சிறப்புக் களம்

திருப்பூரில் சாதியக் கொடுமை: வடமாநிலத்தைப் போல் சாதி பஞ்சாயத்து

திருப்பூரில் சாதியக் கொடுமை: வடமாநிலத்தைப் போல் சாதி பஞ்சாயத்து

webteam

காங்கேயம் அருகே வட மாநிலத்தைப் போல் சாதி பஞ்சாயத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் காவல்துறையில் புகார் மனு அளித்தும் முறையான நடவடிக்கை எடுக்காததால் சாதிய வன்கொடுமைகள் முற்றுப்பெறாமல் இப்பகுதியில் தொடர்வதாக அப்பகுதியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் தீத்தாம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல். கூலித்தொழிலாளி. இவர் மனைவி தேவி. இரு குழந்தைகள் உள்ளனர். இவரது ஆடுகள் எதிரில் உள்ள சரஸ்வதி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் மேய்ந்துள்ளது. இதையடுத்து அவரது குடும்பத்தினரை மிரட்டி 5000 ரூபாய் குத்தத்தொகை செலுத்தவேண்டும் என சரஸ்வதி தரப்பில் தெரிவித்துள்ளனர். 

பணம் செலுத்த முடியாததால் சத்திவேலின் 19வயது மகளை மிரட்டி, காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்துள்ளனர். இந் நிலையில் சம்பவம் தொடர்பாக காங்கேயம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து சரஸ்வதி, சேகர், மனோகர், கவின், செந்தில் ஆகிய 5 பேரின் மீது இரண்டு வாரங்கள் கழித்து வன்கொடுமை தடுப்புப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால் தற்போது வரை யாரும் கைது செய்யப்படவில்லை. குற்றம் சாட்டப்பட்டவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் காலம் தாழ்த்துவதன் மூலம் அவர்கள் பிணையில் தப்பிச்செல்வதற்கான நடவடிக்கையை போலீசார் செய்து வருகின்றனர் என்றும் சக்திவேல் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார்.

பெண்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் வகையில் நள்ளிரவில் பெண்களை மிரட்டி சாதிப் பஞ்சாயத்துக்கு வரவழைத்தும், பலர் முன்னிலையில் தகாத வார்த்தையில் பேசி மிரட்டியும் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்தும், தாக்குதல் நடத்தியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் நகர் பகுதியில் இருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அனைத்து பகுதிகளிலும் சாதிய வன்கொடுமைகள் தொடர்ந்து அரங்கேறி வருவதாகவும், காவல்துறை மேல் சாதியினருக்கே அடிபணிந்து செல்வதால் இதுபோன்ற குற்றங்கள் இப்பகுதியில் தொடர்ந்து நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது. 

குறிப்பிட்ட பிரிவினருக்குச் சொந்தமான மண்டபத்தில் மற்றொரு பிரிவினருக்கு அனுமதி இல்லை, கோவில்கள், முடிதிருத்தும் இடம், டீக்கடை போன்ற இடங்களில் இன்றளவும் சாதிய வேற்றுமைகள் இப்பகுதியில் நிலவி வருவதாகக் கூறப்படுகிறது.

- சுதீஸ்