சிறப்புக் களம்

கிரிக்'கெத்து' 22: ஜனநாயக படுகொலைக்கு எதிராக கிரிக்கெட் களத்தில் ஒலித்த போராட்டக் குரல்

கிரிக்'கெத்து' 22: ஜனநாயக படுகொலைக்கு எதிராக கிரிக்கெட் களத்தில் ஒலித்த போராட்டக் குரல்

EllusamyKarthik

2003 50-ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் என்றதும் ஒவ்வொரு இந்திய கிரிக்கெட் ரசிகருக்கும் பைனலில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய அணியின் பாடுதோல்விதான் சட்டென நினைவுக்கு வரும். அன்றைய காலகட்டத்தில் இந்தியாவின் தோல்வி பெரும்பாலானவர்களை பாதிக்க செய்திருந்தது. ஆனால் அதே தொடரில் தங்கள் நாட்டில் நடைபெற்று வரும் ஜனநாயக படுகொலைக்கு எதிராக குரல் கொடுக்கும் வகையில் தங்கள் எதிர்ப்பை தெரிவித்திருந்தனர் ஜிம்பாப்வே நாட்டு கிரிக்கெட் வீரர்கள் இருவர். அவர்கள் குறித்தும், அவர்களது போராட்டம் குறித்தும் இந்த அத்தியாயத்தில் பார்க்கலாம். 

2003 உலகக் கோப்பையை தென்னாப்பிரிக்காவுடன் இணைந்து கென்யா மற்றும் ஜிம்பாப்வே நாடுகளும் ஹோஸ்ட் செய்திருந்தன. குரூப் சுற்றின் முதல் ஆறு போட்டிகள் ஜிம்பாப்வே நாட்டில் நடைபெற்றிருந்தது. அந்த ஆறு போட்டியிலும் ஜிம்பாப்வே விளையாடி இருந்தது. மூன்று வெற்றிகள் பெற்று சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு அந்த நாடு தகுதிபெற்றது. இருந்தாலும் மூன்று போட்டிகளில் ஒன்றில் கூட வெற்றி பெறாமல் அந்த சுற்றிலிருந்து வெளியேறியது அந்த அணி.  

ஜனநாயக படுகொலைக்கு இரங்கல் தெரிவித்த கிரிக்கெட் வீரர்கள்!

ஜிம்பாப்வே நாட்டில் 2000-வது ஆண்டு வாக்கில் நில சீர்திருத்த திட்டத்தை ‘ராபர்ட் முகாபே’ தலைமையிலான அரசு அமல் செய்தது. அதன்படி வெள்ளையர் இன மக்கள் வசமிருந்த விவசாய நிலங்களில் சில பங்கு அரசு கையகப்படுத்தி உள்ளது. அப்போதைய ஜிம்பாப்வே நாட்டு கிரிக்கெட் வீரர் ஆண்டி பிளவரின் நண்பர் ஒருவர் அதனால் பாதிக்கப்பட்டுள்ளார். அது ஆண்டி பிளவரின் கவனத்திற்கு வந்துள்ளது. அதோடு மனித உரிமை மீறல்கள் மற்றும் அது சார்ந்த வன்முறையும் அப்போது அந்த நாட்டில் அதிகம் இருந்துள்ளது. அதனை கண்டு விரக்தியடைந்த அவர் போராட வேண்டுமென முடிவு செய்துள்ளார். 

அவருக்கு துணையாக ஜிம்பாப்வே நாட்டின் முதல் கருப்பின கிரிக்கெட் வீரர் ஹென்றி ஒலங்காவை துணைக்கு அழைத்துள்ளார். ஒலங்காவும் நண்பனின் அழைப்புக்கு மறுப்பேதும் சொல்லாமல் சம்மதம் சொல்லியுள்ளார். தலைநகர் ஹராரேவில் இயங்கி வந்த கஃபெவில் இருவரும் சந்தித்துள்ளனர். முதலில் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்க உலகக் கோப்பை தொடரிலிருந்து விலகி விடலாம் என முடிவு செய்துள்ளனர் இருவரும். ஆனால் வழக்கறிஞர் ஒருவரது யோசனையின் படி அதை செய்ய தவிர்த்து விளையாட்டின் மூலம்  போராட்டக் குரலை உயர்த்த முடிவு செய்துள்ளனர். 

கையில் கருப்பு பட்டை!

அதன்படி கையில் கருப்பு பட்டை அணிந்து கொண்டு உலகக் கோப்பை களத்தில் களம் இறங்கினர் இருவரும். அவர்கள் ஏன் அப்படி செய்தார்கள் என்ற விவரத்தை பத்திரிகை அறிக்கை மூலம் இருவரும் கூட்டாக அறிவித்தனர். அது தெரிந்ததும் ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. உள்நாட்டு அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவிக்க உலக மீடியா ஆதரவை கொடுத்திருந்தது. 

இந்த போராட்டம் 10 பிப்ரவரி 2003 அன்று நமிபியாவுக்கு எதிராக நடைபெற்ற முதல் உலகக் கோப்பை குரூப் சுற்று ஆட்டத்தில் நடத்தியுள்ளனர் பிளவரும், ஒலங்காவும். அதனை 22-வது ஓவரில்தான் கவனத்தை பெற்றுள்ளது. பிளவர் அப்போதுதான் பேட் செய்ய காலத்திற்கு வந்துள்ளார். அவரது கையில் கருப்பு பட்டை இருந்துள்ளது. அதோடு பால்கனியில் நின்று கொண்டிருந்த ஒலங்காவின் கைகளிலும் அது இருந்துள்ளது.

அதை 4000 பார்வையாளர்களில் பெரும்பாலானோர் போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்தனர். பிளவர் மற்றும் ஒலங்கா என இருவரும் ஜிம்பாப்வே அணி 2003 உலகக் கோப்பையில் விளையாடிய கடைசி போட்டி வரை கருப்பு பட்டையை அணிந்திருதனர். இருவருக்கும் அந்த தொடர்தான் கடைசி தொடர். அதன் பிறகு அவர்கள் ஜிம்பாப்வே அணிக்காக அவர்கள் விளையாடவில்லை. 

போராட்டத்தின் பலனாக இருவரும் நாட்டை விட்டே வெளியேற இங்கிலாந்தில் அடைக்கலம் கண்டனர். ஆண்டி பிளவர் கிரிக்கெட் பயிற்சியாளராக இயங்கி வருகிறார். ஒலங்கா இசை சார்ந்து பயணித்து வந்தார்.