Shah Rasheed Ahmed Qadri  @rashtrapatibhvn / Twitter
சிறப்புக் களம்

”முஸ்லிம்களுக்கு பாஜக எந்த விருதையும் வழங்காது என நினைத்தேன்” - பிரதமரிடமே சொன்ன கைவினை கலைஞர் ரஷித்!

பாஜக அரசு முஸ்லிம்களுக்கு விருது வழங்காது என எண்ணியிருந்த தனக்கு, விருது கொடுத்து அந்த எண்ணத்தை பிரதமர் மோடி மாற்றிவிட்டார் என பத்மஸ்ரீ விருது பெற்ற பிட்ரி கைவினைக் கலைஞர் ரஷித் அகமது காத்ரி தெரிவித்துள்ளார்.

Prakash J

மத்திய அரசு வழங்கும் பத்ம விருதுகள்

ஆண்டுதோறும் கலை, சமூகப்பணி, அறிவியல், தொழில், மருத்துவம், இலக்கியம், கல்வி, விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாகப் பணியாற்றுவோருக்கு மத்திய அரசு பத்ம விருதுகளை வழங்கி கெளரவித்து வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் 106 பேருக்கு வழங்கப்படுவதாகக் கடந்த ஜனவரி மாதம் அறிவிக்கப்பட்டது.

அதில், 6 பேருக்கு பத்ம விபூஷண், 9 பேருக்கு பத்ம பூஷண் மற்றும் 91 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில், தமிழகத்தைச் சேர்ந்த 6 பேருக்கும் பத்ம விருதுகள் (வாணி ஜெயராம் (பத்ம பூஷண்), கல்யாணசுந்தரம் பிள்ளை, வடிவேல் கோபால், மாசி சடையன், பாலம் கல்யாணசுந்தரம், கோபால்சாமி வேலுச்சாமி) வழங்கப்பட்டன.

இதில், மறைந்த வாணி ஜெயராமைத் தவிர மற்ற எல்லோருக்கும் பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டன. கடந்த மார்ச் 22ஆம் தேதி டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 47 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டன.

இதைத் தொடர்ந்து நேற்று (ஏப்ரல் 5) குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் 52 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டன. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

உங்கள் ஆட்சி வந்ததும், பாஜக தலைமையிலான அரசு தனக்கு எந்த விருதையும் வழங்காது என எண்ணினேன். ஆனால், நான் நினைத்தது தவறு என நீங்கள் (மோடி) நிரூபித்துவிட்டீர்கள்.
ரஷித் அகமது காத்ரி, பிட்ரி கைவினைக் கலைஞர்

கர்நாடகத்தைச் சேர்ந்த பிட்ரி கைவினைக் கலைஞர்

இதில், கர்நாடகாவைச் சேர்ந்த புகழ்பெற்ற பிட்ரி கைவினைக் கலைஞரான ரஷித் அகமது காத்ரிருக்கும் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. இந்த விழா நிறைவு பெற்றதும், விருது பெற்றவர்களுடன் பிரதமர் மோடி சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அப்போது, பிரதமருடன் கைகளைக் குலுக்கிய ரஷித் அகமது காத்ரி, ”எனக்கும் பத்ம விருது கிடைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது இருந்தது. ஆனால், எனக்கு அப்போது விருது கிடைக்கவில்லை. உங்கள் ஆட்சி வந்ததும், பாஜக தலைமையிலான அரசு தனக்கு எந்த விருதையும் வழங்காது என எண்ணினேன். ஆனால், நான் நினைத்தது தவறு என நீங்கள் (மோடி) நிரூபித்துவிட்டீர்கள். உங்களுக்கு மிகுந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

பிரதமர் மோடியிடம் தன் கருத்தைச் சொன்ன காத்ரி

அதைக் கேட்ட பிரதமர் மோடி, அவருக்கு புன்னகையுடன் வணக்கம் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஷித் அகமது காத்ரி, ''இந்த விருதைப் பெற நான் 10 ஆண்டுகள் முயற்சி செய்தேன். பாஜக ஆட்சிக்கு வந்ததும், முஸ்லிம்களுக்கு இந்த அரசு எந்த விருதையும் வழங்காது என எண்ணினேன். நான் நினைத்தது தவறு என பிரதமர் மோடி நிரூபித்துவிட்டார்'' எனத் தெரிவித்தார்.

யார் இந்த ரஷித் அகமது காத்ரி?

கர்நாடகாவைச் சேர்ந்த ரஷித் அகமது காத்ரி, பிட்ரி கைவினைக் கலைஞர் ஆவார். 68 வயதான இவர், இந்தக் கலையை தன்னுடைய 10 வயது கற்று வருகிறார். இவர்தான் குடும்பத்தின் மூன்றாம் தலைமுறைக் கலைஞராகக் கருதப்படுகிறார், அவருடைய தந்தையின் விருப்பத்திற்கு எதிராக இந்தக் கலையைக் கற்கத் தொடங்கியதாக பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த தொழிலில் ஈடுபட்டு வரும் காத்ரி, 1984ஆம் ஆண்டு கர்நாடக மாநில விருதையும், 1988ஆம் ஆண்டு தேசிய விருதையும், 2006ஆம் ஆண்டு சுவர்ண கர்நாடகா ராஜ்ய உத்சவ் விருதையும், 2004ஆம் ஆண்டு கிரேட் இந்தியன் சாதனையாளர் விருதையும் பெற்றுள்ளார். தவிர, பல சர்வதேச மற்றும் தேசிய அளவிலான கண்காட்சிகளிலும் இவர் பங்கேற்றுள்ளார்.

”இந்த கலை மூலம் மலர் குவளைகள், குடங்கள், ஃபேன்ஸி குவளைகள், வீட்டு அலங்கார பொருட்கள், நகைகள் எனப் பலவித கைவினைப் பொருட்களை உருவாக்கி வருகிறோம். இந்தப் பொருட்களை உருவாக்க ஒரு மணி நேரம் முதல் ஒரு மாதம் வரைகூட ஆகும். அந்தந்த கைவினைப் பொருட்களைப் பொறுத்து காலம் அமையும்.

பழங்கால மற்றும் நுட்பமான வேலைகளை உள்ளடக்கிய இந்த தொழிலின் திறமையான கலைஞர்களை தற்போது கண்டுபிடிப்பது என்பது மிகவும் கடினமான காரியம்.
ரஷித் அகமது காத்ரி, பிட்ரி கைவினைக் கலைஞர்

சில பொருட்களில் செய்யப்படும் நுணுக்க வேலைப்பாடுகள் காரணமாக நேரம் அதிகரிக்கிறது. இது, மிகவும் நுட்பமான வேலை. என்றாலும், பழங்கால மற்றும் நுட்பமான வேலைகளை உள்ளடக்கிய இந்த தொழிலின் திறமையான கலைஞர்களை தற்போது கண்டுபிடிப்பது என்பது மிகவும் கடினமான காரியம்.

கொரோனா தொற்றுக்குப் பிறகு எங்களுடைய வியாபாரம் மிகவும் மோசமடைந்துள்ளது. கொரோனாவுக்கு முன்பு, எங்களுடைய பொருட்கள் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களுக்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால், கொரோனாவுக்குப் பிறகு சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்துவிட்டதால் எங்களுடைய வணிகமும் பாதித்துள்ளது” என்று சொல்லும் காத்ரி, ”பல நூற்றாண்டுகள் பழைமையான இந்த கைவினைப் பணியைக் கற்றுக்கொள்வதில் இளைய தலைமுறையினர் யாரும் ஆர்வம் காட்டுவதில்லை.

அரசாங்கம் இந்த தொழிலை விரிவுபடுத்துவதற்குத் தேவையான தளங்களை அமைத்துத் தர வேண்டும்.
ரஷித் அகமது காத்ரி, பிட்ரி கைவினைக் கலைஞர்

மேலும், இந்த தொழில் உள்ளவர்கள் பலர் கடுமையான நிதிநெருக்கடியில் உள்ளனர். ஆகையால், அரசாங்கம் இந்த தொழிலை விரிவுபடுத்துவதற்குத் தேவையான தளங்களை அமைத்துத் தர வேண்டும்” என்று வேதனை பொங்க கடந்த ஜனவரி மாதம் ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.