சிறப்புக் களம்

கொரோனாவுக்கு உடனே மருத்துவக் காப்பீடு எடுத்து இழப்பீடு பெறலாமா?

கொரோனாவுக்கு உடனே மருத்துவக் காப்பீடு எடுத்து இழப்பீடு பெறலாமா?

JustinDurai

கொரோனாவுக்கு உடனே மருத்துவக் காப்பீடு எடுத்து இழப்பீடு பெற முடியுமா  என்று பலருக்கும் ஒரு சந்தேகம் இருக்கிறது. இதுகுறித்து விளக்கமளிக்கிறார்  காப்பீடு ஆலோசகரான சங்கர் நீதிமாணிக்கம்.

இன்றைக்கு உலகையே புரட்டி போட்டு விழிபிதுங்க வைத்துள்ள ஒரு பெருந்தொற்று கொரோனா ஆகும். யாரும் எதிர்பாராத ஒரு காலகட்டத்தில் மக்களை பற்றி கூடவே பெரும் பொருளாதார வீழ்ச்சியை தந்து மக்களை மிகவும் இக்கட்டில் விட்டு இருக்கிறது இந்த கொரோனா.

இந்த பொருளாதார நெருக்கடியில் பலரும் பயம் கொள்வது கொரோனா வந்தால் என்ன செய்வது? செலவுக்கு எங்கு போவது?

இதற்கு தீர்வாக அரசின் வழிகாட்டுதல் மற்றும் காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையத்தின் வழிகாட்டுதல் காரணமாக அரசு மற்றும் தனியார் பொதுக்காப்பீட்டு நிறுவனங்கள் பலவும் ஏற்கனவே இருக்கும் மருத்துவக் காப்பீட்டில் கொரோனா நோய் சிகிச்சைக்கான மருத்துவ செலவுகளையும் நிறுவனங்களின் திட்டங்களுக்கு வரையறைகளுக்கு உட்பட்டு வழங்க வழிவகை செய்து இருக்கிறது. இதற்காக அரசுக்கும், காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையத்துக்கும் பெரும் நன்றியை தெரிவிக்கலாம்.

இந்த தொற்றுநோய்க்கு உடனே காப்பீடு எடுத்து இழப்பீடு பெறலாமா? என்ற ஐயம் பலருக்கு இருக்கும். புதிதாக காப்பீடு எடுப்பவர்களுக்கு காத்திருப்புக்காலம் குறைந்தது 15 நாட்களும் அதிகமாக ஒரு மாதமும் என்று காப்பீடு நிறுவனங்கள் நிர்ணயம் செய்து இருக்கிறது. இது நிறுவனத்தைப் பொறுத்து மாறும், ஆனால் பழைய காப்பீடு இருந்தால் உடனே சிசிச்சை எடுக்க முடியும் என்றே பல நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

எப்போதும் போலவே வெளிநோயாளியாக சிகிச்சை எடுத்தால் இழப்பீடு பெற இயலாது. நோய் தோற்று இல்லை என்று உறுதியானால் பரிசோதனை செலவுகளுக்கு இழப்பீடு இல்லை போன்ற பொதுவான நிபந்தனைகளும் இதில் உண்டு. மருத்துவக் காப்பீட்டில் யார் எல்லாம் அடக்கமோ அவர்களுக்கு ஒருவர் எடுத்துள்ள காப்பீட்டு வரம்புக்குள் இழப்பீடு பெறலாம்.

எதுவாக இருந்தாலும் இன்றைக்கும் என்றைக்கும் வருமுன் காப்பதே எல்லோரும் நன்மை பயக்கும். அனைவரும் முகக்கவசம் அணிந்து தேவையான சமூக இடைவெளியை கடைபிடிப்போம்.