சிறப்புக் களம்

களைகட்டும் கன்னியாக்குமரி இடைத்தேர்தல்: வெற்றி வாய்ப்பு யாருக்கு? - ஓர் அலசல்

களைகட்டும் கன்னியாக்குமரி இடைத்தேர்தல்: வெற்றி வாய்ப்பு யாருக்கு? - ஓர் அலசல்

webteam

வரும் ஏப்ரல் 6ஆம் தேதி தமிழக சட்டப்பேரவைத் தேர்தலோடு, கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. கன்னியாக்குமரி மக்களவைத் தொகுதியை பொறுத்தவரை கடந்த 2009, 2014, 2019 ஆகிய ஆண்டுகளில் தேர்தல் நடைப்பெற்றது.

இதில் பாஜக சார்பில் மூன்று முறையும் பொன்.ராதாகிருஷ்ணனே வேட்பாளராக களமிறக்கப்பட்டார். இதில் ஒரு முறை மட்டும் அவர் பெற்றார். 2009 ஆம் ஆண்டு முதல்முறையாக கன்னியாக்குமரி மக்களவைத் தொகுதியில் 22 வேட்பாளர்கள் போட்டியிட்டதில், திமுகவின், ஹெலன் டேவிட்சன், பாரதிய ஜனதா கட்சியின் பொன். இராதாகிருஷ்ணனை, 65,687 வாக்குகள் வேறுபாட்டில் தோற்கடித்தார். இதையடுத்து 2014ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வசந்தகுமார் போட்டியிட்டார். ஆனால் அதில், 1,28,662 வாக்குகள் வித்தியாசத்தில் வசந்தகுமாரை, பாஜகவின் பொன்.ராதாகிருஷ்ணன் தோற்கடித்தார்.

இதைத்தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் பொன்.ராதாகிருஷ்ணனை, வசந்தக்குமார், 2,59,933 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இந்நிலையில், 2019 மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற எச். வசந்தகுமார் கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28ஆம் தேதி உயிரிழந்தார். அதனால் அந்த தொகுதி காலியாக அறிவிக்கப்பட்ட நிலையில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி தமிழக சட்டப்பேரவைத் தேர்தலோடு, கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது.

கன்னியாக்குமரி மக்களவைத் தொகுதியை பொருத்தவரை கன்னியாக்குமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் கன்னியாக்குமரியிலும் நாகர்கோவிலிலும், பத்மநாபபுரத்திலும் திமுக சிட்டிங் எம்.எல்.ஏக்களை கொண்டுள்ளது. மற்ற குளச்சல், விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய இடங்களில் காங்கிரஸ் கட்சி சிட்டிங் எம்.எல்.ஏக்களை கொண்டுள்ளது.

தற்போதைய சட்டமன்ற தேர்தலிலும் கன்னியாக்குமரி, நாகர்கோவில், பத்மநாபபுரத்தில் சிட்டிங் எம்.எல்.ஏக்களை திமுக களம் காண வைக்கிறது. அதேபோல் குளச்சல், விளவங்கோடு, கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிகளில் காங்கிரஸ் சிட்டிங் எம்.எல்.ஏக்களை களம் காண வைக்கிறது. இதனால் மக்களவை தொகுதியை பொருத்தவரை பாஜகவுக்கு மிகுந்த நெருக்கடி இருக்க வாய்ப்பு இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

கன்னியாக்குமரி மக்களவைத் தொகுதி வேட்பாளர்களாக காங்கிரஸ் கட்சி சார்பில் மறைந்த ஹெச்.வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் களமிறங்கியுள்ளார். பாஜக சார்பில் மீண்டும் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். நாம் தமிழர், மநீம உள்பட 8 வேட்பாளர்கள் களத்தில் இருந்தாலும் காங்கிரஸ் பாஜக இடையேதான் நேரடி போட்டி நிலவுகிறது.

தந்தையின் வளர்ச்சித் திட்டங்களை குறிப்பிட்டு பரப்புரை செய்ய விஜய் வசந்த் திட்டமிட்டுள்ளார். அதேபோல், மத்திய அமைச்சராக இருந்தபோது செய்த சாதனைகளை குறிப்பிட்டு வாக்கு சேகரிக்கும் முயற்சியில் பொன்.ராதாகிருஷ்ணன் இறங்கியுள்ளார். இவ்வாறு இருக்க இதில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது தேர்தலின் முடிவில்தான் தெரியவரும்.