுடைய சிறார் எனில், அவர்களுக்கு தடுப்பூசி போட்டுவிடவும். குழந்தை மட்டுமன்றி, குழந்தையின் அன்றாட வாழ்விலும் உள்ள பெரியவர்களும் தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும்.

* வெளியில் செல்லும் நேரம் அனைத்தின்போதும் குழந்தைகளுக்கு மாஸ்க் அணிவித்து அழைத்துச் செல்லவும். கூட்டம் நிறைந்த பகுதிகளுக்கு குழந்தைகளை அழைத்து செல்வதை தவிர்க்கவும்.

* குழந்தைகளுக்கு சளி, இருமல் போன்ற தொந்தரவு ஏற்பட்டால் கட்டாயம் மருத்துவரிடம் அழைத்துச்சென்று ஆலோசனை பெறுங்கள். மருத்துவர் பரிந்துரைக்கேற்ப கொரோனா பரிசோதனையையும் செய்யுங்கள்.

தொற்று ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?

இவை அனைத்துக்கும் பிறகும், குழந்தைக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டால், பெற்றோர் தயவுசெய்து பதற்றமடைய வேண்டாம். மருத்துவ ஆலோசனையுடன் குழந்தையை கவனித்துக்கொள்ளவும். குழந்தைகளை தனிமைப்படுத்துவது சிரமமென்றாலும்கூட, பெற்றோரில் ஒருவர் குழந்தையுடனேயே தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளவும். மற்றொருவர் குழந்தைக்கும் குடும்பத்துக்கும் தேவையானவற்றை செய்து கொடுக்கவும். கொரோனாவிலிருந்து குழந்தைகள் மீளும் சதவிகிதம் மிக மிக அதிகமென்பதால், அச்சம் தேவையில்லை. கொரோனாவுக்குப் பின்னரும் குழந்தைகளின் நலனில் கவனம் செலுத்திவரவும். குழந்தைகளுக்கு ஏற்படும் எவ்வித உடல் சார்ந்த மாற்றத்தையும் உதாசீனப்படுத்த வேண்டாம்.