மண்ணை பொன்னாக்கும் வித்தையில் ‘விவசாயி’ ஒரு தெய்வீக மய்யம் என சொல்வதுண்டு. அப்படிப்பட்ட ஒரு விவசாயிக்கு இந்திய அரசு 2022-க்கான ‘பத்ம ஸ்ரீ’ விருதை கொடுத்து கவுரவித்துள்ளது. ‘அமை மகாலிங்க நாயக்’ என்ற பெயரை கேட்டாலே கர்நாடக மாநிலம் முழுவதும் பரவலாக பலருக்கும் தெரிகிறது. அதற்கு காரணம் விவசாயத்தின் மீது அவர் கொண்டிருக்கும் ஆர்வம்தான். ஓய்வறியாத அவரது உழைப்பை அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், வேளாண் விஞ்ஞானிகள் என பலரும் போற்றி பாராட்டி வருகின்றனர்.
யார் இவர்?
இவரை அதிசய மனிதன், அற்புத மனிதன், சுரங்க மனிதன் என பல்வேறு விதமான அடைமொழியுடன் அழைக்கின்றனர் உள்ளூர் மக்கள். 70 வயதான அவர் மங்களூருவிலிருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள அட்யநாடுகா என்ற பகுதிக்கு அருகே உள்ள கெபு (Kepu) என்ற கிராமத்தை சேர்ந்தவர். அவரது பெயரில் உள்ள ‘அமை’ என்பது அவரது குடும்பத்தின் பெயர். முறையான ஏட்டுக் கல்வியை பயிலாதவர். விவசாய தொழிலாளியாக தனது வாழ்க்கையை தொடங்கியுள்ளார். பாக்கு மற்றும் தென்னை மரம் ஏறுவதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார். பணியில் அவரது நேர்மையை பார்த்த அந்த பகுதியில் இருந்த மஹாபாலா பாட் என்ற நிலக்கிழார் மலைப்பகுதியிலிருந்த அவருக்கு சொந்தமான தரிசு நிலத்தை அமை மகாலிங்க நாயக்கிற்கு தானமாக கொடுத்துள்ளார். இது 1978-இல் நடந்துள்ளது.
தனது நிலத்தில் அமை மகாலிங்க நாயக்கிற்கு பாக்கு மரத்தை வளர்த்து பார்த்துவிட வேண்டுமென்ற ஆசை வந்துள்ளது. இருந்தாலும் தண்ணீர் இல்லாத அந்த நிலத்தில் அது சவாலான காரியமாக அமைந்துள்ளது. “எனது நிலம் மலைப்பகுதியில் இருந்ததால் அருகில் அமைந்துள்ள நிலங்களில் இருந்து பாசன வசதி பெறுவது சவாலான காரியம். அதனால் பழங்கால வழக்கப்படி சுரங்கம் வெட்டி அதன் மூலம் தண்ணீரை நிலத்திற்கு கொண்டு வருவது என திட்டமிட்டு அந்த பணியை தொடர்ந்தேன். அப்போது என்னை பார்த்து பலரும் கேலி செய்தனர்” என்கிறார் அமை மகாலிங்க நாயக்.
சுரங்கம் வெட்ட வேலையாட்களை நியமித்தால் செலவு அதிகம் என்பதாலும். அதற்கு பணம் இல்லாத காரணத்தாலும் தன்னிடமிருந்த தன்னம்பிக்கையை மூலதனமாக போட்டு தனி ஒருவராக தனக்கு நிலம் கிடைத்த அதே ஆண்டில் அவர் சுரங்கம் வெட்ட தொடங்கியுள்ளார். இருந்தாலும் பகல் நேரத்தில் மரம் ஏற சென்றுள்ளார். தனக்கு கிடைக்கும் ஓய்வு நேரத்தில் மட்டுமே சுரங்கம் வெட்டியுள்ளார். நாள் ஒன்றுக்கு ஆறு மணி நேரம் வீதம் அந்த பணியை செய்துள்ளார். இருட்டிவிட்டாலும் எண்ணெய் விளக்கின் வெளிச்சத்தில் பணியை தொடர்ந்ததாக சில பேட்டிகளில் சொல்லியுள்ளார் அவர்.
முதலில் 30 மீட்டர் ஆழம் வரை சுரங்கம் வெட்டியுள்ளார். பின்னர் அவரது மனது ஏதோ சொல்ல அந்த இடத்தை விட்டுவிட்டு வேறொரு இடத்தில் பணியை தொடங்கியுள்ளார். ஆனால் இரண்டாவது சுரங்கத்தில் 35 மீட்டர் வரை சென்றும் தண்ணீர் இல்லை. மூன்று மற்றும் நான்காவது முயற்சியும் வீணாகியுள்ளது. அதோடு அவரது நான்கு வருட கடின உழைப்பு வீண் போனது. ஐந்தவாது முயற்சியில் ஈரப்பதம் இருந்ததை உணர்ந்துள்ளார். அது அவருக்கு ஊக்கத்தை கொடுக்க ஆறாவது முயற்சியில் 315 அடியில் அவருக்கு நீர் கிடைத்துள்ளது. அதோடு தன் வீட்டு தேவைக்காக தனியே ஏழாவது சுரங்கம் ஒன்றும் அவர் வெட்டியுள்ளார்.
பின்னர் நிலத்தை சமன்படுத்தி, நீரை சேகரிக்க பல்லாயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தொட்டி ஒன்றை கட்டியுள்ளார். அதோடு மழை நீர் சேகரிப்பிலும் அவர் அசத்தலான முயற்சிகளை மேற்கொண்டுள்ளார் என வேளாண் விஞ்ஞானிகள் சொல்கின்றனர். தற்போது அவரது நிலத்தில் 300 பாக்கு மரம், 150 முந்திரி மரம், 75 தென்னை மரம் மற்றும் வாழை பயிர் மற்றும் ஊடு பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன. அவருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டது கூட தெரியாமல் அவர் நிலத்தில் வழக்கம்போல வேலை செய்து வந்துள்ளார். அவரை தொடர்பு கொண்ட பத்திரிகையாளர்கள் அது குறித்து சொன்ன போது ‘விருது கிடைத்ததில் மகிழ்ச்சி’ என சொல்லியுள்ளார். தற்போது அவரது நிலம் விவசாயிகள், வேளாண் விஞ்ஞானிகள் என பலருக்கும் பாடம் சொல்லி வருகிறது.