சிறப்புக் களம்

119 கி.மீ. தூரம்.. 128 ரயில் நிலையம்.. பாய்ச்சலுக்கு தயாராகும் சென்னை மெட்ரோ ரயில்!

119 கி.மீ. தூரம்.. 128 ரயில் நிலையம்.. பாய்ச்சலுக்கு தயாராகும் சென்னை மெட்ரோ ரயில்!

jagadeesh

சென்னை மெட்ரோ ரயில் சேவையின் 2 ஆம் கட்ட வழித்தட திட்டப் பணிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று அடிக்கல் நாட்ட இருக்கிறார்.

சென்னையில் இப்போது இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை இயங்கி வருகிறது. அது, ஆலந்துார் - சென்னை சென்ட்ரல், விமான நிலையம் - வண்ணாரப்பேட்டை இடையே தற்போது மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இப்போது வரை மொத்தம் 45 கிலோ மீட்டர் தூரத்துக்கு இயக்கப்பட்டு வருகிறது. அதில் 23 கி.மீ. தூரம் சுரங்கத்திலும் மீதமுள்ள 22 கி.மீ. வழித்தடம் மேம்பாலம் வாயிலாக ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த முதல்கட்ட திட்டத்தின் கடைசியாக, வண்ணாரப்பேட்டை - விம்கோ நகர் வரையிலான ரயில் பாதை அமைக்கும் பணி, இறுதி கட்டத்தில் உள்ளது. கொரோனாவால் ஏற்பட்ட சிக்கல்களால், இப்பணி முடிவது தாமதமாகியுள்ளது. விரைவில், இந்த வழித்தடம் மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிடும் என, எதிர்பார்க்கப்படுகிறது. தொடக்கத்தில் மெட்ரோ ரயில் சேவையில் ஆர்வம் காட்டாத மக்கள் இப்போது பெருமளவு ஆதரவினை தெரிவித்து வருகின்றனர்.

இதனையடுத்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே சென்னையில் மெட்ரோ ரயில் சேவையை விரிவாக்கம் செய்ய மாநில அரசு திட்டமிட்டது. அதன்படி 3 வழித்தடங்களில் இந்தத் திட்டம் இப்போது செயல்படுத்தப்பட இருக்கிறது. அதன்படி மாதவரம் - சிறுசேரி சிப்காட், மாதவரம் - சோழிங்கநல்லூர், கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி என 119 கி.மீ. தூரத்துக்கு இத்திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. இதற்கு, முதலில், 80 ஆயிரம் கோடி ரூபாய் தேவை என மதிப்பிடப்பட்டது.

மத்திய அரசின் வழிகாட்டுதல் அடிப்படையில், திட்ட வடிவமைப்பில் சில மாறுதல்கள் செய்யப்பட்டதால், மதிப்பீடு, 69 ஆயிரம் கோடி ரூபாயாக குறைந்தது. மொத்தம் 128 ரயில் நிலையங்கள்அமைக்கப்படவுள்ளன. இதில், ஒரு பகுதி நிதி, ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு நிதி நிறுவனம் வாயிலாக பெறப்பட்டது. இன்னொரு பகுதி நிதி, ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி வாயிலாக பெற, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நிதி ஏற்பாடு அடிப்படையில், இத்திட்டம் இரண்டு கட்டங்களாக பிரித்து செயல்படுத்தப்படுகிறது.

இதன்படி, மாதவரம் - சிறுசேரி சிப்காட் இடையிலான, 46 கி.மீ., மாதவரம் -- சோழிங்கநல்லுார் திட்டத்தில் மாதவரம் -- கோயம்பேடு வரையிலான வழித்தடம் ஆகியவை முன்னுரிமை திட்டமாக பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த பணிகளை முதலில் துவக்க, அனைத்து ஏற்பாடுகளும் முடிக்கப்பட்டுள்ளன. இந்த வழித்தடத்தில், கட்டுமான பணிகளை விரைந்து முடித்து, மூன்று ஆண்டுகளில் போக்குவரத்தை தொடங்க சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது.

இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகளில், மெட்ரோ ரயில் நிறுவனம் தீவிரம் காட்டி வருகிறது.இதில், கலங்கரை விளக்கம் -- பூந்தமல்லி, கோயம்பேடு -- சோழிங்கநல்லுார் வழித்தடங்களில், கட்டுமான பணிகளை தொடங்க, மெட்ரோ ரயில் நிறுவனம் முழு மூச்சுடன் இறங்கியுள்ளது. நிலம் கையகப்படுத்துதல், கட்டுமான வடிவமைப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்ட பணிகள் முடிக்கப்பட்டால், வட சென்னையில் இருப்பவர்கள் தென் சென்னைக்கும், தென் சென்னையில் இருப்பவர்கள் வட சென்னைக்கும், போக்குவரத்து நெரிசல் இன்றி எளிதாக சென்று வர வாய்ப்பு ஏற்படும்.