சிறப்புக் களம்

“கட்சிக்காக உழைத்தவர்களையே வேவு பார்ப்பதா?”-தமிழக பாஜகவில் தொடரும் விலகல் படலம்! அடுத்து?

“கட்சிக்காக உழைத்தவர்களையே வேவு பார்ப்பதா?”-தமிழக பாஜகவில் தொடரும் விலகல் படலம்! அடுத்து?

JananiGovindhan

தமிழ்நாட்டில் தாமரை மலர்ந்தே தீரும் என பாரதிய ஜனதா கட்சியினரால் தொடர்ந்து கருத்துகள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், அக்கட்சியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளே தற்போது பாஜகவில் இருந்து விலகுவது தொடர் கதையாகி வருகிறது.

அதன்படி நேற்று (மார்ச் 5) பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு தொழில்நுட்பப் பிரிவு தலைவர் பதவியை ராஜினாமா செய்த சி.டி.ஆர்.நிர்மல்குமார், எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் பாஜகவின் கூட்டணி கட்சியான அதிமுகவில் இணைந்தார்.

இதுபோக, “என்னால் முடிந்த வரை பல சங்கடங்களை கடந்து கடந்த 1.5 ஆண்டுகளாக பயணித்தேன்! உண்மையாக நேர்மையாக உழைத்தேன், வேதனை மட்டுமே மிச்சம்! விடைபெறுகிறேன்” எனச் சொல்லி பாஜகவில் இருந்து விலகியது ஒரு பக்கத்திற்கு அறிக்கையை வெளியிட்டு பெரும் பரபரப்பை கிளப்பியிருந்தார்.

குறிப்பாக, “தொண்டர்களையும் கட்சியையும் செருப்பாக பயன்படுத்தி கட்சியை பற்றி துளியும் சிந்திக்காது, சொந்த கட்சி நிர்வாகிகளையும் தொண்டர்களையும் வேவு பார்த்து ஆனந்தம் அடைவதை போன்ற அல்பத்தனம் எதுவும் இல்லை. அதையும் தாண்டி தன்னை நம்பி இருக்கும் தொண்டர்கள், கட்சி மற்றும் கமலாலயத்தின் ஒவ்வொரு செங்கலையும் வியாபாரமாக்கி இடத்திற்கேற்ப நடித்து ஏமாற்றி வரும் தலைமையை பார்த்து ஒவ்வொரு நாளும் வேதனை அடைந்தது தான் மிச்சம்.” என சரமாரியாக சாடி அறிக்கையில் நிர்மல்குமார் குறிப்பிட்டிருந்தார்.

இதுபோக, “எல்லாவற்றிற்கும் மேலாக நான் ஒரு அமைச்சருடன் கடுமையான சட்ட போராட்டம் நடத்தி வரும் நிலையில் அந்த அமைச்சரை வெளியில் வீராவேசமாக பேசிவிட்டு திரைமறைவில் பேரம் பேசும் நபருடன் எப்படி பயணிக்க முடியும்? மொத்தத்தில் திராவிட மாடல் அமைச்சர்களேயே மிஞ்சும் அளவிற்கு ஒரு #420மலை-யாக இருக்கும் நபரால் தமிழக பாஜகவிற்கு மட்டுமல்ல தமிழகத்திற்கே மிகபெரிய கேடு. தன்னை நம்பி இருக்கும் தொண்டர்கள் மற்றும் கட்சியை ஏமாற்ற நினைக்கும் ஒரு தலைமையை நம்பி எப்படி பயணிக்க முடியும்?” என்றும் காட்டமாக பதிவிட்டிருந்தார் நிர்மல்குமார். இதனையடுத்து #420மலை என்ற ஹேஷ்டேக்கும் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.

இந்த நிலையில்தான் மற்றொமொரு தமிழ்நாடு பாஜகவின் முக்கிய நிர்வாகி அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார். அதன்படி, தமிழ்நாடு பாஜகவின் ஐ.டி. பிரிவு மாநில செயலாளர் பதவியில் இருந்த திலிப் கண்ணன் பாஜகவிலிருந்து விலகியிருக்கிறார்.

இதுபோக, தமிழ்நாடு பாஜக தலைவராக இருக்கும் அண்ணாமலையை சரமாரியாக குற்றஞ்சாட்டி ஃபேஸ்புக்கில் பகிர்ந்த கருத்த ட்விட்டரிலும் பதிவிட்டு “கனத்த இதயத்துடன் பாஜகவில் இருந்து வெளியேறுகிறேன்” எனவும் குறிப்பிட்டிருக்கிறார் திலிப் கண்ணன்.

அதில், “இந்த வார் ரூம் சுவர் இன்னும் எத்தனை பேரை காவு வாங்க போகுதோ? பாஜக தலைவராக முருகன் இருந்தபோது மாற்று கட்சியில் இருந்து மிக முக்கிய தலைவர்களை எல்லாம் பாஜகவில் இணைத்தார். அண்ணாமலை வந்து யாரையாவது கட்சியில் இணைத்த நிகழ்வு உண்டா?

சொந்த கட்சியில் இத்தனை வருடம் உழைத்தவனை வேவு பார்ப்பது, உலகமே கேவலாக பேசும் ரொட்டியை கூடவே வைத்து சுற்றுவதுதான் இந்த புனிதரின் வேலை போல. என்னை எப்படியும் திட்டித் தீர்ப்பீர்கள். அதற்கு முன்னால், ஒரு சித்தாந்தவாதியே இப்படி போறானே தவறு எங்கே நடக்கிறது என ஒரு முறை யோசித்துவிட்டு திட்டுங்கள்” என திலிப் கண்ணன் குறிப்பிட்டிருக்கிறார்.

நேற்று நிர்மல் குமார், இன்று திலிப் கண்ணன் என அடுத்தடுத்து பாஜகவின் முக்கிய புள்ளிகள் அந்த கட்சியில் இருந்து விலகி பரபரப்பு அறிக்கையை வெளியிட்டது பேசுபொருளாகியுள்ள நிலையில், இதற்கு முன்பு பாஜகவில் இருந்து விலகிய நடிகை காயத்ரி ரகுராம் அண்ணாமலையை சாடி ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.

அதில், “பாஜகவை தமிழ்நாட்டின் ஆணி வேர்வரை கொண்டு நிறுத்த அண்ணாமலையிடம் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது. ஆனால், அண்ணாமலையோ தற்போது பாஜகவின் ஆணிவேராக இருக்கக் கூடியவர்களையே வெட்டி எறிந்து வருகிறார்.

தமிழ்நாட்டில் பாஜகவை அழிக்க திமுக, விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட்கள், காங்கிரஸ், நாம் தமிழர் கட்சிகள் எதுவும் செய்ய தேவையில்லை. ஏனெனில் பாஜகவே அதனை செய்துக்கொள்ளும். தமிழ்நாட்டில் பாஜகவுக்கு முடிவுக்கட்ட அண்ணாமலை ஒருத்தரே போதும்.” எனக் குறிப்பிட்டு, “#420_மலை-ஐ விட காரிய கர்த்தாக்கள் முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள்” என்றும் காயத்ரி ரகுராம் தெரிவித்திருக்கிறார்.

இந்த நிலையில், “கூட்டணியில் இருந்துகொண்டே அதிமுக இதை செய்திருக்கக் கூடாது. அண்ணாமலையின் தலைமையின் கீழ் தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி அமைக்கும்” என பாஜகவின் அமர்பிரசாத் ரெட்டி ட்வீட்டரில் பதிவிட்டிருக்கிறார்.

இதனிடையே, சி.டி.ஆர்.நிர்மல்குமார் பாஜகவில் இருந்து விலகி அறிக்கை விட்ட பதிவை ரீட்டீட் செய்திருந்த திலிப் கண்ணன், “எங்கிருந்தாலும் வாழ்கணா, நாங்கள் என்றும் எங்கள் தலைவர் அண்ணாமலை வழியில்” எனக் நேற்று (மார்ச் 5) குறிப்பிட்டிருந்தார். இந்த பதிவிட்ட அடுத்த நாளே பாஜகவில் இருந்து திலிப் கண்ணன் விலகியதை அறிந்த நெட்டிசன்கள், “16 மணிநேரத்தில் அப்படி என்ன நடந்திருக்கும்?” என கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.