மற்ற சர்ச்சைகளை ஒதுக்கி வைத்து விட்டு ‘கஜா’ என்ற புயலை எதிர்கொள்ள சென்னை மற்றும் வட தமிழக மக்கள் தயாராக இருந்து கொள்ளுங்கள் என்பதான செய்திகள் வரத் துவங்கியிருக்கின்றன. குறிப்பாக நீலகிரி மாவட்டமும்.
கடைசியாக 58 வருடங்களுக்கு முன்பு தமிழகம் பார்த்த சூப்பர் புயல், தனுஷ்கோடியில் வீசியது. அதைவிட அளவில் கொஞ்சம் குறைந்த, ஆனால் 210 கிலோமீட்டர் வேகத்தில் தாக்கும் இந்த சூப்பர் புயல் மரக்காணத்தை மையமாக வைத்து பெசன்ட்நகர் வரை கரையைக் கடக்கலாம் என்றும் தனியார் வானிலை ஆய்வாளர்கள் சொல்லத் துவங்கியிருக்கின்றனர்.
வானிலை ஆய்வைப் பொறுத்தவரை நாளை காலைகூட சட்டென எல்லாமும் மாறி விடலாம். ஆனால் இது இந்த நேரத்துக் கணிப்பு. நான் வானிலை ஆய்வாளர் கிடையாது. கேட்டவற்றை, படித்தவற்றைத் தொகுத்துச் சொல்கிறேன். இதன் காரணமாக அடுத்த 70 மணி நேரங்களில் தமிழகத்திற்குப் பரவலாக கனமழை இருக்குமென சொல்லப்படுகிறது.
பொதுவாகவே இங்கு எல்லாவற்றையும் மூடி மறைக்கவே எல்லோரும் ப்ரியப்படுகிறோம். பிலிப்பைன்ஸ் நாட்டை எடுத்துக் கொண்டால் வருடம் தோறும் ஏதாவதொரு சூப்பர் புயல் தாக்குகிறது. தாக்கும் என்பதை முன்கூட்டியே அறிந்து அவர்கள் தங்களைத் தயார்படுத்திக் கொள்ளவும் செய்கிறார்கள். இது மாதிரியான அமைப்பு இங்கு சுத்தமாக இல்லை.
வானிலை அறிவிப்பு வழங்குபவர்களைக் கிண்டலாக அணுகும் சமூகத்தில் வேறு எதை எதிர்பார்க்க முடியும்? நான் விரும்பிக் கேட்கும் தனியார் வானிலை அறிஞர் ஒருத்தர் கடந்த வாரம் மழை பெய்யும் என்று சொல்லியிருந்தார். நூலிழையில் அந்தத் தாழ்வு மண்டலம் இலங்கைக்கு கிழக்கே நுழைந்து விட்டதால், அம்மழை தப்பிப் போய் விட்டதற்கு அவரென்ன செய்வார்? இப்போது இதுவும்கூட மாறினால் அவர் என்ன செய்வார்? புரிபடாத இயற்கை நகர்வுகள் ஏற்பட ஒருவகையில் எல்லோரும் காரணம்தானே?
அதற்காக அவரை அவதூறான வார்த்தைகளில் திட்டியதாக மனம் கசிந்து வருந்தினார். இத்தனைக்கும் அவர் தன் சொந்தக் கைக்காசைப் போட்டு சேவை நோக்குடன் செயல்படுபவர். இங்கே திட்டுவதற்கும் எள்ளுவதற்கும் காரணங்கள் மட்டுமே தேவைப்படுகின்றன. விளைவுகள் குறித்து யாருக்கும் அக்கறையில்லை.
எல்லா தனியார் அறிவிப்பாளர்களும், "அதிகாரப்பூர்வ வானிலை அறிக்கைக்கு இந்திய வானியல் துறை அறிக்கையைப் பார்க்கவும்" என அஞ்சிப் பம்முகின்றனர். என்ன வகையான அழுத்தம் இதற்குப் பின்னால் இருக்கிறதென யூகிக்க முடிகிறதா? மக்களை நேரிடையாக சம்பந்தப்படுத்தும் வானிலை விஷயங்களை வெளிப்படையாக பேசுவதில் என்ன தவறு? அதெப்படி அச்சமூட்டுவதாக அமையும்?
ஆனால் இது மாதிரியான விஷயங்களை விவசாயிகளும் மீனவர்களும் மிகச் சரியாக எடுத்துக் கொள்கிறார்கள். ஏனெனில் மழையோடு நேரிடையாகச் சம்பந்தப்பட்டவர்கள் அவர்களே.
எங்கள் பகுதியில் மானாவாரி விவசாயம் அழிவின் விளிம்பில் இருக்கிறது. இன்னும் நான்கு நாட்களில் மழை வரலாம் என்று சொன்ன போது, அதற்குள் காய்ந்து விடும் சோளம் என்றார் ஒரு விவசாயி. எல்லா பக்க மானாவாரி விவசாயத்தின் நிலையும் இதுதான். வட கிழக்குப் பருவ மழை துவங்கியும் இன்னும் பல இடங்களில் நனைக்கக்கூட இல்லை மழை.
"கவலைப்படாதீங்கண்ணே ‘கஜா’ புயல்னு ஒண்ணு வருது. அது மழையக் கொண்டு வந்திரும். ஒரு நாளு நாளைக்கு தாக்குப் பிடின்னு உங்க சோளத்துக்கிட்ட சொல்லுங்க. கஜா என்றால் யானை" என்றேன். யானை மாதிரி கம்பீரமா நடந்து வரட்டும் தம்பி அது என்றார் அவர்.
“வங்கக் கடலில் நிலவிவந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. இந்த புயலுக்கு “கஜா” என பெயர் சூட்டப்பட்டுள்ளது. தற்போது சென்னைக்கு தென்கிழக்கே 990 கிமீ தொலைவிலும் நெல்லூருக்கு 1050கிமீ தொலைவிலும் உள்ள இப்புயல் 12 கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது”
எழுத்தாளர், சரவணன் சந்திரன் பேஸ்புக் பதிவில் இருந்து..