சிறப்புக் களம்

கட்டுப்பாடுகளை விதிக்கும் அரபு நாடுகள்; வேலையின்றி தவிக்கும் இந்தியர்கள்- தீர்வுதான் என்ன?

கட்டுப்பாடுகளை விதிக்கும் அரபு நாடுகள்; வேலையின்றி தவிக்கும் இந்தியர்கள்- தீர்வுதான் என்ன?

கலிலுல்லா

கொரோனா கட்டுப்பாடுகளால், வளைகுடா நாடுகளில் பணிபுரியும் ஏராளமான இந்தியர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்குத் தீர்வு காண வேண்டும் எனக் கேரள மாநிலங்களவை உறுப்பினர் ஸ்ரேயம்ஸ் குமார் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில் வளைகுடா நாடுகளில் பணிபுரியும் இந்தியர்கள் சந்திக்கும் சவால்களை பார்ப்போம்.

2019 ஆம் ஆண்டு கணக்குப்படி சுமார் 85 லட்சம் இந்தியர்கள் வளைகுடா நாடுகளில் பணிபுரிகிறார்கள், இவர்களால் அந்நிய செலாவணியாகப் பல பில்லியன் டாலர் வருமானம் இந்தியாவுக்குக் கிடைக்கிறது. 2018 ஆம் ஆண்டின் புள்ளிவிவரங்களின் படி சவூதி அரேபியா நாட்டில் மட்டும், 27 லட்சம் இந்தியர்கள் வேலைசெய்கிறார்கள் அவர்களால் இந்தியாவிற்கு ஆண்டுதோறும் 13 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அந்நிய செலாவணியாகக் கிடைக்கிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த எண்ணிக்கை 33 லட்சம் இந்தியர்களும், 14 பில்லியன் அமெரிக்க டாலரும் என்கின்றன தரவுகள்.

இப்படி பல்லாயிரம் இந்தியக் குடும்பங்களின் வாழ்வாதாரமாக இருக்கிறது வளைகுடா நாடுகளின் வேலைவாய்ப்புகள். குறிப்பாகத் தென் இந்தியாவிலிருந்து பலர் வளைகுடா நாடுகளுக்கு வேலைக்குச் செல்கிறார்கள். கொரோனாவின் தாக்கம் தொடங்கிய போது வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியர்களைத் திரும்ப அழைத்து வருவதில் பெரும் சிக்கல் நிலவியது. தடைகளை மீறி இந்தியா வந்தவர்கள் மீண்டும் வாழ்வுக்காக, வேலைக்காக வெளிநாடுகளுக்குத் திரும்ப எத்தனிக்கையில் அந்த கதவுகள் மூடப்பட்டிருக்கின்றன.

வளைகுடா நாடுகள் விதித்துள்ள நுழைவுக் கட்டுப்பாடுகள் மற்றும் கத்தார் தவிர மற்ற நாடுகளுக்கு இருக்கும் விமானச் சேவை தடை காரணமாக அங்கு பணிபுரியும் ஏராளமான இந்தியர்கள் வேலையை இழக்கும் அபாயத்தில் உள்ளனர். இதுகுறித்து கேரளாவைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் ஸ்ரேயம்ஸ் குமார், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், இது தீவிரமான பிரச்னை என்றும், வெளிநாடுகளில் வேலை பார்க்கும் இந்தியர்களின் கடின உழைப்பு இந்தியாவின் அந்நிய செலாவணிக்கும் பெரும் பலம் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். வெளிநாடுகளில் வேலைபார்க்கும் இந்தியர்களின் மதிப்பை உணர்ந்து அரசு உடனடியாக இந்த பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இவர்களின் வேலையிழப்பு கேரளா போன்ற மாநிலங்களில் பெரிய அளவில் சமூக, பொருளாதார பாதிப்புகளை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதாகவும் ஸ்ரேயம்ஸ் குமார் தன் கடிதத்தில் கூறியுள்ளார்.

மேலும், கடிதத்திற்கு வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பதிலளித்திருப்பதாகவும், அதில் வளைகுடா நாடுகளிடம் பேசி இப்பிரச்சினைக்குத் தீர்வு காண முயற்சி மேற்கொள்வதாக உறுதியளித்துள்ளதாகவும் எம்.பி ஸ்ரேயாம்ஸ் குமார் தெரிவித்துள்ளார்

2019 ஆம் ஆண்டு கணக்குப்படி சுமார் 85 லட்சம் இந்தியர்கள் வளைகுடா நாடுகளில் பணிபுரிகிறார்கள், இவர்களால் அந்நிய செலாவணியாகப் பல பில்லியன் டாலர் வருமானம் இந்தியாவுக்குக் கிடைக்கிறது. 2018 ஆம் ஆண்டின் புள்ளிவிவரங்களின் படி சவூதி அரேபியா நாட்டில் மட்டும், 27 லட்சம் இந்தியர்கள் வேலைசெய்கிறார்கள் அவர்களால் இந்தியாவிற்கு ஆண்டுதோறும் 13 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அந்நிய செலாவணியாகக் கிடைக்கிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த எண்ணிக்கை 33 லட்சம் இந்தியர்களும், 14 பில்லியன் அமெரிக்க டாலரும் என்கின்றன தரவுகள்.

வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியர்களைத் திரும்ப அழைத்து வருவதில் பெரும் சிக்கல் நிலவியது. தடைகளை மீறி இந்தியா வந்தவர்கள் மீண்டும் வாழ்வுக்காக, வேலைக்காக வெளிநாடுகளுக்குத் திரும்ப எத்தனிக்கையில் அந்த கதவுகள் மூடப்பட்டிருக்கின்றன

வளைகுடா நாடுகளில் எந்தெந்த மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்கள் அதிக அளவில் உள்ளனர்? அவர்கள் எந்த மாதிரியான வேலைகளில் ஈடுபடுகிறார்கள்?

அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு இந்தியர்கள் வேலைக்கு சென்றாலும் கூட, வளைகுடா நாடுகளுக்குத்தான் அதிக எண்ணிக்கையில் இளைஞர்கள் வேலைக்கு செல்கிறார்கள். குறிப்பாக, ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, கத்தார், குவைத், ஓமன், பக்ரைன் உள்ளிட்ட நாடுகளுக்கு இந்தியர்கள் அதிக அளவில் வேலைக்கு செல்கிறார்கள். இந்தியாவைப்பொறுத்தவரை எந்த மாநிலத்தவர்கள் அதிக அளவில் வேலைக்கு செல்கிறார்கள் என்றால் அதில் கேரளா முதலிடத்தில் உள்ளது. சொல்லப்போனால், கேரளாவில் 4ல் ஒருவர் வளைகுடா நாட்டில் வேலைக்கு செல்கிறார்கள். கேரளாவைத்தொடர்ந்து, அடுத்த இடத்தில் தமிழ்நாடு, தொடர்ந்து ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்கள் இடம்பெற்றுள்ளன. தென்மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தான் அதிக எண்ணிக்கையில் வளைகுடா நாடுகளுக்கு செல்கின்றனர்.

என்னென்ன வேலை செய்கிறார்கள்?

மருத்துவர், செவிலியர், பொறியாளர், நிர்வாகி உள்ளிட்ட உயர்மட்ட வேலைகளுக்கு செல்கிறார்கள். ஓட்டுநர், தொழில்நுட்ப உதவியாளர், சமையற்கலைஞர் உள்ளிட்ட இடைமட்ட வேலைகளையும் செய்கிறார்கள். தவிர, கட்டிட வேலை, கடை, வீட்டு பணியாளர்களாகவும் இருக்கிறார்கள். படிப்புக்கு தகுந்த வேலைக்கு செல்கிறார்கள்.

அந்நிய செலாவணி

அந்நிய செலாவணியை பொறுத்தவரை 2019ம் ஆண்டு 61 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. கொரோனா உச்சம் தொட்டபிறகு 2020ம் ஆண்டு 47 லட்சம் கோடியாக அந்திய செலாவணி குறைந்துவிட்டது. கிட்டத்தட்ட 14 லட்சம் கோடி அளவுக்கு குறைந்துவிட்டது என்பதை பார்க்க முடிகிறது. கொரோனா ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை இதை கொண்டு நம்மால் புரிந்துகொள்ள முடியும். இது மட்டுமில்லாமல், வளைகுடா நாடுகளில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள், வேலை இழப்புகள் காரணமாக அந்நிய செலாவணி குறைந்துள்ளது என்பதை பார்க்க முடிகிறது.

இது குறித்து அரபு நாட்டில் பணிபுரிந்தவரான ஜஹாங்கிர் பேசுகையில், ''அந்தந்த நாடுகள், தன்னுடைய சொந்த நாட்டு மக்களுக்கு வேலைவாய்ப்பை கொடுக்க வேண்டும் என்ற காரணத்தினால் சட்டங்களை மாற்றி அமைத்துள்ளனர். பெண்கள் டிரைவிங் செய்ய ஆரம்பித்துவிட்டனர். ஹவுஸ் டிரைவர்களுக்கு வேலையில்லாத சூழல் ஏற்பட்டுவிட்டது. அங்கிருக்கும் கடைகளுக்கான லைசன்ஸ் அரேபியர்களிடம் இருந்தாலும், நம்மவர்கள் முதலீடு செய்து கடைகளை நடத்திக்கொண்டிருந்தார்கள். அந்த கடைகளில் நேரடியாக அரேபியர்கள் தான் இருக்கவேண்டும் என்ற புதிய விதியை அமல்படுத்திவிட்டார்கள்.

அதேபோல நிறுவனங்களில் 10 பேருக்கு 1 நபர் அரேபியராக இருந்தால் போதும் என்ற நிலை இருந்தது. ஆனால், இன்று 10பேருக்கு 6 பேர் அரேபியராக இருக்கவேண்டும் என்று சட்டங்களை மாற்றிவிட்டார்கள். நாட்டை முன்னேற்ற வேண்டும் என்ற ரீதியில் அவர்கள் மாற்றிவிட்டார்கள். இந்தியாவை பொறுத்தவரை, இங்கேயே வேலைவாய்ப்புகளை கொடுத்துவிட்டால், வெளிநாடுகளுக்கு செல்வதற்கான தேவை எழப்போவதில்லை. வெளிநாடுகளுக்கு சென்று பொருளாதாரத்தை தேடுவதை விட, உள்நாட்டிலேயே அதற்கான வாய்ப்புகளை இந்திய அரசு ஏற்படுத்தி தந்தால், வெளிநாட்டுகளில் இருக்கும் தொழிலாளர்களின் பிரச்னைகள் தீரும்'' என்று அவர் தெரிவிக்கிறார்.

வளைகுடா நாடுகளை தேர்வு செய்ய என்ன காரணம்?

மேலும் அவர் பேசுகையில், ''வளைகுடா நாடுகளை தேர்வு செய்ய முக்கிய காரணம் படிப்பறிவின்மை தான். ஐடி முடித்தவர்கள் அமெரிக்கா, லண்டன், கனடா என்று சென்றுவிடுகிறார்கள். அரபு நாடுகளுக்கு செல்பவர்கள் யாரும் படிப்பறிவு இல்லாதவர்களாகத்தான் இருக்கிறார்கள். அரபு நாடுகளில் தோட்ட வேலை என்று கூறிவிட்டு, பாலைவனத்தில் ஒட்டகத்தை மேய்க்கும் வகையான மிகவும் கடுமையான வேலைகளை செய்துவருகிறார்கள். இதுபோன்ற வேலைகளில் அந்தந்த நாட்டு மக்களை அவர்கள் பணியமர்த்துவதில்லை. அலுவலகம், கடைகள் போன்ற வேலைகளில் தான் அந்தந்த நாட்டு மக்கள் பணியமர்த்தப்படுகிறார்கள். நம்மவர்களும் அங்கே சென்று இதுபோன்ற வேலைகளில் கஷ்டபட்டுக்கொண்டிருக்கிறார்கள்'' என்கிறார் ஜஹாங்கிர்.