சிங்கப்பூரில் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு எதிராக நிலவும் போக்கு, மிகப் பெரிய அரசியல் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இதன் பின்புலம் குறித்து சற்றே விரிவாக காணலாம்.
ஆசியாவின் நிதி மையமாக கடந்த தசாப்தங்களில் பெரும் வளர்ச்சியை கண்டு வந்தது சிங்கப்பூர். இந்த வளர்ச்சிக்கு பின்புலமாக இருந்தது, வெளிநாட்டு தொழிலாளர்கள். பொருளாதாரத்தில் சிங்கப்பூர் பெற்றுள்ள வெற்றிக்கு உலகளாவிய தொழிலாளர்களின் மிகப்பெரிய உழைப்பே காரணம். ஆனால், தற்போது வெளிநாட்டு தொழிலாளர்களை முன்வைத்து சிங்கப்பூரில் எழுந்துள்ள அரசியல் பிரச்னைகள் சர்வதேச கவனத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்தப் பிரச்னைகள் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு ஒரு பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது.
இதற்கு விதை போட்டது சமீபத்திய ஆய்வு ஒன்று. சிங்கப்பூரில் உள்ள 'கொள்கை ஆய்வு மையம்' எடுத்த அந்த ஆய்வில் சிங்கப்பூரின் பூர்வகுடிகள் 70% பேர், வெளிநாட்டு தொழிலாளர்களால் தங்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிறது என்றும், அதனால் வருங்காலங்களில் வெளிநாட்டு தொழிலாளர்கள் பணியமர்த்தலில் கடுமையான வரம்புகளைக் கொண்டு வரவேண்டும் என்றும் கோரியுள்ளனர். 43.6% பேர் வெளிநாட்டவர்களின் குடியேற்றத்தால் வேலையின்மை அதிகரிக்கிறது என்று தெரிவித்துள்ளனர். மேலும், `பணி பாதுகாப்பு தொடர்பாக அச்சம் எழுந்துள்ளது. வெளிநாட்டுத் தொழிலாளர்களால் தங்களின் எதிர்காலமும், தங்கள் சந்ததியினரின் எதிர்காலமும் கேள்விக்குறியாகி வருகிறது" என்று சிங்கப்பூர் மக்கள் மற்றும் அங்கு நிரந்தர குடியுரிமை பெற்றவர்கள் இந்தக் கருத்துக்கணிப்பு ஆய்வில் தங்கள் கவலைகளை வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்த ஆய்வு வெளியானதில் இருந்து வெளிநாட்டு தொழிலாளர்கள் குறித்த அரசியல் விவாதம் அங்கு பெருகிவருகிறது. இதுதொடர்பாக எதிர்வரும் மாதங்களில் சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் அதிக விவாதம் நடைபெற வாய்ப்பிருக்கிற நிலையிலும், இப்போதே உள்ளூர் ஊடகங்கள், வெளிநாட்டுத் தொழிலாளர்கள்மீது அதிகரித்து வரும் கோபம் குறித்து தொடர்ந்து செய்திகளை வெளியிட்டு வருகின்றன. சமூக ஊடங்களிலும் ஆய்வு முடிவுகளுக்குப் பின் 'பணிப் பாதுகாப்பு' தொடர்பாக நிறைய விவாதங்கள் நடைபெறத் தொடங்கியுள்ளன. இதனால், இந்த விஷயத்தில் சிங்கப்பூரில் ஆளும் அரசு அழுத்தங்களை எதிர்கொள்ள தொடங்கியிருக்கிறது.
இந்த அழுத்தங்களுக்கு பதில் கொடுக்கும் விதமாக இரண்டு அமைச்சர்கள், நாடாளுமன்றத்தில் இதுதொடர்பான அறிக்கைகளை சமர்ப்பித்தனர். அந்த அறிக்கையில், 'சர்வதேச திறமைகளை உறுதி செய்து, அதன்மூலம் பொருளாதாரம் வளர நடவடிக்கை எடுக்கப்படும். சர்வதேச வேலைவாய்ப்புகளை ஊக்குவிக்கும் அரசாங்கத்தின் சமநிலைப்படுத்தும் நடவடிக்கை பாதுகாக்கப்படும்" என்று வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு சற்று ஆதரவாக பேசப்பட்டிருந்தது.
சில தினங்கள் முன் பேசிய சுகாதார அமைச்சர் ஓங் யே குங், "சிங்கப்பூர் வெற்றிபெற உதவிய, உதவி வரும் அடித்தளத்தை (வெளிநாட்டு தொழிலாளர்களை) நாம் கவனக்குறைவாக கையாண்டு விடக்கூடாது. சர்வதேச தொடர்பு இல்லாமல், சர்வதேச மக்களை வரவேற்காமல், நம்மால் வாழமுடியாது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்" என்று பேசியிருந்தார்.
இவரை போலவே சிங்கப்பூரின் மத்திய வங்கித் தலைவரும், சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் நிர்வாக இயக்குநருமான ரவி மேனனும் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு ஆதரவாக தனது கருத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். அதில், "இங்கு தொழிலாளர் பற்றாக்குறை இருக்கிறது. இதனால்தான், நல்ல தகுதி வாய்ந்த வெளிநாட்டவர்களை நிறுவனங்கள் நம்பியிருக்க வேண்டி இருக்கிறது. இங்கு வேலைக்கு வரும் பல வெளிநாட்டு தொழிலாளர்களும் அதிக திறமை வாய்ந்தவர்கள். வேலையில் அதிக ஆர்வம் கொண்டவர்கள். அவர்கள் கண்ணியமானவர்களும் கூட. இதனை ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும். இதனை பல சந்தர்ப்பங்களில் நிரூபித்துள்ளார்கள். அவர்கள் கடினமாக உழைக்கக்கூடிய நபர்கள். இரவு தாமதம் ஆனாலும் வேலை செய்வார்கள். நம் சமுதாயத்திற்கு நிறைய பங்களிப்புகளை செய்துள்ளார்கள்" என்று தனது ஆதரவை தெரிவித்துள்ளார் ரவி மேனன்.
இதுபோன்று ஆளும் அரசும், வேறு சிலரும், வெளிநாட்டுத் தொழிலாளர்களின் ஆதரவு நிலைப்பாட்டில் இருக்கின்றன. என்றாலும், சில நடவடிக்கைகளை சிங்கப்பூர் அரசு துரிதப்படுத்தியுள்ளது. எந்த ஒரு வேலையாக இருந்தாலும், சிங்கப்பூர் குடிமக்களுக்கே முன்னுரிமை. சிங்கப்பூர் குடிமக்கள் யாரும் வேலைக்கு வராத பட்சத்திலேயே அந்த வேலைவாய்ப்பை வெளிநாட்டவருக்கு வழங்க வேண்டும் என்பதுதான் அந்நாட்டின் விதி. ஆனால், நிறுவனங்கள் இந்த விதிகளை மீறி சிங்கப்பூர் குடிமகன்களுக்கு நியாயமான வாய்ப்பை வழங்க மறுத்து, முறைகேடாக வெளிநாட்டவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறதா என்று சில காலமாக கண்காணிக்க தொடங்கியுள்ளது ஆளும் அரசு.
இதுமட்டுமில்லாமல், வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படும் வேலைவாய்ப்பு பாஸ் (S-பாஸ் உள்ளிட்டவை) வழங்கும் நடைமுறையையும் கடினமாக்கி இருக்கிறது. முன்பு போலல்லாமல், வெளிநாட்டவர்களுக்கு இப்போது வேலை செய்ய சம்பந்தப்பட்ட நிறுவனம் ஸ்பான்சர் விசா கொடுக்க வேண்டும் என்ற புதிய விதியையும் ஏற்படுத்தி இருக்கிறது.
கடந்த பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், உற்பத்தித் துறையில் 2023-க்குள் வெளிநாட்டு தொழிலாளர்களின் பணியமர்த்தலை 20%-ல் இருந்து 15% ஆக குறைக்கப்படும் என்று அறிவித்திருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாட்டு தொழிலாளர்களின் பணியமர்த்தல் 40% என்ற அளவில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், 3,323 டாலர் அளவில் (இந்திய மதிப்பில் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல்) மாத சம்பளம் பெறும் வேலைவாய்ப்புக்கான பாஸ்களின் எண்ணிக்கையை வெகுவாக குறைத்துள்ளது அந்நாட்டு அரசு. 2020-ஆம் ஆண்டில் 8.6% அளவில் இதனை குறைத்துள்ளது. இதன்காரணமாக வெளிநாட்டவர்களுக்கான வேலைவாய்ப்புகள் வெகுவாக குறைந்துள்ளன.
பிரிட்டிஷ் காமர்ஸ் ஆஃப் சிங்கப்பூர் வணிக நிறுவன கணக்கெடுப்பின்படி, 2021-ஆம் ஆண்டின் முதல் பாதியில் சிங்கப்பூரின் சிறிய நகரங்களில் பணிபுரியும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை 18% ஆக சுருங்கியுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 12 மாதங்களில் வேலைவாய்ப்பு பெற்ற வெளிநாட்டவர்களின் எண்ணிக்கையும் 21,600 என்ற அளவில் குறைந்துள்ளது. சிங்கப்பூர் குடிமக்கள் வேலையின்மை விகிதம் 2020-ன் மூன்றாவது காலாண்டில் 4.9% என்ற அளவை எட்டியிருக்கிறது. 2009-ம் ஆண்டு இருந்ததை விட இது அதிகம். இதுபோன்ற விஷயங்கள் வெளிநாட்டு தொழிலாளர்களின் வேலை வாய்ப்புகளுக்கான கடுமையான பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
சிங்கப்பூரில் நீண்டகாலமாகவே வெளிநாட்டுத் தொழிலாளர்கள் பிரச்னை, முக்கிய பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது. இது அரசியல் ரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. கடந்த பொதுத்தேர்தலில் சிங்கப்பூரின் முன்னணி எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி இதுவரை இல்லாத வகையில் 93 நாடாளுமன்ற தொகுதிகளில் 10 இடங்களை வென்று அசத்தியது. இந்த வெற்றிக்கு பிரதான காரணமாக அமைந்தது, அந்தக் கட்சி வெளியிட்ட சில அறிவிப்புகள்தான். வெளிநாட்டு தொழிலாளர்களின் வேலைவாய்ப்பை கடினமாக்குவது, சிங்கப்பூரின் பூர்வகுடிகளை வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவகு உட்பட அக்கட்சி வெளியிட்ட வேலைவாய்ப்பு தொடர்பான அறிவிப்புகள் மக்கள் மத்தியில் எடுபட இதுவரை இல்லாத அளவு வெற்றியை ருசித்தது.
இதனால் வரவிருக்கும் தேர்தல்களின்போதும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் பிரச்னை, முக்கிய பிரச்னையாக உருவெடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்ப தற்போது எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை கையிலெடுத்து பேசி வருகின்றன. மேலும், எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் புலம்பெயர்ந்தோர்கள், அவர்களின் வேலைவாய்ப்பை பற்றிய ஆய்வை தனிப்பட்ட முறையில் எடுக்க தொடங்கியுள்ளனர். ஏற்கெனவே கொரோனா பெருந்தொற்று, அதனால் விதிக்கப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடுகள் போன்றவை வெளிநாட்டுத் தொழிலாளர்களை பணியமர்த்துவதில் கடும் சவால்களை ஏற்படுத்தி வரும் நிலையில், தற்போது எழுந்துள்ள அரசியல் சர்ச்சைகளும் அவர்களுக்கான வாய்ப்பை கேள்விக்குறியாக்கி வருகின்றன.
- மலையரசு
உறுதுணைக் கட்டுரை: ThePrint