சிறப்புக் களம்

தைராய்டை கட்டுப்படுத்தும் கொத்தமல்லி - நன்மைகளும், பயன்படுத்தும் முறைகளும்

தைராய்டை கட்டுப்படுத்தும் கொத்தமல்லி - நன்மைகளும், பயன்படுத்தும் முறைகளும்

Sinekadhara

உலகெங்கிலும் பயன்படுத்தப்படுகிற மூலிகைகளில் ஒன்று கொத்தமல்லி விதை. இதன் தழைகளும் நிறைய உணவுகளில் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன. உலகின் பல இடங்களில் cilantro என்று அறியப்படுகிற கொத்தமல்லியானது அதன் தனித்துவமான சுவை மற்றும் வாசனையாலேயே முக்கியத்துவம் பெறுகிறது. குறிப்பாக இந்திய உணவுகளில் ஃபினிஷ்ங் டச்சிற்காவது மல்லித்தழை தூவுவது வழக்கம்.

கொத்தமல்லி விதை மற்றும் தழையின் நன்மைகள்:

தைராய்டு சுரப்பிகளின் சீராக இயக்கத்திற்கு கொத்தமல்லி விதை தண்ணீரானது மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக கூறுகின்றனர் ஃபிட்னெஸ் நிபுணர்கள். அதே சமயம் எடைகுறைப்பு, மூட்டு வலியை குறைத்தல் போன்றவற்றிற்கும் கொத்தமல்லி தண்ணீர் உதவுகிறது என்கின்றனர். இந்த விதையில் நார்ச்சத்து மற்றும் மினரல்கள் நிறைந்திருப்பதால், செரிமானத்தை தூண்டுவதுடன், மினரல்கள் உடலில் உறிஞ்சப்படுவதற்கும் உதவுகிறது. கொத்தமல்லியில் வைட்டமின் ஏ, சி, கே மற்றும் ஃபோலேட் போன்றவை நிறைந்திருக்கிறது. கொத்தமல்லித் தழையில் வைட்டமின் சி மற்றும் ஆண்டி ஆக்சிடண்டுகளும் நிறைந்திருக்கிறது. இது செல்கள் சேதமடையாமல் பாதுகாக்கிறது.

தைராய்டு சுரப்பி ஏன் முக்கியமானது?

கல்லீரல், கணையம் போன்ற பிற நாளமில்லா சுரப்பிகளைப் போன்று தைராய்டு சுரப்பியிலிருந்து சுரக்கும் ஹார்மோன்களும் நேரடியாக ரத்தத்தில் கலக்கிறது. தைராய்டு ஹார்மோன் குறைவான சுரப்பதை ஹைப்போ தைராய்டிசம் என்றும், அதே சுரப்பி அதிகப்படியாக சுரப்பதை ஹைப்பர் தைராய்டிசம் என்றும் அழைக்கின்றனர். தைராய்டு சுரப்பியானது வளர்ச்சி மற்றும் மெட்டபாலிசத்தை மட்டும் பாதிப்பதில்லை. இதயம், மூளை, கல்லீரல், சிறுநீரகம், ரத்த நாளங்கள், ரத்த அழுத்தம் மற்றும் செரிமான மண்டலம் என அனைத்தின்மீதும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

தைராய்டு பிரச்னைக்கு கொத்தமல்லி விதை தண்ணீர் எப்படி உதவுகிறது?

பல்வேறு உணவுகளில் கொத்தமல்லி பயன்படுத்தப்படுவதை தவிர, தைராய்டு பிரச்னைகளுக்கு கொத்தமல்லி தண்ணீர் சிறந்த வீட்டு மருந்து என்பது பலருக்கும் தெரியாது. இந்த இயற்கை பொருளானது ஜீரண சக்தியை தூண்டி, வயிறு உப்புதலை குறைக்கிறது. இதில் ஆண்டி ஆக்சிடண்டுகள் மற்றும் சுத்திகரிப்பான்கள் நிறைந்திருப்பதால் இது தைராய்டு மற்றும் சிறுநீரகம் போன்ற சுரப்பிகளை சுத்தம் செய்கிறது. தைராய்டு சுரப்பிகளை சுத்தம் செய்து, அதனை சீராக இயங்கச்செய்ய கொத்தமல்லி உதவுகிறது.

கொத்தமல்லி தழை அல்லது விதை ஜூஸை குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்:

1. எடை குறைப்புக்கு உதவுகிறது
2. பிடிப்பு, வயிற்றுப்போக்கு, வாந்தி மற்றும் குமட்டல் போன்ற செரிமான பிரச்னைகளை சரிசெய்கிறது
3. வயிறு உப்புசம் மற்றும் வாயுத்தொல்லைக்கு தீர்வு கொடுக்கிறது
4. வைட்டமின்கள் உடலில் சேர மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது
5. உடலிலிருந்து நச்சுக்களை வெளியேற்றுகிறது
6. ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது
7. முடி உதிர்தலை குறைத்து, முடி வளர்ச்சி மற்றும் அடர்த்தியை அதிகரிக்கிறது
8. முகப்பரு மற்றும் கருமை போன்ற சரும பிரச்னைகளை சரிசெய்கிறது

கொத்தமல்லி பானம் அல்லது டீ பண்ணுவது எப்படி?

1. அடுப்பை சிம்மில் வைத்து, 2 டேபிள் ஸ்பூன் கொத்தமல்லி விதையை ஒரு கப் தண்ணீரில் போட்டு 10 - 15 நிமிடங்கள் கொதிக்கவைக்கவும். சுத்தமான வடிகட்டி கொண்டு வடிகட்டவும்.

2. தண்ணீர் குடிக்கும் சூட்டிற்கு வந்தவுடன் எடுத்து குடிக்கவும்.
3. காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் குடிக்கவும். ஒரு நாளில் குறைந்தது 2 முறையாவது இதனை குடிக்கவும்.

4. இனிப்பு சுவை வேண்டுமென்பவர்கள் சிறிது தேன் சேர்த்துக்கொள்ளலாம்.

5. கொதிக்கவைப்பதற்கு சில நிமிடங்கள் முன்பு கொத்தமல்லியை ஊறவைத்து பின்னர் கொதிக்கவைக்கலாம். இதனால் அதனுடைய முழு நன்மையும் கிடைக்கும்.

மல்லித்தழை பானம்:

1. 10 -12 மல்லித்தழையை சுத்தமாக கழுவி இரவு முழுவதும் ஊறவைக்கவும்.

2. மறுநாள் காலை அதனை வடிகட்டி, வெறும் வயிற்றில் குடிக்கவும்.

3. சிறிது புளிப்பு சுவையை உணர்ந்தால் ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சைச் சாறை சேர்க்கவும், இது நன்மைகளை மேலும் அதிகரிக்கும்.

நசுக்கிய கொத்தமல்லித்தழை பானம்:

1. மல்லித்தழையை சுத்தமாக கழுவி நன்றாக அரைக்கவும்.
2. அதில் அரை கப் சுடுதண்ணீரை சேர்த்து, ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சைச் சாறு மற்றும் தேன் சேர்க்கவும்.

3. தினமும் காலை வெறும் வயிற்றில் இந்த பானத்தை குடிக்கவும்.