சிறப்புக் களம்

ஓடிடி திரைப்பார்வை 19 :கலகலப்பான ஜாலியான சினிமா - எப்படியிருக்கு 'ப்ரோ டாடி'?

ஓடிடி திரைப்பார்வை 19 :கலகலப்பான ஜாலியான சினிமா - எப்படியிருக்கு 'ப்ரோ டாடி'?

கலிலுல்லா

சோகமான மனநிலையில் சிக்கி தவிக்கிறீர்களா? முந்தைய நாள் பார்த்த மொக்கைபடம் எதும் உங்களை வாட்டுகிறதா? தூங்கவிடாமல் தொந்தரவு செய்கிறதா? உடனடியாக நீங்கள் செய்யவேண்டியது ஹாட்ஸ்டாரில் உள்ள 'ப்ரோ டாடி' திரைப்படத்தை பார்ப்பது மட்டுமே. அது உங்களை சற்று இளைப்பாறக்கூடும். முயற்சி செய்து பாருங்களேன்!

மலையாளத்தில் நீண்டநாட்களுக்கு பிறகு ஒரு ஜாலியான சினிமா. எத்தனை நாட்களுக்கு கேமிராவை காடு, மலை, குடிசை வீடுகள், காவல்நிலையம் என மலையாள மண்ணில் மட்டுமே வைத்திருப்பது. அதை சற்று மாற்றி, பெங்களூரிலும், கேரளாவின் பணக்கார வீடுகளிலும் வைத்து, கலர்ஃபுல்லாகவும், எலைட்டான மேக்கிங்கையும் மிக்ஸ் செய்து ரசிப்பதற்கு நிறையவே தந்திருக்கிறார் பிரத்விராஜ்.

முறுக்கு கம்பி தொழிலதிபர் ஜான் (மோகன்லால்). அவருக்கு அன்னா (மீனா) என்ற மனைவியும், ஈஷோ (பிரத்விராஜ்) என்ற மகனும் உண்டு. தன் நெருங்கிய நண்பனான குரியனின் (லாலு அலெக்ஸ்) மகள் அன்னாவுக்கு (கல்யாணி பிரியதர்ஷன்) பிரித்விராஜை திருமணம் முடிக்க மோகன்லாலும், மீனாவும் விரும்புகிறார். பின்னாளில் விதியின் வலியால் திருமணம் செய்தே ஆக வேண்டும் என கட்டாயத்துக்கு தள்ளப்படுகிறார்கள். கட்டாயத்துக்கு என்ன காரணம்? திருமணம் நடந்ததா? என்பதை ட்விஸ்ட் கலந்த கலகலப்புடன் சொல்லியிருக்கிறார் பிரித்விராஜ்.

ஜான்-ஆக மோகன்லால். அதகளம் செய்கிறார். வெள்ளை ஜிப்பாவும், கருப்பு தாடியுமாக 'வயசானாலும் மனுச அழகாத்தான்யா இருக்காரு' என வியக்க வைக்கிறார். குறிப்பாக வெட்கப்படும் காட்சிகளில், 'லாலேட்டா... சோ க்யூட்' என ஆர்பரிக்க வைக்கிறார். உண்மையில் உருகி மருகி வெட்கப்படும் காட்சிகள் அவ்வளவு அழகாக இருக்கின்றன. மோகன்லால் ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட்!
டெய்ல், ஸ்டைலான தாடி, கட்டுடல் மேனியாக ஆண்களைக்கூட ஈர்க்கிறார். தவற்றை செய்து, சிக்கி, திக்கி, விக்கி தந்தையிடம் சொல்ல தயங்கும் காட்சிகளில் ஸ்கோர் செய்கிறார்.

காதலனாகவும், மகனாகவும், மருமகனாகவும் கவனம் பெறுகிறார் பிரித்விராஜ். கடைசியாக த்ரிஷ்யம் படத்தில் பயம்கலந்த முகத்துடனே வலம் வந்த மீனாவின் முகம் இந்த படத்தில் தாய்மையுணர்வுடன் மாறியிருக்கிறது. கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் எந்த குறையும் வைக்கவில்லை. லாலு அலெக்ஸ் காமெடிக்கான மெட்டிரியல். சில இடங்களில் அவர் சீரியஸ் காட்டினாலும் அதுவுமே ஜாலியாகத்தான் இருக்கிறது. 96 மியூசிக்குடன் மீனாவை பார்க்கும் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன. சவுபின் சாஹிர் கதாபாத்திரம் அங்காங்கே கிச்சுகிச்சு மூட்டினாலும், இன்னும் சிரத்துடன் எழுயிருக்கலாம்.

படத்தின் பாதி வெற்றியை அதன் கதாபாத்திர தேர்வு தான். மோகன்லாலும், பிரித்விராஜூம் அப்பா - மகன் கதாபாத்திரத்துக்கு அவ்வளவு கச்சிதமாக பொருந்துகின்றனர். பிரித்விராஜின் வயசு எந்த இடத்திலும் துருத்தலாக தெரியவில்லை. டைமிங் காமெடிக்கள் வொர்க் ஆகியுள்ளன. படத்தில் ரசிக்க நிறையவே இருந்தாலும், படத்தின் நீளம் சில இடங்களில் சோர்வைத்தருவதை தவிர்க்க முடியவில்லை. இரண்டாம் பாகத்தில் பெரிய சுவாரஸ்யங்கள் எதுவுமின்றி படம் நகர்வது திரைக்கதையின் பலவீனத்தை காட்டுகிறது. பொது சமூகம் கேள்வி கேட்கும் சிக்கல்களைப்பற்றி பேசும் கதையை கருவாக கொண்டு, அதை மேலோட்டமாக பேசியிருப்பதைக்காட்டிலும், ஆழத்துடன் அணுகியிருக்கலாம் என தோன்றுகிறது.

அபிநந்தன் ராமனுஜத்தின் கேமிரா படத்தை வேறொரு தளத்திற்கு எடுத்து கொண்டு செல்கிறது. இன்டோர் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கின்றன. எலைட் மனநிலையை கடத்துவதில் அவரது கேமிராவின் பங்கு முக்கியமானது. தீபக் தேவின் பிண்ணனி இசை சில இடங்களில் ஓகே என்றாலும் பல இடங்களில் கவனம் ஈர்க்கவில்லை.

மொத்ததில் ப்ரோ டாடி, பிரித்விராஜின் சிறப்பான முயற்சி. குறைந்த பட்ஜெட்டில் ஜாலியான ஃபேமிலி என்டர்டையின்மெண்ட் படத்தை பார்க்க விரும்பினால் ப்ரோ டாடி நல்ல தேர்வு!