டிஎன்ஏ தொழில்நுட்ப வரன்முறைச் சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற மத்திய அரசு முயற்சி செய்வதாகத் தகவல் வெளியாகியுள்ளது. டிஎன்ஏ தொழில்நுட்ப வரன்முறைச் சட்டம் என்றால் என்ன? விவரிக்கிறது இத்தொகுப்பு.
காவல்துறையால் சந்தேகிக்கப்படக்கூடிய எந்த ஒரு நபரின் டிஎன்ஏ மாதிரியையும் சேகரித்து, அதனை ஒரு டேட்டாபேஸில் பாதுகாத்து வைக்க டி.என்.ஏ தொழில்நுட்ப வரன்முறை சட்டம் வழிவகை செய்கிறது. ஒருவருடைய மரபணுவை வைத்து அவர் குற்றம் செய்தாரா இல்லையா என்பதை முடிவு செய்யும் இந்த அணுகுறை, குற்றப்பரம்பரைச் சட்டத்தைப் போலவே இருப்பதாகச் சொல்லப்படுகிறது
இந்த முறையை அமல்படுத்த வாஜ்பாய் காலத்திலேயே முயற்சிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த டிஎன்ஏ தொழில்நுட்பத்தின் பயன்பாடு மற்றும் அதனை ஒழுங்குபடுத்த வேண்டியதன் அவசியத்துக்காக இதற்காக ஒரு குழு கடந்த 2003 ஆம் ஆண்டு டிசம்பரில் உருவாக்கப்பட்டது. அந்தக் குழுவின் பரிந்துரையின் பேரில் வரைவு மசோதா தயாரிக்கப்பட்டது. பிறகு அந்தரங்க உரிமை தொடர்பான பிரச்னைகள் குறித்து விவாதிக்க 2012 ஆம் ஆண்டில் ஒரு நிபுணர் குழு நியமிக்கப்பட்டது. இந்தக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் மசோதா திருத்தப்பட்டு பின்னர் இந்திய சட்ட ஆணையத்துக்குப் பரிந்துரைக்கப்பட்டது. பிறகு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு அமைந்த பின் இதற்கான பணிகள் துரிதப்படுத்தப்பட்டன.
2018 ஆம் ஆண்டில் இம்மசோதா அமல்படுத்தப்பட்டு நிறைவேற்றப்படாமல் காலாவதியானது. பின் மீண்டும் டிஎன்ஏ தொழில்நுட்ப வரன்முறைச் சட்ட மசோதா 2019 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளாக நிலைக்குழுவின் ஆய்வில் இருந்த இந்த மசோதா, தற்போது அக்குழுவின் பரிந்துரையோடு இந்தக் கூட்டத்தொடரில் நிறைவேற்றுவதற்காகப் பட்டியலிப்பட்டுள்ளது.
இதற்கிடையே, பெகசஸ் விவகாரத்தைப் போலவே டி என் ஏ வரன்முறைச் சட்டமும் தவறாகப் பயன்படுத்த வாய்ப்புள்ளதாகவும், எனவே இந்த மசோதாவை நிறைவேற்றுவதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டுமெனவும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் எம்.பி.ரவிக்குமார் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து பேசிய வழக்கறிஞர் வாஞ்சிநாதன், “இந்த சட்டம் கொண்டுவர எந்த தேவையும் தற்போது இல்லை. வாஜ்பாய் காலத்தில் இது முதலில் கொண்டுவரப்பட்டு, காங்கிரஸ் ஆட்சியிலும் முயற்சி செய்யப்பட்டு இப்போது மசோதாவாக பட்டியலிடப்பட்டுள்ளது. அரசுக்கு எதிராக செயல்படும் நபர்கள் அல்லது குறிப்பிட்ட சமூகங்களை , அரசின் முழு கண்காணிப்பில் கொண்டுவருவதே இந்த சட்டத்தின் நோக்கமாகும். குற்றத்தை குறைப்பதற்காகவே இந்த சட்டத்தை கொண்டு வருகிறோம் என்று சொல்கிறார்கள். இதற்கு டிஎன்ஏ அடிப்படையில் வகைப்படுத்த வேண்டிய அவசியம் என்ன என்று பார்க்க வேண்டும். இன்றைய காலகட்டத்தில் உலகில் விலைமதிப்பற்ற பொக்கிஷமாக தகவல்கள் உள்ளது. டிஎன்ஏ மூலமாக நம் தகவல் மட்டுமின்றி, நமது பல தலைமுறைகளின் தகவல்களும் சேகரிக்கப்படலாம். இது ஏன் என்ற கேள்வி எழுகிறது. அதனால் இந்த சட்டம் தேவையில்லை. தனிநபர் அந்தரங்க உரிமை என்பது அரசியலமைப்பின் அடிப்படை உரிமையாகும். இதனை 9 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற தீர்ப்பும் உறுதிசெய்துள்ளது. ஆகவே இது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரான செயலாகும். இந்த சட்டம் மூலமாக அரசுக்கு எதிராக போராடுபவர்களை, பத்திரிகையாளர்களை, சமூக, மனித உரிமை செயற்பாட்டாளர்களை, இஸ்லாமியர்களை, பழங்குடியினரை இலக்காக்கி அவர்களின் டிஎன்ஏக்களை சேகரிக்கும் அபாயம் உள்ளது. தவறான ஆதாரங்களை சித்தரித்து அதன்மூலமாக மக்கள் உரிமைக்காக போராடுவர்களை ஒடுக்க இச்சட்டம் வழி செய்யும். இச்சட்டம் மூலமாக யாரையும் சந்தேகப்பட்டியலில் கொண்டு வரலாம். முதலில் விருப்பப்பட்டவர்கள் மட்டும் ஆதார் அட்டை எடுத்தால் போதும் என்று சொல்லிவிட்டு, இப்போது கட்டாயமாக்கிவிட்டது போல, படிப்படியாக நாட்டிலுள்ள அனைவரின் டிஎன்ஏவையும் சேகரிக்கும் வாய்ப்பு உருவாகும். வர்ணாசிரம கோட்பாடு என்பது பிறப்பின் அடிப்படையில் மக்களை பிரிப்பது ஆகும். அதுபோலவே இந்த டிஎன்ஏ சட்டம் அறிவியல் பூர்வமாக மக்களை பிறப்பின் அடிப்படையில், சாதியின் அடிப்படையில் பிரிக்கக்கூடியது என்பதுதான் உண்மை” என தெரிவித்தார்.
உலகில் பல நாடுகளில் சந்தேகப்படும் நபர்களின் மரபணுவை சேகரிக்கும் நடைமுறை அமலில் உள்ளது. அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட 70 நாடுகள் மக்களின் டிஎன்ஏ விவரங்களை சேகரிப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனைத்தவிர, மேலும் 30 நாடுகளில் சட்டங்கள் இயற்றி, டிஎன்ஏ-வை சேகரிக்க முயற்சிகள் நடைபெறுகின்றன. அமெரிக்காவில் 1.4 கோடி பேரின் டிஎன்ஏ விவரங்கள் சேகரித்து வைக்கப்பட்டிருப்பதாகவும், சீனாவில் 80 லட்சம், பிரிட்டனில் 60 லட்சம் பேரின் டிஎன்ஏ சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், ஐரோப்பிய யூனியன், தென் அமெரிக்கா, வளைகுடா நாடுகளிலும் புள்ளி விவரங்கள் சேகரிக்கப்படுவதாகத் தகவல்கள் உள்ளன.
இதுகுறித்து பேசும் வழக்கறிஞர் வாஞ்சிநாதன், “ மேற்குறிப்பிட்ட எந்த நாட்டிலும் முழுமையாக இந்த டிஎன்ஏ சேகரிக்கப்படவில்லை, அங்கும் எதிர்ப்பு இருப்பதால்தான் இவ்வளவு குறைவாக சேகரிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்