சிறப்புக் களம்

கொரோனா அச்சம்; இருதய பாதிப்புகள் - காரணமும் தீர்வும்: மருத்துவர்கள் பேட்டி

கொரோனா அச்சம்; இருதய பாதிப்புகள் - காரணமும் தீர்வும்: மருத்துவர்கள் பேட்டி

webteam

கொரோனா தொற்றால் தமிழகத்தில் தினமும் 30,000 த்துக்கும் அதிகமான நபர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதே போல கொரோனா
தொற்றிற்கு சிகிச்சைப் பெற்று குணமடைந்து செல்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. ஆனால் சமீப காலமாக மக்களிடம்
கொரோனா தொற்று குறித்த அச்சம் மேலோங்கி இருப்பதை பார்க்க முடிகிறது. அதற்கு உதாரணங்களாக கொரோனா தொற்று உறுதி என்ற செய்தி வந்ததுமே தற்கொலை வரைக்கும் சென்ற சம்பவமும் கண் முன்னே நிற்கின்றன. 

அதே போல தொற்று ஏற்பட்டு சிகிச்சைப் பெற்று வீடு திரும்பிய பலருக்கும் உடல் மற்றும் மனநலம் சார்ந்த பிரச்னைகள் ஏற்படுகின்றன. அது குறித்து இன்று புதியதலைமுறையின் நியூஸ் 360 யில் விவாதிக்கப்பட்டது.  

நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய மனநலமருத்துவர் சிவபாலன் கூறும் போது, “ கொரோனா குறித்து மக்களிடம் அச்சத்தைத் தாண்டி ஒருபெரும் கலக்கம் இருக்கிறது. இது கிராமப்புறங்களில் அதிகமாக இருக்கிறது. அதனால்தான் இந்தத் தற்கொலைகள் நிகழ்கின்றன. ஆகையால் அரசானது ஒருவரிடம் கொரோனா பரிசோதனை எடுக்கும் முன்னரும், அவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட பின்னரும் முறையான ஆற்றுபடுத்துதலோடு கூடிய ஆலோசனைகளை வழங்க வேண்டும். அதே போல தொற்று ஏற்பட்டவரிடம் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கருணையோடு நடந்து கொள்ள வேண்டும்.

இந்த கொரோனா தொற்று பொருளாதார ரீதியாகவும் பல இன்னல்களை ஏற்படுத்தி வருகிறது. ஆகையால் அடுத்த ஒரு வருடத்திற்கு மருத்துவத்திற்கான ஒரு தொகையை ஏற்பாடு செய்து விட்டு, ஆடம்பர செலவுகளை குறைத்து, அத்தியாவசிய தேவைகளை மட்டுமே நிறைவேற்றிக் கொண்டு வாழ வேண்டும்.” என்றார். 

கொரோனா தொற்று ஏற்பட்ட பிறகு, மக்களிடம் இதயநோய்கள், பசியின்மை மற்றும் கால்களில் வீக்கம் உள்ளிட்ட பல நோய்கள் ஏற்படுகின்றன. அது குறித்து பேசிய இதயநோய் நிபுணர் பாலாஜி கூறும் போது, “ உடலில் ஆக்சிஜன் அளவு 90 க்கு கீழ் போகும் போது செயற்கையாக ஆக்சிஜன் வழங்கப்படும். அந்த சிகிச்சையில் உள்ள நோயாளிகள் அவர்களாகவே ஆக்சிஜனை எடுப்பது நல்லதல்ல. அவர்கள் மருத்துவ ஆலோசனையை பெற்றுதான் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.

இதய நோய்கள் அதிகரிப்பு குறித்து பார்க்கும் போது, அதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருக்கின்றன.

கொரோனா தொற்று ஏற்பட்டவருக்கு இரத்த நாளங்களில் வீக்கம் ஏற்படுகிறது. இதனால் இரத்தம் உறையும் தன்மை அதிகமாகிறது. அப்படி வீக்கம் அடைந்த இடத்தில் இரத்தம் உறையும் போது இருதய பாதிப்புகள் ஏற்படுகிறது. ஏற்கனவே இருதய நோயாளிகளாக இருந்தால் அவர்களின் உடலில் ஆக்சிஜன் அளவு குறையும் போது, அவர்களின் இதயம் இன்னும் பாதிக்கப்படுகிறது. இவைத்தவிர கொரோனா இதயத்தை நேரடியாக பாதிப்பதாலும் இருதய நோய்கள் ஏற்படுகிறது.

கொரோனா தொற்று ஏற்பட்ட 7 நாட்களுக்கு பெரிதாக பாதிப்பு ஏற்படுவதில்லை. அதற்கு பிந்தைய காலங்களில் தான்  அதிகமான பாதிப்புகள் ஏற்படுகின்றன. ஆகையால் அதற்கு பிந்தைய காலங்களில் மிககவனமாக இருக்க வேண்டும். அவர்கள் புரதசத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இருதய பாதிப்பு அறிகுறிகள் இருக்கிறவர்கள் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.” என்றார்.