பள்ளி பருவத்தில் காதலை சொல்ல தயங்கும் இன்றைய பிஸி காலகட்டத்தில் கமெர்ஷியலாகிவிட்டது காதலர் தினம். பல்வேறு கலாசாரம் மற்றும் வாழ்க்கைமுறைகளுக்கு ஏற்ப காதலர் தினத்தை எந்த வரைமுறைகளும் இன்றி கொண்டாடுகின்றனர். சில நாடுகளில் குடும்பம் மற்றும் நண்பர்களுக்கு மரியாதை செலுத்தும்வகையில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. பல இடங்களில் அன்பு மற்றும் ரொமான்ஸை இந்த நாளில் வெளிப்படுத்துகின்றனர். பிப்ரவரி 14இல் கேண்டில் லைட் டின்னர், சினிமா, பார்ட்டி என கொண்டாடுவதற்கு பதிலாக சில ஈகோ - ஃப்ரெண்ட்லி முறையில் கொண்டாடலாம்.
பூக்கள் மற்றும் இலைகளாலான கிஃப்ட்
ரெடி மேட் கார்டுகள் மற்றும் பரிசுபொருட்களுக்கு பதிலாக இயற்கை காகிதங்கள், இலைகள் மற்றும் பூக்களால் பரிசுகளை செய்து கொடுக்கலாம். இது காதல் உறவை மேலும் வலுப்படுத்தும். ஒருவருடைய முயற்சிக்கு பாராட்டும், அன்பும், ஆதரவும் கட்டாயம் கிடைக்கும். அது எந்த உறவானாலும் சரி. இந்த காதலர் தினத்தில் உங்களுடைய ஸ்பெஷலான நபருக்கு இதுபோல் ஸ்பெஷலாக ஏதாவது செய்துகொடுக்கலாமே?
வெளியே தூங்குங்கள்
எப்போதும் வீட்டிற்குள்ளேயே ஏஸியிலேயே தூங்குபவரா? நீங்கள் உங்களுடைய இணையுடன் வானத்தை பார்த்துக்கொண்டு, நிலா மற்றும் நட்சத்திரங்களை ரசித்துக்கொண்டே இயற்கை காற்றை சுவாசித்தபடி வெளியே தூங்கலாம். பிஸியான ஓட்டம், ட்ராஃபிக், வாகன சத்தம் என இல்லாமல் ஒருநாள் இயற்கையின் ஓசையை அனுபவித்தபடி மனதுக்கு பிடித்தவருடன் செலவிடுவது சூப்பர் ஸ்பெஷல் தானே!!
வீட்டிலேயே சமையுங்கள்!
காதலர் தினத்தன்று தங்கள் இணையை ரெஸ்டாரண்டுக்களுக்கு அழைத்துசெல்வதை பலரும் வழக்கமாக வைத்திருப்பர். அதைத் தவிர்த்து வீட்டிலேயே ரொமான்டிக்காக டின்னர் சமைத்து அசத்தலாம். இது பர்ஸையும் பாதுகாக்கும்; சுற்றுச்சூழலையும் பாதுகாக்கும். அதேநேரத்தில் இயற்கை முறையில் விளைவித்த காய்கறிகளை வாங்கிப் பயன்படுத்துவதை மறந்துவிடாதீர்கள்! வெளியே சாப்பிட திட்டம்போட்டாலும், சூழல் நட்பு நடைமுறைகளை கடைபிடியுங்கள்.
மரம் நடுங்கள்!
ஒரு மரத்தின் வாழ்நாள் உங்கள் அன்பின் வாழ்நாளுக்கு சமம் என்பதை மறக்கவேண்டாம். ஒரு விதை முளைத்து, வளர்ந்து, துளிர்த்து, வலுவடைகிறது. அதேபோலத்தான் ஒரு உறவும், வளர்ந்து, புரிதல் ஏற்பட்டு, வலுபெறுகிறது. பேப்பர் கார்டுகளுக்கு மரங்களை வெட்டுவதற்கு பதிலாக மரம் நடுங்கள்!
பூங்காக்களை பார்வையிடுங்கள்!
உங்கள் இணையுடன் தாவரவியல் பூங்கா போன்ற இடங்களுக்குச் சென்று பூக்கள் மற்றும் மரங்களை பார்வையிடுங்கள். இது இயற்கையோடு இசைந்த ரொமான்டிக் காதலை அதிகரிக்கும்.
சைக்கிள் பரிசு!
சைக்கிள் போக்குவரத்துக்கு மட்டும் சிறந்ததல்ல: சுற்றுச்சூழலுக்கும்தான். கார், பைக்கில் பயணம் செய்வதைவிட சைக்கிளில் பயணம் செய்வது பணத்தையும் மிச்சப்படுத்தும். சைக்கிள் பயணம் சிறந்த உடற்பயிற்சியும்கூட. புவி வெப்பமயமாதலையும் தடுக்கும். நீங்கள் ஏன் ஒரு சைக்கிளை அன்பு பரிசாகக் கொடுத்து அசத்தக்கூடாது?!
மறுசுழற்சி பொருட்கள்
வித்தியாசமான அதேசமயம் மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களில் செய்யப்பட்ட ஹேண்ட் பேக், காதணி மற்றும் பூக்களை அன்புத்துணைக்கு பரிசளிக்கலாமே!