கொரோனா முதல் அலையைவிட இரண்டாம் அலையின் தாக்கம் மிகமிக அதிகமாக இருக்கிறது. இரண்டாம் அலையில் உருமாறிய கொரோனாவால் பாதிப்புகளும் உயிரிழப்புகளும் மிகமிக அதிகமாகவே இருக்கிறது. இந்நிலையில் கர்ப்பிணிகள் தங்களை எவ்வாறு பாதுகாத்துக்கொள்வது என்பது பற்றி விளக்குகிறார் சென்னை எழும்பூர் அரசு தாய்-சேய்நல மருத்துவமனையின் இயக்குநர் விஜயா.
கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் அதிகமாக இருப்பதால் கர்ப்பிணிகள் தொற்றிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வது எப்படி?
கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் மிகமிக அதிகமாக இருப்பதால் திருமணமான பெண்கள் குறைந்தது 6 மாதங்களுக்கு கருத்தரிப்பை தள்ளிப்போடுவது நல்லது. கருத்தரித்த முதல் மூன்று மாதங்களில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் அது கருவிலுள்ள குழந்தையையும் தாக்கும் வாய்ப்புகள் மிகவும் அதிகம். அதேபோல் குழந்தை பெறவேண்டி சிகிச்சைக்கு செல்பவர்களுக்கு இந்த அலையின் தாக்கம் குறையும்வரை கருத்தரிப்பை சற்று ஒத்திவைப்பதே சிறந்தது.
கருத்தரித்த பெண்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வது எப்படி?
கருத்தரித்த பெண்கள் மாதந்தோறும் பரிசோதனைக்கு செல்லவேண்டும் என மருத்துவர்களால் வலியுறுத்தப்படுகிறார்கள். ஆனால் அவர்களால் தனியாக வரமுடியாத காரணத்தால் இந்த கொரோனா பரவல் காலத்திலும் தங்களுடன் உறவினர்களை அழைத்துவருகிறார்கள். இதனால் மருத்துவமனைகளில் கூட்டநெரிசல் அதிகரிக்கிறது. இதனைத் தவிர்க்க ‘இ- சஞ்சீவினி’ என்ற தொலைபேசி மூலம் ஆலோசனை வழங்கும் வசதியைத் தொடங்கி அவர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் பரிசோதனையும் இரண்டுமாதத்திற்கு ஒருமுறை என மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடலாமா?
கர்ப்பிணிகளுடைய கருவில் இன்னொரு உயிரும் சேர்ந்து வளர்வதால் அவர்களுக்கு சாதாரண நபர்களைப்போல் கொரோனா தடுப்பூசியை சோதனை செய்யவோ, செலுத்தவோ முடியாது. ஆனால் அமெர்க்காவில் மாடர்னாவின் ஃபைசர் தடுப்பூசியை கர்ப்பிணிகளுக்கு செலுத்தி சோதனைசெய்து அவர்களுக்கு எந்தவித பக்கவிளைவும் ஏற்படவில்லை எனக் கூறியிருக்கின்றனர்.
இந்தியாவில் கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதுதான் சிறந்தது என மருத்துவர்களும் நினைக்கிறோம். ஏனென்றால், சாதாரணமாகவே நிறைமாத கர்ப்பிணிகளுக்கு மூச்சுவிடுவதில் சிரமம் இருக்கும். அவர்களை கொரோனாவைரஸ் தாக்கும்போது சுவாசப்பிரச்னை அதிகமாக இருக்கும். எனவே அவர்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருப்பது அவசியம். வீட்டில் யாருக்காவது கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் கர்ப்பிணிகள் வீட்டிலேயே தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளலாம். அந்த வசதி இல்லாதவர்கள் அரசாங்கள் கர்ப்பிணிகளுக்கென்று பிரத்யேகமாக அமைத்துள்ள கேர் சென்டர்களுக்குச் சென்று தனிமைப்படுத்திக் கொள்ளலாம்.
கர்ப்பிணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் அவர் உடனடியாக செய்யவேண்டியது என்ன?
அறிகுறிகள் இருந்தால் மட்டுமே கர்ப்பிணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அல்லது பிரசவத்திற்கு 10 நாட்களுக்கு முன்பு கொரோனா பரிசோதனை செய்துவர மருத்துவர்களால் அறிவுறுத்தப்படுகின்றனர். ஆனால் கொரோனா பாதித்தவர்களுக்கு 5 நாட்களுக்குமேல் காய்ச்சல் இருந்தால், அவர்கள் நிலைமை மிகவும் மோசமாகிவிடுகிறது. எனவே அவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெறுவது அவசியம்.
லேசான கொரோனா தொற்று அறிகுறிகள் கண்டறியப்பட்டால் கர்ப்பிணிகள் மற்ற நபர்களைப் போல் வீட்டிலேயே தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளலாமா?
கர்ப்பிணிகள் சாதரணமாகவே சோர்வாக இருப்பர். அதனால் கொரோனா தொற்றால் அவர்களுக்கு ஆக்சிஜன் அளவு குறைந்தால் அதுகுறித்த தெளிவு இருக்காது. எனவே அவர்கள் அடிக்கடி மருத்துவமனைகளுக்குச் சென்று சோதனை செய்துகொள்ளலாம். அதைவிட மருத்துவரின் கண்காணிப்பில் இருப்பதே சிறந்தது.
மேலும்விளக்கங்களுக்கு...