சிறப்புக் களம்

பட்ஜெட் 2022-23: மருத்துவக் காப்பீட்டில் கூடுதல் சலுகைகள் கிடைக்குமா?

பட்ஜெட் 2022-23: மருத்துவக் காப்பீட்டில் கூடுதல் சலுகைகள் கிடைக்குமா?

JustinDurai

நீரிழிவு, இதய நோய், கேன்சர், இரத்த அழுத்த நோய் போன்றவைகளுக்கு பயன்படுத்தும் மருந்து, மாத்திரைகளுக்கும் மற்றும் அதிக பயன்பாட்டில் உள்ள பொது மருந்துகளுக்கும் வரிகளை முற்றிலும் நீக்கினால் அது பொதுமக்களுக்கு மிகப்பெரிய சுமையில் இருந்து விடுதலையை தரும்.

பலத்த எதிர்பார்ப்புகளிடையே நாளை (பிப்.1) மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையினை தாக்கல் செய்ய இருக்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். எப்போதும் போலவே தொழில் துறையினரிடமும், பொதுமக்களிடமும் ஒருவித எதிர்பார்ப்பு மண்டிக்கிடக்கிறது. வரிகள் குறைக்கப்படுமா? வரிச்சலுகைகள் கிடைக்குமா? என்று ஆவலுடன் இருக்கிறார்கள். இதனிடையே தொற்றுநோய் பரவும் நிலையில் மருத்துவக் காப்பீட்டில் கூடுதல் சலுகைகள் கிடைக்குமா? என்கிற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

இதுகுறித்து காப்பீட்டு ஆலோசகர் சங்கர் நீதிமாணிக்கம் கூறுகையில், "கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகை அச்சுறுத்தி வரும் பெருந்தொற்று நோயான கொரோனா காரணமாக எதிர்பாராத மருத்துவ செலவுகள் அதிகரித்து வந்திருக்கிறது. அதுமட்டுமில்லாமல் சேவை வரிகள் காரணமாகவும் மருத்துவக் கட்டணங்களும், மருந்துகளில் விலையும், மருத்துவமனையில் சிகிச்சை பெறும் செலவுகளும் கூடியுள்ளன. எனவே இந்த நிதிநிலை அறிக்கையில் மருத்துவத் துறைக்கு வரிக்குறைப்பு, வரிச்சலுகைகள் செய்தால் மக்களுக்கு கொஞ்சம் ஆறுதலாக இருக்கும்.

பொதுவாகவே “மருந்துகளின் மீதான வரி என்பது நோய்கள் மீதுப் போடப்படும் வரி (Tax on Medicine is Tax on disease)” என்ற சொல்லாடல் மருத்துவ உலகில் சொல்லப்பட்டு வரும் பொதுவான கருத்து ஆகும். எனவே பொதுமக்கள் வாங்கி அன்றாடம் பயன்படுத்தப்படும் நீரழிவு நோய், இதய நோய், புற்றுநோய், இரத்த அழுத்த நோய், இரத்த கொழுப்பு போன்றவைகளுக்கு பயன்படுத்தும் மருந்து, மாத்திரைகளுக்கும் மற்றும் அதிக பயன்பாட்டில் உள்ள பொது மருந்துகளுக்கும் வரிகளை முற்றிலும் நீக்கினால் அது பொதுமக்களுக்கு மிகப்பெரிய சுமையில் இருந்து விடுதலையை தரும். மேலும் கொரோனா சிகிச்சைக்கு வெளி மருத்துவ (OP Treatment) சிகிச்சை எடுத்தாலும் இழப்பீடு கிடைக்கும் வகையில் காப்பீட்டில் திருத்தம் கொண்டு வந்தால் பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

பெருந்தொற்றில் மக்களின் வருமானம் குறைந்துள்ள நிலையில் கொரோனா அவரச சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகளும் கட்டாய இலவச சிகிச்சை தரவேண்டும் என்று அரசு இந்த நிதிநிலையில் அறிவித்து அதற்கு ஏற்ப நிதி ஒதுக்கினால் மக்கள் கொஞ்சம் மனநிம்மதி அடைவார்கள்.

மேலும் மருத்துவக் காப்பீட்டு சந்தாக்கள் உயர்ந்துகொண்டே போகிறது. அந்த நிலையில் கூடுதல் சுமையாக வரிகளும் விதிக்கப்படுகிறது. மருத்துவக் காப்பீட்டை இன்னும் ஒழுங்குப்படுத்தி மருத்துவமனைகளை கண்காணிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்து, மருத்துவ சேவை வரிகளையும் குறைத்து மருத்துவக் காப்பீட்டின் சந்தா தொகையை குறைக்க வழி செய்யலாம்.

மேலும் மருத்துவக் காப்பீட்டு சந்தாவுக்குத் தரப்படும் வரிச்சலுகையில் வரம்பை கூடுதல் ஆக்கினால் இன்னும் அதிக அளவில் மருத்துவக் காப்பீடு எடுப்பது அதிகரித்து அதன் பலனாக காப்பீட்டுச் சந்தா குறையவும் வாய்ப்பிருக்கிறது’’ என்கிறார் அவர்.