சிறப்புக் களம்

சொல்ல மறந்த கதை: கொரோனா மருத்துவர்கள் எதிர்கொள்ளும் அழுத்தங்கள், சவால்கள்!

சொல்ல மறந்த கதை: கொரோனா மருத்துவர்கள் எதிர்கொள்ளும் அழுத்தங்கள், சவால்கள்!

JustinDurai

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்புகள் இரண்டு லட்சத்தை நெருங்கியுள்ள நிலையில், மருத்துவர்கள் ஓய்வின்றி தொடர்ச்சியாக பணியாற்றும் நிலை உள்ளது.

தங்கள் வீடுகளுக்கும் செல்ல முடியாமல், வெளியிலும் செல்ல முடியாமல் தொடர்ந்து கொரோனா வார்டில் பணியாற்றுவதால் கடுமையான மன அழுத்தத்தையும், பணிச் சுமையையும் எதிர்கொண்டு வருகின்றனர். மறுபுறம் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்களும் கொரோனா நோய்த் தொற்றுக்குள்ளாகும் நிகழ்வுகளும் நடந்தேறி வருகிறது.

கொரோனாவுக்கு எதிரான போரில் வீரர்களுக்கான உடைகள் அணியாத போர் வீரர்களாக உள்ள மருத்துவ பணியாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள், அழுத்தங்கள் என்ன? மருத்தவர் சென்பாலனிடம் கேட்டோம்.

''2020 பிப்ரவரி மாத இரண்டாம் வாரம் தமிழ்நாடு பொதுசுகாதாரத்துறையில் பரபரப்பு தொற்றியது. அன்றில் இருந்து இன்று வரை நான்கு மாதங்களாக மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்களின் வாழ்க்கை பரபரப்பாகவேச் செல்கிறது.

ஊரே லாக்டவுனில் இருந்த போது வீட்டிற்குக் கூட வரமுடியாமல், பணியிடத்திலும் குவாரண்டைன் இடங்களிலும் தங்கிப் பணிபுரிந்தனர். இதில் கணவர், மனைவி இருவருமே மருத்துவராக, செவிலியராக இருக்கும் குடும்பங்களின் நிலை மிகப்பரிதாபமானது. இருவருமே பணி மற்றும் தனிமைப்படுத்திக் கொள்ளுதலுக்கு செல்வதால், குழந்தைகளைப் பார்த்துக் கொள்வதில் சிரமம் ஏற்பட்டது.

கொரொனா தொற்றை நிர்வகிப்பதில் ஏற்பட்ட சில குழப்பங்கள் மருத்துவர்களை பெருமளவு சிரமத்திற்கு ஆளாக்கின. தினமும் ஒரு அறிவிப்பு, தினமும் ஒரு விதிமுறை. காலை எழுந்தவுடன் மருத்துவமனை வாட்ஸ் ஆப் குழுக்களில் இன்று என்ன புதிய விதிமுறை பகிரப்பட்டுள்ளது என்பதைப் பார்த்துவிட்டு தான் அன்றைய வேலையையே ஆரம்பிக்கும் நிலை. இது இன்று வரை தொடர்கிறது. இவை தவிர நிர்வாக ரீதியிலான பல புதிய விதிமுறைகள், நடு இரவு தொலைப்பேசி அழைப்புகள் என கடந்த நான்கு மாதங்களில் எந்த மருத்துவப் பணியாளரும் நிம்மதியாக உறங்கவில்லை.

ஆரம்பத்தில் தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள், மாஸ்க் போன்றவற்றிற்கு நிலவிய பற்றாக்குறை தற்போது குறைந்திருந்தாலும், இன்னும் முழுமையாக மாறவில்லை. ஆரம்ப காலங்களில் மாஸ்க் கேட்ட மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்களுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் மருத்துவத்துறை பணியாளர்களிடம் இன்னும் மறையவில்லை.

சென்னை மருத்துவக் கல்லூரியின் செவிலியக் கண்காணிப்பாளர் மறைவும் அதைத் தொடர்ந்து எழுந்த சர்ச்சைகளும் அனைவரும் அறிந்ததே. கொரொனா வார்டில் பணிபுரிந்து உயிரிழந்த சீனியர் செவிலியருக்கே இந்நிலையா என்று கொரொனா தொற்றுப்பணியில் இருக்கும் அனைவரிடமும் விரக்தியை ஏற்படுத்திய சம்பவம் அது.

தினமும் பல மருத்துவர்களுக்கு, செவிலியர்களுக்கு தொற்று ஏற்படுகிறது, இறப்புகளும் நிகழ்கின்றன. உடன் படித்த, உடன் பணிபுரிந்த நண்பர்களின் மரணம் மருத்துவப் பணியாளர்களிடையே மன அழுத்தத்தை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

லாக்டவுன் காலத்தில் வீட்டில் இருந்தோருக்கே பொருட்கள், சேவைகள் கிடைப்பதில் சில சிரமங்கள் நேர்ந்தன. காய்கறி வாங்குவதில் இருந்து, அத்தியாவசிய சேவைகள் பெறுவது வரை மருத்துவப் பணிக்குச் செல்வோருக்கு சிரமங்கள் அதிகமாகவே இருந்தன. மற்றவர்கள் சரியாகக் கடை திறக்கும் நேரத்தில் சென்று பொருட்கள் வாங்கும் போது இவர்கள் தங்களுக்கு கிடைக்கும் நேரத்தில் அலைந்து திரிந்து வாங்கினர்.

உயிர் போகும் என்றாலும் இராணுவத்தில் சேருவதற்குக் காரணம், நிலையான வருமானமும், ஓய்வூதியம் போன்ற பலன்களும் தான். சமீபத்தில் தொகுப்பூதிய அடிப்படையில் தற்காலிகமாக செவிலியர்களை அரசு வேலைக்கு நியமித்தது. அதில் 75% செவிலியர்கள் பணியில் சேரவில்லை என்று செய்திகள் தெரிவிக்கின்றன. செவிலியர் பற்றாக்குறை இறப்புகளை அதிகரிக்கும். பணியில் இருக்கும் செவிலியரையும் சோர்வுறச் செய்யும். இன்றைய சூழ்நிலையை கொரொனாவிற்கு எதிரானப் போர் என வெறும் வார்த்தைகளாகச் சொல்லக்கூடாது.  

வட இந்தியாவைப்போல செவிலியர்களையும் மருத்துவர்களையும் அடுக்குமனை குடியிருப்பிற்குள் அனுமதிக்காத நிலை தமிழ்நாட்டில் இல்லை. இருந்தாலும் அண்டைவீட்டினர் கூட தங்களை எச்சரிக்கையாக அணுகுவதாக மருத்துவர்களும் செவிலியர்களும் கூறுகின்றனர். நோய் தொற்று பயத்தின் காரணமாக தங்கள் பெற்றோர்களைப் பார்ப்பதையே, கொரொனா வார்டில் பணிபுரியும் நண்பர்கள் தவிர்த்துவிடுகின்றனர். இது தவிர்க்க முடியாதது என்றாலும் நான்கு மாதங்களாகத் தொடரும் போது மன அழுத்தத்தை உண்டாக்குகிறது.

தனியார் மருத்துவர்களுக்கோ நான்கு மாதங்களாக தங்கள் கிளினிக்களை திறக்க முடியாத நிலை, முக்கியமாக தனியார் பல் மருத்துவர்கள் பலரும் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளனர். இந்த கிளினிக்களை நம்பியிருக்கும் ஆயிரக்கணக்கானோர் வேலையின்றி உள்ளனர்.

இப்போது ஏற்பட்ட நெருக்கடிகளைவிட இந்நிலை இன்னும் எத்தனை நாட்கள் நீடிக்கும் எனத் தெரியாமல் இருப்பது இன்னும் மன அழுத்தத்தை அதிகரிக்கிறது.'' என்கிறார் அவர்.