சீனாவில் ஒலித்த கொரோனா என்ற வார்த்தை இன்று உலக நாடுகளிடையே ஒலித்துக்கொண்டிருக்கிறது. நகரங்கள், கிராமங்கள் என கொரோனா எதிரொலிக்காத இடங்களே இல்லை. அதிகாரிகளும், அரசுகளும் கொரோனாவை விரட்ட ஓடிக்கொண்டே இருக்கின்றனர். கொரோனா வைரஸால் உலக நாடுகள் சிக்கல்களை சந்தித்து வருகின்றன.
வழக்கமாக நடக்கும் பணிகள் எதுவும் நடக்காமல் தடைபட்டு நிற்கின்றன. பல நாடுகளில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறவே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஃபேஸ்புக், கூகுள் போன்ற பல நிறுவனங்களின் வர்த்தக நிகழ்ச்சிகள் நிறுத்தப்பட்டுள்ளன. பெரிய நிறுவனங்கள் மட்டுமல்ல, கூட்டத்தை தவிர்ப்பதற்காக பொதுமக்கள் வெளி இடங்களுக்கு செல்வதில்லை. இதனால், சின்னச்சின்ன கடைகளுக்கு கூட வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது.
தொடக்கத்தில் செய்தியாக கடந்த கொரோனா இந்தியாவில் தற்போது பேசுபொருளாகியுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 3-ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 129 ஆக அதிகரித்துள்ளது. மத்திய அரசும் மாநில அரசுகளும் கொரோனாவுக்கு எதிராக தீவிரமான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள் என பல இடங்களிலும் சோதனைகள் நடைபெறுகின்றன. கொரோனா அறிகுறி உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்படுகின்றனர்.
கொரோனா அச்சுறுத்தல் எதிரொலியாக மலேசியா, பிலிப்பைன்ஸ், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து பயணிகள் இந்தியா வர தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே ஐரோப்பிய யூனியன் நாடுகள், பிரிட்டன், துருக்கி உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்தியா வர தடை விதிக்கப்பட்ட நிலையில் தற்போது இந்த நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. குறிப்பாக கொரோனா தொற்று நோய் என்பதால் பொதுமக்கள் பொது இடங்களில் கூடுவதை தவிர்க்க வேண்டுமென்று அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
அதற்காக வணிக வளாகங்கள், தியேட்டர்கள், கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றை மார்ச் 31-ம் தேதி வரை மூடி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இப்படி அரசு தங்கள் தரப்பில் நடவடிக்கைகளை எடுத்தாலும் தனிமனித சுத்தமும், விழிப்புணர்வும் இருந்தால் மட்டுமே கொரோனாவை விரட்டி அடிக்க முடியும் என்கிறார்கள் சுகாதார அமைப்பினர்.
என்னவெல்லாம் செய்யலாம்?
பரவக்கூடிய தொற்று என்பதால் பொதுமக்களின் விழிப்புணர்வே இந்த நோயை முழுவதுமாக கட்டுப்படுத்த உதவும். அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கும், சுகாதார அறிவுரைகளுக்கும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்தால் கொரோனாவை நிச்சயம் ஓட ஓட விரட்டிவிடலாம் என்பதே நிதர்சனம்.