சிறப்புக் களம்

சட்டமன்றத்தில் வெளியான தலைவர்கள் தொடர்பான அறிவிப்புகள் – முதல்வர் ஸ்டாலினின் வியூகம் என்ன?

சட்டமன்றத்தில் வெளியான தலைவர்கள் தொடர்பான அறிவிப்புகள் – முதல்வர் ஸ்டாலினின் வியூகம் என்ன?

Veeramani

வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு மணிமண்டபம்,  தமிழ்நாடு ஆதி திராவிடர்- பழங்குடியினர் நல ஆணையம்,  ஒருகால பூகை கோயில் அர்ச்சகர்களுக்கு மாத ஊதியம், அயோத்திதாசர் மணிமண்டபம், பெரியார் பிறந்த நாள் சமூக நீதிநாள், வ உசி நினைவுநாள் தியாகத்திருநாள், பாரதியார் பிறந்தநாள் மகாகவி நாள் என்பது உள்ளிட்ட பல்வேறு சமூகங்களையும், பிரிவினரையும் குறிவைக்கும் வகையில் நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

பல்வேறு சமூகங்கள் தொடர்பாகவும் மற்றும் பல சமூகங்களின், பிரிவினரின் சார்பாக கொண்டாடப்படும் முக்கிய தலைவர்களின்  பெயரிலும் வெளியிடப்பட்ட அறிவிப்புகளின் விரிவான பட்டியல் இதோ:

வ.உ.சிதம்பரம் பிள்ளை 150வது பிறந்தநாள் – தியாகத்திருநாள்:

வ.உ.சிதம்பரனாருடைய 150ஆவது பிறந்த நாள் விழாவினையொட்டி, தமிழக சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலின் 14 அறிவிப்புகளை வெளியிட்டார். சென்னை காந்தி மண்டபத்தில் சிறையில் வ.உ.சி இழுத்த செக்கு வைக்கப்பட்டிருக்கும் மண்டபம் பொலிவூட்டப்பட்டு மார்பளவு சிலை வைக்கப்படும். தூத்துக்குடி மேலபெரிய காட்டன் சாலை, இனி 'வ.உ.சிதம்பரனார் சாலை' என அழைக்கப்படும். கோயம்புத்தூர் வ.உ.சி பூங்காவில் வ.உ.சிக்கு சிலை அமைக்கப்படும். வ.உ.சிதம்பரனார் வாழ்க்கை வரலாற்றினைச் சித்தரிக்கும் திரைப்படம் நவீன டிஜிட்டல் முறையில் உருவாக்கி வெளியிடப்படும்.

வ.உ.சிதம்பரனார் எழுதியுள்ள புத்தகங்கள் குறைந்த விலையில் மக்களுக்குக் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். கப்பல் தொடர்பான துறைகளில் சிறந்த பங்காற்றிவரும் தமிழர் ஒருவருக்கு 'கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. விருது' மற்றும் 5 லட்சம் ரூபாய் ஆண்டுதோறும் வழங்கப்படும். வ.உ.சிதம்பரனார் மறைந்த நவம்பர் 18ஆம் தேதி, தியாகத் திருநாளாக அறிவித்துக் கொண்டாடப்படும் என்பன உள்ளிட்ட 14 அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்த 21 பேரின் நினைவாக மணிமண்டபம்:

கடந்த 1987ஆம் ஆண்டு நடைபெற்ற வன்னியர்களுக்கான 20%  இடஒதுக்கீடு போராட்டத்தில் கலந்துகொண்டு துப்பாக்கிசூட்டில் பலியான 21 பேரின் நினைவாக, விழுப்புரத்தில் ரூ. 4 கோடி மதிப்பீட்டில் மணிமண்டபம் கட்டப்படும் என்று மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்தார். இதுகுறித்து பேசிய அவர், " சமூகநீதிக்காக நடைபெற்ற தொடர்ச்சியான போராட்டங்களின் வரிசையில் 1987ஆம் ஆண்டு நடைபெற்ற 20 விழுக்காடு தனி இடஒதுக்கீடு கோரி வட தமிழகத்தில் நடந்த போராட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது. அந்த போராட்டத்தில் அன்றைய அரசின் காவல் துறையினரின் துப்பாக்கிசூட்டுக்கு 21 பேர் பலியாயினர், அந்த தியாகிகளின் நினைவாக ரூபாய் 4 கோடி மதிப்பீட்டில் விழுப்புரம் மாவட்டத்தில் மணிமண்டபம் கட்டப்படும். “நான் சமுதாயத்தின் பின்தங்கிய வகுப்பை சார்ந்தவன். மிகவும் பின்தங்கியோர் பட்டியலில் என் வகுப்புக்கு ஒரு இடம் உண்டு. நான் முதலமைச்சர் பொறுப்பை ஏற்றுக்கொண்டிருப்பதால் பின்தங்கிய வகுப்பினருக்காக எனது உயிரையே பணயம்வைத்து போராடுவேன்” என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சொன்ன உறுதிமொழியை நானும் ஏற்றுக் கொண்டதன் அடையாளம்தான் இந்த அறிவிப்பு " என்றார். 

அயோத்திதாச பண்டிதருக்கு மணிமண்டபம்:

அயோத்திதாச பண்டிதருக்கு வடசென்னையில் மணிமண்டபம் அமைக்கப்படும் என சட்டப்பேரவை விதி எண் 110இன் கீழ் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்த பேசிய அவர், “தமிழன், திராவிடன் எனும் இவ்விரு சொற்களையும் அரசியல் களத்தில் அடையாளச் சொற்களாக மாற்றி அறிவாயுதம் ஏந்தியவர் அயோத்திதாச பண்டிதர். 1891-ம் ஆண்டே மக்கள்தொகை கணக்கெடுப்பில் பூர்வ தமிழர் என்று பதியச் சொன்னவர் பண்டிதர். 1907-ம் ஆண்டு 'ஒரு பைசா தமிழன்' என்ற இதழைத் தொடங்கி அதையே 'தமிழன்' என்ற இதழாக நடத்தி வந்தவர் அவர். அவர் போட்டுக் கொடுத்த பாதையில்தான் தமிழக அரசியல் செயல்பட்டு வருகிறது. பெரியாரே, என் பகுத்தறிவு பிரச்சாரத்துக்கும் சீர்திருத்த கருத்துகளுக்கும் முன்னோடி அயோத்திதாச பண்டிதர்தான் என்று குறிப்பிட்டிருக்கிறார். இந்திய நாட்டின் முன்னேற்றத்துக்கு சாதி, மதமே தடை எனச் சொன்னவர் அவர். 1845 முதல் 1914 வரை வாழ்ந்த அயோத்திதாசரின் 175-ம் ஆண்டின் நினைவாக வடசென்னை பகுதியில் மணிமண்டபம் அமைக்கப்படும்” என அறிவித்தார்.

பெரியார் பிறந்தநாள் சமூகநீதி நாள்:

பெரியார் பிறந்த செப்டம்பர் 17 ஆம் தேதி சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பினை வெளியிட்டார். இந்த அறிவிப்பில், “இந்தியா முழுவதும் சமூக நீதி பரவ பெரியார் அளித்த அடித்தளமே காரணம். செப்டம்பர் 17 சமூக நீதி நாளன்று அனைத்து அரசு அலுவலகங்களிலும் உறுதிமொழி எடுக்கப்படும். நாடாளுமன்றத்தின் வாசலுக்கே போகாத பெரியாரால்தான் இந்திய அரசியல் அமைப்பில் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது. ஒடுக்கப்பட்ட மக்களின் இன்றைய எழுச்சிக்கு பெரியார் போட்ட விதைதான் காரணம்” என தெரிவித்தார்.

இலங்கை தமிழர்களுக்கான அறிவிப்புகள்:

தமிழ்நாட்டில் உள்ள இலங்கை தமிழர்களுக்கான முகாம்கள் இனி மறுவாழ்வு முகாம்கள் என அழைக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்தார். மேலும்  முகாம்களில் வாழும் இலங்கை தமிழர்களின் குழந்தைகளின் கல்வி மேம்பட 50 மாணவர்களுக்கான கல்வி மற்றும் விடுதி கட்டணத்தை அரசே ஏற்கும். அரசு கல்லூரிகளில் படிக்கும் இலங்கை தமிழ் மாணவர்களின் கல்வி உதவித் தொகை உயர்த்தப்படும். பாலிடெக்னிக்கில் படிக்கும் மாணவர்களுக்கான உதவித்தொகை 10 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். இலங்கை தமிழர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்க 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். சிறு, குறு தொழில் செய்திட ஏதுவாக முகாம்களில் உள்ள 300 சுயஉதவிக் குழுக்களுக்கு சுழல்நிதி மற்றும் சமுதாய முதலீட்டு நிதியாக ஒவ்வொரு சுயஉதவிக் குழுவுக்கும் தலா ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். இதற்காக நடப்பு நிதியாண்டில் 6 கோடியே 16 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

முகாமில் வசிப்பவர்களின் வாழ்வாதாரத்திற்காக மாதந்தோறும் அவர்களுக்கு பணக்கொடை வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகையானது குடும்பத் தலைவருக்கு ஆயிரம் ரூபாயும், இதர பெரியோர்களுக்கு 750 ரூபாயும், 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு 400 ரூபாயும் தற்போது வழங்கப்பட்டு வருகிறது. இந்த பணக்கொடை கடந்த 10 ஆண்டுகாலமாக உயர்த்தப்படாத நிலையில், இனி குடும்பத் தலைவருக்கு மாதந்தோறும் 1500 ரூபாய், இதர பெரியவர்களுக்கு 1000 ரூபாய், 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு 500 ரூபாய் என உயர்த்தி வழங்கப்படும். முகாமில் உள்ள இலங்கை தமிழர்கள் குடும்பத்திற்கு விலையில்லா எரிவாயு இணைப்பு மற்றும் இலவச அடுப்பு வழங்கப்படும். அது தவிர, குடும்பத்திற்கு 5 எரிவாயு உருளைக்கு தலா  400 ரூபாய் வீதம் மானியத்தொகை வழங்கப்படும்.  மேலும் இலவச அரி, கோ-ஆப் டெக்ஸ் மூலம் ஒவ்வொரு ஆண்டும் இலவச ஆடைகள், சமையல் பாத்திரங்கள் வழங்கப்படும் என்பது உள்ளிட்ட வீடு மற்றும் இதர கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தலுக்கு 261 கோடியே 54 லட்சம் ரூபாய், கல்வி மற்றும் வேலைவாய்ப்பினை உறுதி செய்திட 12 கோடியே 25 லட்சம் ரூபாயும், அவர்களது வாழ்க்கை தரத்தை மேம்படுத்திட 43 கோடியே 61 லட்சம் ரூபாய் என மொத்தம் 317 கோடியே 40 லட்சம் ரூபாய்க்கான திட்டங்கள் அறிவிக்கப்பட்டது.

பாரதியார் பிறந்தநாள் “மகாகவி நாள்”:

பாரதியாரின் நினைவு நாளான செப்டம்பர் 11-ம் நாள் 'மகாகவி நாளாக' கடைப்பிடிக்கப்படும். இதனையொட்டி, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மாநில அளவில் கவிதைப் போட்டி நடத்தி 'பாரதி இளங்கவிஞர் விருது' மாணவன் ஒருவருக்கும், மாணவி ஒருவருக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகையுடன் வழங்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். மேலும், பாரதியாரின் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்கள் மற்றும் கட்டுரைகளைத் தொகுத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும். மகாகவி பாரதியின் வாழ்க்கை குறித்தும், அவரின் படைப்புகள் குறித்தும் குறிப்பிடத்தக்க ஆய்வுகளை செய்தவர்களுக்கு மூன்று லட்சம் ரூபாயும், விருதும் வழங்கப்படும்.பாரதியாரின் நினைவு நூற்றாண்டை முன்னிட்டு அடுத்த ஓராண்டுக்கு, சென்னை பாரதியார் நினைவு இல்லத்தில் வாரந்தோறும் நிகழ்ச்சியொன்று செய்தித்துறையின் சார்பில் நடத்தப்படும். காசியில் பாரதி வாழ்ந்த வீட்டைப் பாராமரிக்க அரசின் சார்பில் நிதியுதவி வழங்கப்படும் என்பன உள்ளிட்ட 14 அறிவிப்புகளையும் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.

அர்ச்சகர்களுக்கு மாத ஊதியம்:

தமிழ்நாட்டில் ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் உள்ள 12,959 கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு 1000 மாத ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்து உடனடியாக தொடங்கி வைத்தார். தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 44,291 கோயில்கள் உள்ளன. இதில், 34,111 கோயில்களில் ஆண்டுக்கு 10 ஆயிரத்துக்கும் குறைவாக தான் வருவாய் வருகிறது. எனவே ஒரு கால பூஜை திட்டம் மாநிலம் முழுவதும் 12,959 கோயில்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த கோயில்களில் பணியாற்றும் அர்ச்சகர்களுக்கு மாத ஊக்கத்தொகை 1000 வழங்கப்படும் என்றும், அர்ச்சகர்கள் மற்றும் கோயில் பணியாளர்களுக்கான குடியிருப்புகள் 6 இடங்களில் 21 கோடியே 40 லட்சம் மதிப்பீட்டில் கட்டித் தரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

தமிழ்நாடு ஆதி திராவிடர்- பழங்குடியினர் நல ஆணையம்:

ஆதி திராவிடர்கள், பழங்குடியினர் ஆகியோருடைய சட்டபூர்வமான உரிமைகளைப் பாதுகாக்கவும், அவர்களுடைய முக்கியமான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும், ‘தமிழ்நாடு ஆதி திராவிடர்- பழங்குடியினர் நல ஆணையம்’ என்கிற புதிய அமைப்பு ஒன்றைத் தன்னாட்சி அதிகாரத்துடன் செயல்படும் வகையில் உருவாக்க  இந்த அரசு  சட்டம் இயற்றும் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.  

குடியுரிமை திருத்தச்சட்டத்தை ரத்து செய்வதற்கான மசோதா:


2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் மத்திய அரசு நிறைவேற்றிய இந்திய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், இந்த சட்டத்திருத்தம் மதசார்பற்ற தன்மைக்கு எதிராக உள்ளது. மதம் மொழி இனம் கடந்து ஒற்றுமையுடன் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். நல்லிணக்கத்துக்கு எதிராக உள்ள இந்த சட்டம் தேவையா?, இணக்கமாக வாழ்ந்து வரும் மக்களிடையே பாகுபாட்டை உண்டாக்க நினைக்கும் இந்த சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்துகிறேன்” என தெரிவித்தார்.


வீரபாண்டிய கட்டபொம்மன், மருதுசகோதரர்கள், அப்துல்கலாம், அஞ்சலை அம்மாளுக்கு சிலை:

வீரபாண்டிய கட்டபொம்மன் மற்றும் மருது சகோதரர்களின் சிலைகள் சென்னை கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. தென்னிந்தியாவின் ஜான்சி ராணி என்று அழைக்கப்பட்ட சுதந்திரப் போராட்ட வீராங்கனை அஞ்சலை அம்மாளுக்கு கடலூரிலும், சமூக சீர்திருத்தவாதி மூவலூர் ராமாமிர்தம் அம்மையாருக்கு மயிலாடுதுறையிலும் சிலை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் முதல் பெண் எம்எல்ஏ முத்துலட்சுமி ரெட்டிக்கு புதுக்கோட்டையிலும், முன்னாள் அமைச்சர் நெடுஞ்செழியனுக்கு சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையிலும், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திலும், தேசிய கீதத்தை இயற்றிய ரவீந்திரநாத் தாகூருக்கு சென்னை ராணிமேரி கல்லூரியிலும் சிலை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு நடக்கும் முதல் கூட்டத்தொடரிலேயே அனைத்து சமூகங்களையும் கவரும் வகையில் வியூகம் அமைத்து அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.